கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கு கட்டளை மையம் (WAR ROOM): மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின்

பட மூலாதாரம், DMK

(பிபிசி நேயர்களுக்கு வணக்கம். தமிழகம், இந்தியா மற்றும் உலக நடப்புகள் குறித்த முக்கிய செய்திகள் இந்தப் பக்கத்தில் தொகுத்து வழங்கப்படும்.)

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸை எதிர்க்கும் நடவடிக்கையை மேற்பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள கட்டளை மையம் எனப்படும் வார் ரூமை நிறுவும்படி அதிகாரிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஆக வரும் 7ஆம் தேதி பதவியேற்விருக்கிறார் மு.க. ஸ்டாலின். இந்த நிலையில், பதவி ஏற்கும் முன்பே கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக அவரது யோசனைகளை கேட்டு அதன்படி மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பூசி திட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் -19 பரவலை தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன. மருத்துவ அவசரநிலை அளவுக்கு #கோவிட்-19 தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு ஆகியவற்றைத்தெரிந்து ஒருங்கிணைந்து செயல்பட இந்த மையம் உதவியாக இருக்கும். முன்களப்பணியாளர்களின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது.

மருத்துவ அவசர நிலைக்காலம் என்பதால் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்துவமனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்

கட்டணத்திலும், முடிந்தளவு சலுகை காட்டுமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும். உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல," என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக வரும் 7ஆம் தேதி பதவியேற்கிறார்

ரங்கசாமி

பட மூலாதாரம், The India Today Group

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட, ஆட்சியமைக்க உரிமை கோரும் கடித்ததைத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், ரங்கசாமி கடந்த 3ஆம் தேதி வழங்கினார்.

குறிப்பாக புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவராக இருந்த ரங்கசாமி, சட்டமன்ற தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று மாலை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ஜெயபால், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து வரும் மே 7ஆம் தேதி பிற்பகல் 1.20 மணியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக உள்ள ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்பதற்கான கடித்ததை வழங்கினார்.

மேலும் அன்றைய தினம் ரங்கசாமியுடன் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகை அல்லது புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடல் அருகே மிக எளிமையான முறையில் பதவியேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் தொடரும் ஆக்சிஜன் உற்பத்தி முன்னேற்பாடு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்குவதற்கு 7 நாட்களாகும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

அதனை தொடர்ந்து அந்த ஆலையில் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவினர் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தூத்துக்குடி மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை, தொழிற்சாலை பாதுகாப்பு துறை, மின்வாரிய ஆய்வாளர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும்?

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், "ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கிய பின்னர் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து மருத்துவத்திற்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 7 நாட்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.

ஸ்டாலின் அமைச்சரவை அழைப்பிதழ் வெளியீடு

ஸ்டாலின்

பட மூலாதாரம், TNDIPR

தமிழ்நாட்டில் வரும் 7ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 133 இடங்களில் திமுகவும் 26 இடங்களில் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.

இதையடுத்து சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரி லாலை அவரது மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய ஸ்டாலின், தன்னை திமுக சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றி தீர்மானம் இடம்பெற்ற கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் அடுத்த சில மணி நேரத்திலேயே ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்க வரும் அழைப்பை அனுப்பினார்.

இதன் பின்னர் ஸ்டாலின் பதவியேற்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து மு.க. ஸ்டாலினுடன் தமிழக அரசு உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதால், அந்த விழாவில் அதிகபட்சமாக 300 பேர் மட்டுமே பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. அதன் படம் வெளிவந்துள்ளதால் அதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :