செங்கல்பட்டு தடுப்பூசி வளாக சர்ச்சை: தடங்கலை தகர்க்குமா தமிழக அரசு?

பட மூலாதாரம், HLL BIOTECH FB PAGE
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா தடுப்பூசி தேவைக்காக உலகளாவிய டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. அதேநேரம், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை தனியாருக்குக் கொடுக்கும் பணியில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைப் பயன்படுத்துவதில் என்ன சிக்கல்?
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைவதால், தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளிலும் ஐ.சி.யூ வார்டுகளிலும் இடம் கிடைக்காமல் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் களையும் வகையில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கூடுதல் படுக்கை வசதிகளை அமைக்கும் பணிகளை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.
தடுப்பூசிக்கு குளோபல் டெண்டர்
அதன் ஒருபகுதியாக சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு 500 படுக்கை வசதிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கான ஆக்சிஜனும் தொழிற்சாலையில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதால், அதனைத் தடுக்கும் முக்கிய கருவியாக தடுப்பூசி உள்ளதாகக் கூறி தீவிர பிரசாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. அதேநேரம், `18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்குப் போதிய தடுப்பூசி இல்லாததால் வெளியில் இருந்து வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது என தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
தமிழக அரசின் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தைத் தனியாருக்குக் கொடுக்கும் வேலைகள் நடைபெற்று வருவதை மருத்துவத் துறையினர் அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி வளாகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி வெரோனிகா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 17 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், `செங்கல்பட்டு எல்எல்எல் தடுப்பூசி வளாகத்தில் உற்பத்தியைத் தொடங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 21 கடைசி நாளாகும்' எனத் தெரிவித்தது.
அன்புமணியின் ஆதங்கம்

பட மூலாதாரம், ANBUMONY RAMADOSS
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், `செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அரசு கட்டமைப்பை தனியாரிடம் தாரை வார்ப்பது நியாயமற்றது.
நோயற்ற இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன், தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை செங்கல்பட்டில் அமைக்க 2004 -09 காலத்தில் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தீர்மானிக்கப்பட்டது. அதற்காக 594 கோடி ரூபாய் நிதியும் அப்போதே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான முக்கியக் காரணம் அரசுக்கு தேவையான தடுப்பூசிகளை இனி தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கக் கூடாது; மாறாக அரசே தடுப்பூசிகளை குறைந்த விலையில் அதிக தரத்துடன் தயாரிக்க வேண்டும் என்பதுதான். ஆனாலும், எனக்குப் பிறகு வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்கள் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டாததால் திட்டப்பணிகள் முடங்கின," என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தொடர்ந்து அந்த அறிக்கையில், ` ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்கா அமைப்பதற்கான பணிகளில் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டன. இன்னும் சில நூறு கோடிகள் முதலீடு செய்தால், அங்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் எனும் நிலையில், உடனடியாக தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; இல்லாவிட்டால் தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தேன்.
15 ஆண்டு ஏலம்

பட மூலாதாரம், TWITTER
ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாத நிலையில், தடுப்பூசி வளாகத்தை அமைத்த மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தனியார் நிறுவனங்களோ, பிற அரசுத்துறை நிறுவனங்களோ 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. இதற்கு மே 21 கடைசி நாள் எனும் நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காக தடுப்பூசி வளாகத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஏலத்தில் எடுக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் தனியாருக்கு வழங்கப்பட்டால், எந்த நோக்கத்திற்காக அது அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும்," என்கிறார்.
மேலும், `செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற யோசனையை தமிழக அரசு பரிசீலிக்கத் தயங்குவதும், தனியாரிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதும் ஏன் எனப் புரியவில்லை. தமிழ்நாடு அரசு தனியாரிடமிருந்து மூன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. இவற்றை ஜூலை மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் விநியோகிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட, இதற்காக குறைந்தது ரூ.1,500 கோடி செலவாகக் கூடும்.
இந்தத் தொகையைக் கொண்டு செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, தனியாரிடம் வாங்க திட்டமிட்டிருப்பதை விட பல மடங்கு தடுப்பூசிகளை தயாரித்து விட முடியும். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அரசிடம் தான் இருக்க வேண்டும். அது தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும்," என்கிறார்.
கருணாநிதி வைத்த கோரிக்கை

