‘அசுரன்’, ‘காலா’ பட நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

பட மூலாதாரம், nithishveera6, Instagram
கொரோனா தொற்று காரணமாக திரையுலக கலைஞர்களின் அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 45.
தமிழில் 'வல்லரசு' படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் நித்திஷ் வீரா. கூத்துப்பட்டறை நடிகரான நித்திஷ், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2006ல் வெளியான 'புதுப்பேட்டை' படம் மூலம் பரவலாக அறியப்பட்டார்.
கேட்டரிங் மாணவரான நித்திஷ் நடிப்புத்துறையில் கொண்ட ஆர்வத்தில் அவரது உறவினரான இயக்குநர் மஹாராஜன் மூலமாக 'வல்லரசு' படத்தில் அறிமுகமானார். காவல்துறை குடும்பத்தை சேர்ந்த இவர் பின்பு கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு பயிற்சி பெற்றார்.
அதன்பிறகு 'வெண்ணிலா கபடி குழு', 'காலா', 'ராட்சசி', 'அசுரன்' ஆகிய படங்களில் இவரது நடிப்பும் கதாப்பாத்திரமும் பேசப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நித்திஷ் வீரா இன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்த நிலையில் சுவாசப்பிரச்சனை காரணமாக இறந்தார் என அவரது சகோதரர் சுரேஷ்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான மதுரையில் இன்று நடைபெற உள்ளது. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'லாபம்' படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அருண்ராஜா காமராஜா மனைவி மரணம்

பட மூலாதாரம், @Arunrajakamaraj, Twitter
மேலும், இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காரமராஜின் மனைவி சிந்துஜாவும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 38. அட்லி இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் நடிகராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜா. அதன்பிறகு, 'மான் கராத்தே', 'ரெமோ', 'மரகத நாணயம்', 'க/பெ ரணசிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநராக 'கனா' படம் மூலமாக அறிமுகமானார். 'பீட்சா', 'ஜிகிர்தண்டா', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் பல ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார். பாலிவுட் திரைப்படமான 'ஆர்டிகிள் 15' திரைப்படத்தின் ரீமேக்கை தமிழில் உதயநிதி ஸ்டாலினை வைத்து இவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி சிந்துஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது இறப்பிற்கு நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ், கதிர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத் தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இவரது இறப்பு குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது முகநூல் பத்தில், '20 வருடங்களுக்கும் மேலாக அருண்ராஜா காமராஜூம் அவரது மனைவி சிந்துவும் நல்ல நண்பர்களாக எனக்கு தெரியும். பல கடினமான சூழ்நிலைகளையும் அவர்கள் இருவரும் ஒன்றாக கடந்து வந்திருக்கிறார்கள். சிந்து இனிமேல் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அருண்ராஜாவுக்கு சிந்து மிகப்பெரிய பலம். அவருடைய குறும்புத்தனம், நிபந்தனையற்ற அன்பு, செல்லப்பிராணிகள் மீதான அன்பு இதெல்லாம் இனி இல்லை எனும் போது வருத்தமளிக்கறது.
இந்த கொரோனா காலத்தில் எல்லாரும் பாதுகாப்பாக இருங்கள். இந்த சவாலான காலத்தை அனைவரும் விரைவில் கடந்து வருவோம்' என தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், அருண்ராஜா காமராஜும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையில், அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
- 'காசாவில் இருந்து ஒரு வாரத்தில் 3,000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன' - இஸ்ரேல் ராணுவம்
- இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?
- “ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும்” – இஸ்ரேல் பிரதமர்
- செர்னோபில் அணு உலை அருகில் விளைந்த ஆப்பிளிலிருந்து தயாரித்த மதுபானம் பறிமுதல்
- இஸ்ரேல் - பாலத்தீன சண்டை: இந்தியா ஆதரிப்பது யாரை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












