தூக்கிப் போட்டு மிதித்தால்... கர்நாடக முகம் இருக்கு - அண்ணாமலை; தொட்டுப் பார் தம்பி - கனிமொழி

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
அந்தக் காணொளியில் பேசும் அண்ணாமலை, "செந்தில் பாலாஜியைத் தூக்கிப் போட்டு மிதித்தால் பல்லெல்லாம் வெளியே வந்துவிடும். உன்னை மாதிரி எவ்வளவு ஃப்ராடெல்லாம் பார்த்துவிட்டுவந்திருப்பேன். நீங்கள்ளாம் ஒரு ஆளுங்க.. நீங்கள்ளாம் ஒரு இது. உனக்கு பயந்து கைய வச்சா, அண்ணாமலை வயலன்ஸ் பன்றேன்னு மாத்துவியாம். இங்கிருக்கிற திமுக காரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை வச்சிட்டுப் போறேன். நான் வன்மத்தை (வன்முறையை) கையில் எடுப்பதற்குத் தயாராகக் கிடையாது. அகிம்சை வாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம். அதை இங்கே காட்டவேண்டாம்னு நினைக்கிறேன். வந்து வீடியோ எடுப்பியா. எடுத்துகிட்டுபோ. எலக்ஷன் கமிஷன்ல குடுப்பியா குடுத்துட்டுப் போ" என்று அவர் தேர்தல் பிரசாரத்தில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
இதனிடையே இந்தப் பேச்சு பதில் கொடுக்கும் வகையில் பிரசாரத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர், மகளிரணிச் செயலாளர் கனிமொழி, "எனக்கு இன்னொரு முகம் இருக்கு, செந்தில் பாலாஜியை அடிச்சிடுவேன் என்று... இப்படிப்படிப்பட்டவர்களெல்லாம்... நீ தொட்டுப் பாரு தம்பி. திமுக காரன் மேல கைய வச்சிப் பாரு.... உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது. மிரட்டினால், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள்" என்று பேசியுள்ளார்.
வைட்டமின் பா, பி, சி, ஏ, எல் எல்லாம் கரெக்டா வந்துரும்: ராஜேந்திர பாலாஜியின் வைரல் வீடியோ

பட மூலாதாரம், Facebook
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில்: நம்ம கூட புதுப்புது கூட்டணி எல்லாம் வருது. நம்ம கூட்டணி மெகா கூட்டணி. அற்புதமான கூட்டணி. இரட்டை இலை 50 ஆயிரம் ஓட்டில் ஜெயிக்கும் என்றேன். நீங்கள் 60 ஆயிரம் ஜெயிக்க வைப்போம் என்கிறீர்கள்.
என்னை ஜெயிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. நகரத்தில் 5 கமிட்டி இருந்தது. இப்போ 12 கமிட்டியா போட சொல்லியிருக்கேன். 12 கமிட்டி நிர்வாகிகள் தான் 10 பூத்து ஓட்டுகளை வாங்கி தருவீர்கள்.
அங்கே ராஜா, மந்திரி, சேனாதிபதி எல்லாம் நீங்கள்தான். பேசி முடிவு செய்ய வேண்டும், கூட்டணி கட்சி தலைவர்களையும் வைத்துக்கொள்ளுங்கள். மண்டல கமிட்டி எதையும் கண்ட்ரோலாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் கிராமத்தில் வேலை செய்யப்போகிறேன்.
அடுத்து வைட்டமின் பா, பி, சி, ஏ, எல் எல்லாம் கரெக்டா வந்துடும். இப்படி பகிரங்கமாக பேசிய 45 நிமிட வீடியோ உரையாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
புதுவை அமித்ஷா பிரசாரத்தில் ஸ்லாப் உடைந்து 4 பெண்கள் காயம்

புதுச்சேரியில் அமித்ஷா பிரசாரப் பேரணியின் போது, நெரிசல் காரணமாக நான்கு பெண்கள் சிலாப் உடைந்து கால்வாயில் விழுந்தனர்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சாலை பிரச்சாரம் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் லாஸ்பேட்டை, காலாபட்டு, மற்றும் காமராஜர் நகர் ஆகிய தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார் அமித்ஷா. புதுச்சேரி விமான நிலையம் அருகே தொடங்கிய இந்த சாலை பயணப் பிரச்சாரம், 2 கிமீ சாலை மார்க்கமாக மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே பிரசாரப் பயணம் தொடங்கிய போது, கூட்ட நெரிசலும் அதிக அளவில் காணப்பட்டது. இதில், அமித்ஷா வாகன பிரசாரத்தைக் காண வந்த மக்கள் சிலர் கூட்ட நெரிசல் காரணமாக சாலையோரத்திலிருந்த சாக்கடை கால்வாய் மீது ஏறி நின்றனர். இதனால் அந்த கான்கிரீட் ஸ்லாப் கனம் தாங்காமல் உடைந்தது. இதில் நான்கு பெண்கள் எதிர்பாராத விதமாக அந்த கால்வாய்க்குள் விழுந்து காயமடைந்தனர். கால்வாயில் உள்ளே விழுந்த பெண்களை அருகே இருந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் படுகாயமடைந்தார், சிலருக்கு உடலில் சிறாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
கடைமீது கல் வீசியது ஒரு சின்ன சம்பவம்: வானதி

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோவை பயணத்தின்போது, பாஜகவினர், இந்து முன்னணியினர் மேற்கொண்ட பேரணியில் பங்கேற்ற சிலர் கடையின் மீது கல் வீசித் தாக்கி மூடச் சொன்ன நிகழ்வு விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், 'கோவையில் உத்தரபிரதேச முதல்வர் வந்தபோது நடந்த பேரணியில் எந்தவிதமான பதற்றமும் ஏற்படவில்லை. இரு தரப்பினரும் கோஷங்கள் எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு சிறிய சம்பவம் தான். இதற்கு யார் மூல காரணம் என காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அப்துல் வகாப், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த கு.ராமகிருஷ்ணன், பாசிச எதிர்ப்பு இயக்கம் மற்றும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தங்களது கண்டனங்களை பாஜகவிற்கு எதிராக பதிவு செய்து வருகின்றன.
வேட்டியுடன் மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்த நரேந்திர மோதி

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி வேட்டி, சட்டையுடன் வந்து தரிசனம் செய்தார். மதுரை பாண்டிகோவில் அம்மாதிடலில் நடக்கவுள்ள தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோதி பேசுகிறார். இதற்காக விமானம் மூலமாக மதுரை வந்த பிரதமர் மோதி மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் அறங்காவலர் கருமுத்துகண்ணன் பிரதமரை வரவேற்றார்.
கோவிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்து கோவில் வளாகங்களில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டார். பிரதமரின் வருகையை ஒட்டி கோவிலுக்குள் மாலை 7 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விமானம் நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