பட மூலாதாரம், DMK
``மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி பதவி வகித்த காலத்தில்தான், தமிழ்நாட்டில் 2 தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டன. அப்போது கருணாநிதி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் கட்டப்பட்டது. அங்கு 100 ஏக்கர் நிலமும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட வளாகம், மீண்டும் தனியார்வசம் செல்லக் கூடாது. இதனைத் தவிர்த்து தனியாருடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக அரசே ஏற்று நடத்தலாம்," என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.
அவரிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, ``செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் உற்பத்தியைத் தொடங்குவது தொடர்பாக, கடந்த 20.4.2021 அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்த வளாகம் இயங்காமல் உள்ளது. தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கொடுப்பதற்கான வேலைகள் நடக்கின்றன. `தடுப்பூசியை நாங்களே தயாரிப்போம்' என தமிழக முதல்வரும் கூறியிருக்கிறார். அதற்கான சிறந்த இடமாக ஹெச்எல்எல் பயோடெக் வளாகம் உள்ளது. டெண்டர் கோரினாலும் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுதான் மத்திய அரசு செயல்பட உள்ளது. கூட்டு ஒப்பந்தம் மூலம் தமிழக அரசே பணிகளை முன்னெடுக்கலாம்" என்கிறார்.
மாநில அரசே ஏற்று நடத்தலாம்
மேலும், ``பாரத் பயோடெக் நிறுவனம், தமிழக அரசுடன் கூட்டு ஒப்பந்தம் போட்டும் தடுப்பூசிகளைத் தயாரிக்கலாம். கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமல்லாமல், ஸ்புட்னிக், ஜான்சன் அண்ட் ஜான்சன், பைசர் என மேலும் சில தடுப்பூசிகள் வந்துள்ளன. அந்த நிறுவனங்களுடனும் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுத்தலாம். நமக்குத் தேவை தடுப்பூசிகள்தான். மத்திய அரசின் சேலம் உருக்காலையில் கொரோனா நோயாளிகளுக்காக 500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு என்னுடைய முயற்சியும் ஒரு காரணம். உருக்காலையில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் ஏன் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடாது. தனியாரிடம் இந்த வளாகத்தை ஒப்படைக்காமல் மாநில அரசே நடத்துவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்," என்கிறார்.
`செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் உற்பத்தியைத் தொடங்குவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா?' என மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். இவர் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். `` எந்தவிதச் சிக்கலும் இல்லை. அங்கே பணிபுரிவதற்காக 200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு பணிகள் எதுவும் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது சானிடைசர் உள்பட மருந்துப் பொருள்களைத் தரம் பார்க்கும் சாதாரண வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ரூ. 300 கோடி.. 3 மாதங்கள்

பட மூலாதாரம், Getty Images
அங்கு பணிபுரிய அமர்த்தப்பட்ட ஆராய்ச்சியாளர்களிடம் பேசும்போது, `300 கோடி ரூபாயும் 3 மாதங்களும் கொடுத்தால் போதும், தடுப்பூசி தயாரிக்கும் பணியைத் தொடங்கிவிடுவோம்' என்கின்றனர். தமிழக அரசு உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசியை கோருகிறது. இந்த டெண்டர் நம்மைக் கைவிட்டாலும், செங்கல்பட்டு வளாகம் கை கொடுக்கும்," என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ, செங்கல்பட்டு ஹெச்எல்எல் பயோடெக் வளாகத்தின் அருகில் மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டு `மெடிபார்க்' என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அங்கு மருந்து, மாத்திரை, மருந்து உபகரணங்கள் தயாரிப்பதுதான் ஒப்பந்தத்தின் நோக்கம். இது வெறும் ஒப்பந்த வடிவிலேயே உள்ளது. இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை மத்திய அரசுடன் தமிழக அரசு மேற்கொண்டு செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கலாம். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் கூறியுள்ளோம். தமிழக அரசு தற்போதைய அவசரத்துக்கு தடுப்பூசியை வாங்கிக் கொள்ளட்டும். அதேநேரம், பொருளாதாரீதியாக லாபம் ஈட்டுவதற்கு செங்கல்பட்டு வளாகம் உதவி செய்யும்," என்கிறார்.
மகாராஷ்டிராவை பின்பற்றுவார்களா?
மேலும், `` இதனைக் குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழக அரசின் குளோபல் டெண்டரை பார்த்து யாரும் வரிசையில் நிற்கப் போவதில்லை. தமிழக அரசு கோரும் 3.5 கோடி தடுப்பூசிகள் என்பது பெரிய அளவில் கொள்முதல் செய்யப்பட வேண்டிய ஒன்று. அதனைப் பெறுவதற்கு கால அவகாசம் கொடுத்துள்ளனர். இதேபோல் மும்பை மாநகராட்சி நிர்வாகம், ஒரு கோடி தடுப்பூசிக்கான டெண்டரை கோரியது. நேற்று முன்தினம் இதற்கான தேதி முடிந்தும் யாரும் வரவில்லை. ஏற்கெனவே, உறுதி கொடுக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியை கொடுப்பதே தனியார் நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது. தற்போது மகாராஷ்ட்ரா அரசு, மத்திய அரசின் ஒப்புதலுடன் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகளைத் தொடங்கிவிட்டனர். இந்த வரிசையில் தடுப்பூசி வரும் என காத்திருக்காமல் செங்கல்பட்டு வளாகத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்" என்கிறார்.
இதுதொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தடுப்பூசி தொடர்பான பணிகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் செய்து வருகிறது. அவர்களிடம் கேளுங்கள்" என்றார். இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` குளோபல் டெண்டர் மூலம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. ஹெச்எல்எல் பயோடெக் வளாகம் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.
`செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை ஏற்று நடத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்குமா?' என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தற்போது கேரள அரசின் பதவியேற்பு நிகழ்வுக்காக வந்திருக்கிறேன். இதுதொடர்பாக பிறகு பேசுகிறேன்," என்றார்.
பிற செய்திகள்:
- இந்தியாவை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு தட்டுப்பாடு
- தந்தையின் உயிர் காக்க போராடிய ஒரு குடும்பத்தின் உருக்கமான கதை
- செவ்வாயில் இருந்து சீனாவின் சுரொங் ரோவர் அனுப்பிய முதல் படங்கள்
- கொரோனா சடலங்களுக்கு மத்தியில் சிகிச்சை: புதுச்சேரியில் என்ன நடக்கிறது?
- தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அதிகாரம் இனி ஆணையரிடம் - அரசு முடிவுக்கு என்ன காரணம்?
- The Family Man - Season 2 தமிழர்களுக்கு எதிரான வெப் சீரீஸ் தொடரா?
- சீமான்: "2024, 2026 தேர்தல்களிலும் தனித்தே போட்டி - எந்த சமரசமும் கிடையாது"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












