கருப்பு பூஞ்சை: அதிகரிக்கும் பாதிப்பு - நீரிழிவு உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

கருப்பு பூஞ்சை பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைய தொடங்கிய நிலையில் கருப்பு பூஞ்சை எனும் மியூகார்மைகோஸிஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை 28 மாநிலங்களில் 28,252 பேர் மியூகார்மைகோஸிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 86 சதவீதம் அதாவது 24,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 62.3 சதவீதம் பேர், அதாவது 17,601 பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது என இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய மாநிலங்களில் மகராஷ்டிராவில்தான் அதிகம் பேர், மியூகார்மைகோஸிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை 6,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத்தில் 5,486 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, டெல்லி, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்த தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜூன் ஆறாம் தேதி, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கென புதிய வழிகாட்டுதல் நெறிகளை இந்திய அரசு வெளியிட்டிருந்தது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் நிச்சயமாக அவர்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள உணவை பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

தமிழ்நாட்டில் இதுவரை 938 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஊடகங்களிடம் திங்கட்கிழமை தெரிவித்தார்.

இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 40-50 டோஸ் வரை மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கு இந்தியளவில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்திய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிலும் அந்த பற்றாக்குறை எதிரொலிப்பதாக பிபிசியிடம் பேசிய மாநில சுகாதாரத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகப்படியான மருந்துகள் தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

"நமது தேவை என்பது 35,000 வைரல்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே 30,000 வைரல்கள் வேண்டும் என மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்றிரவு வரை (ஞாயிற்றுக் கிழமை) 3840 மருந்து தமிழகத்திற்கு வந்துள்ளது. ஆனால் தேவை 35,000 என்பதை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்," என அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்தார்.

கருப்பு பூஞ்சை எவ்வாறு ஏற்படுகிறது?

மியூகார்மைகோஸிஸ் நீரிழிவு நோய் உள்ளவர்களையும், தீவிர கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டவர்களுக்கும் ஏற்படுகிறது என்று கூறப்பட்டாலும், கொரோனா பெருந்தொற்று அலைக்கு முன்னதாகவும் இந்தியாவில் இந்த தொற்று ஏற்பட்டு வருகிறது.

"கொரோனா வருவதற்கு முன்னரே இந்தியாவில் பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் மியூகார்மைகோஸிஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது," என்கிறார் நீரிழிவு நிபுணர் மருத்துவர் பாபு நாரயணன்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் எனவும் அவர் விளக்கினார்.

"ஒவ்வொரு நுண் கிருமிகளுக்கு எதிராக உடலில் ஒரு நோய் எதிர்ப்பு வழிமுறை உண்டு நீரிழிவு நோயால் ஒரு குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு வழிமுறை பாதிக்கப்படும். எனவே அம்மாதிரியான நோய் எதிர்ப்பு வழிமுறை பாதிப்புக்கு உள்ளாகும்போது இந்த பூஞ்சைகள் நமது உடலில் உள்ள செல்களில் எளிதாக நுழைவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது `ஹைபர் க்ளைசீமிய` அதாவது சக்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு பூஞ்சையை ஈர்க்கும் `ரிசப்டார்`கள் அதிகப்படியாக உருவாகும். சாதரண உடலில் இருப்பதை காட்டிலும் நீரிழிவு நோயாளிகளில் அது அதிகமாக இருக்கும்.

அதே போன்று நீரிழிவு நோயாளிகளுக்கு இரும்புச் சத்து அதிகரிக்கும்போது மியூகோர்மைகோஸிஸ் என்று சொல்லக்கூடிய பூஞ்சை தொற்று எளிதாக பரவுகிறது என்கிறார் அவர்.

இதை தவிர்த்து ரத்த புற்றுநோய் அல்லது கிமோ தெரபி எடுத்து கொள்பவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், உடம்பிலிருந்து அதிகப்படியான இரும்புச் சத்தை நீக்கும் சிகிச்சையான iron chealation therapy சிகிச்சை பெறுபவர்கள் போன்றவர்களுக்கும் மியூகார்மைகோஸிஸ் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்கிறார் மருத்துவர்.

கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான காரணம் என்ன?

"ஏற்கனவே நீரிழிவு நோயாளிகளுக்கு தொற்று தாக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு கூடுதலாக தீவிர கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஸ்டீராய்டுகள் பயன்படுத்தப்படுகிறது, இந்த ஸ்டீராய்டுகளின் பக்க விளைவுகளில் ஒன்று நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது.

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர். அதேபோன்று ஏற்கனவே மியூகார்மைகோஸிஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

பொதுவாகவே வைரஸ் தொற்று என்பது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். ஸ்டீராய்டுகள் மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. ஸ்டீராய்டுகளை பொறுத்தவரை நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது மட்டுமல்லாமல் சக்கரை அளவையும் அதிகரிக்கும். எனவே இது எல்லாம் சேர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களாக அமைகிறது," என்கிறார் மருத்துவர் பாபு நாராயணன்.

தொற்று வராமல் எவ்வாறு தடுக்கலாம்?

சக்கரை அளவை தடுப்பதே மியூகார்மைகோஸிஸை தடுப்பதற்கான முதன்மை வழி என்கிறார் அவர்.

மியூகார்மைகோஸிஸ்

பட மூலாதாரம், Getty Images

"இது அனைத்து நீரிழிவு நோயாளிகளுக்கும் வருவதில்லை ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத அளவில் சக்கரை அளவை கொண்டவர்கள்தான் இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்."

அதேபோல ஸ்டீராய்டு பயன்பாட்டிலும் அதீத கவனம் தேவை என்கிறார் அவர்.

"மருத்துவர்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும்தான் ஸ்டீராய்டை பரிந்துரைக்க வேண்டும். சிலர் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டுகளை பயன்படுத்துகின்றனர். அது தவறு." என்கிறார்.

"கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் ஸ்டீராய்டுகளை எந்த சமயத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைகள் இருக்கின்றன எனவே வழிகாட்டல் நெறிமுறைகள்படி ஸ்டீராய்டுகளை சரியான சமயத்தில் மருத்துவர்கள் பயன்படுத்த வேண்டும். அதேபோன்ற சரியான அளவில் குறிப்பிட்ட நாட்களில்தான் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்." என்கிறார் பாபு நாராயணன்.

அறிகுறிகள் என்னென்ன?

மியூகார்மைகோஸிஸை பொறுத்தவரை அதற்கான அறிகுறிகளை முன்னதாக கண்டறிவது மிகவும் அவசியம்.

"கோவிட் முடிந்த சமயத்தில் ஒரு கண் வீங்கியிருத்தல், கண்களிலிருந்து நீர் வருவது, மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர் விழிதல், இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மியூகார்மைகோஸிஸ் பாதிப்பு ஏற்படக்கூடிய அதிக வாய்ப்பு உள்ளவர்களுக்கு அதன் அறிகுறிகள் தென்பட தொடங்கும் சமயத்திலேயே மருத்துவர்கள் உடனடியாக அதை கண்டறிய வேண்டும்."

பொதுவானர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருங்கள் என்பதுதான்," என்கிறார் மருத்துவர் பாபு நாரயணன்.

இந்த மியூகார்மைகோஸிஸை சீக்கிரம் கண்டறிவது நல்லது. நாட்கள் கடந்தால் அதை குணமாக்குவது சிரமம் என்கிறார் அவர்.

"தமிழ்நாட்டை பொறுத்தவரை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் நோய் உள்ளவர்களை கவனமாக இருக்க அறிவிருத்தியுள்ளோம்," என்றார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் தொற்றுக்கான மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டாலும் இதற்கான மாற்று மருந்துகளையும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்று தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.

"மியூகார்மைகோஸிஸ்கான சர்வதேச பரிந்துரைகளையும் கவனமாக கடைப்பிடிக்குமாறி அறிவுறுத்தியுள்ளோம்," என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :