காவிரி டெல்டா சிக்கல்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? மீத்தேன், ஹைட்ரோ கார்பன் சிக்கல்களின் பின்னணி என்ன?

தஞ்சாவூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தஞ்சாவூர்
    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

தஞ்சாவூரை மையமாக கொண்டு வேர் கொண்டு செழித்த காவிரிப் பாயும் நிலவியலின் அரசியல், பண்பாடு பொருளியல் ஆகியவை திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் வரை பரவிச் செல்வது உண்மைதான்.

ஆனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்கள் மட்டுமே இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றிலும் மயிலாடுதுறை சில மாதங்கள் முன்புதான் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதிய மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

தஞ்சாவூரும், அதை மையமாகக் கொண்டு செழித்த பிற்கால சோழர் பேரரசும், அந்த பேரரசு விட்டுச் சென்ற சமூக, பண்பாட்டு, சமய மரபுகளும் காவிரி பாயும் இந்நிலப் பகுதியை பழங்காலத்தில் இருந்தே தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் நில அமைப்பில் மட்டுமல்ல அரசியலிலும், பண்பாட்டிலும் இன்றும் இதயம் போன்று அமைந்திருக்கிறது காவிரிப் படுகை வட்டாரம்.

ஆனால், பொன்னி நதி பாய்ந்து வளம் கொழிக்கும் நிலம், சோழ நாடு சோறுடைத்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றெல்லாம் புகழப்படும் இந்த வட்டாரம், செல்வச் செழிப்பில் மின்னக்கூடியது என்ற கற்பனை ஏற்படுவது இயற்கையே.

பசுமைப் பகுதியில் வறுமை

ஆனால், தமிழ்நாட்டின் 10 ஏழ்மையான மாவட்டங்களின் பட்டியலில் இந்த டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் இடம் பெறுகின்றன.

பன்முக ஏழ்மைக் குறியீட்டின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட அதிக வறுமை நிலவும் 10 மாவட்டங்களின் பட்டியலில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய இந்த மூன்று மாவட்டங்களுமே இடம் பெற்றிருப்பதை காட்டுகிறது தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை 2017.

தலா நபர் வருமானத்தின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் அப்போதைய 32 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டம் 30-வது இடத்திலும், நாகப்பட்டினம் 27வது இடத்திலும், தஞ்சாவூர் 23-வது இடத்திலும் இடம் பெற்றிருந்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த மாவட்டங்கள் வளமையானவை என்ற பிம்பத்துக்கு மாற்றான சித்திரத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஒரு காலத்தில் நீர் வளம், நில வளம் மிகுந்து இருந்த நிலையில் வேளாண்மை தாண்டி வேறு தொழில்களில் கவனம் செலுத்தாமல் விட்டதால் காலப்போக்கில் இந்த பின்தங்கிய நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இன்றும் வேளாண்மை தவிர நவீன தொழில்துறை எதுவும் இங்கே வளரவில்லை என்பது மட்டுமல்ல, அந்த வேளாண்மையும் கூட ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதாக சமூக நோக்கர்கள் கவலை கொள்கிறார்கள். காவிரி நீர் வரத்து குறைந்துவிட்டதும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற சுற்றுச்சூழலை, நிலவளத்தை சிதைக்கும் திட்டங்களும் வேளாண்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பதாக கவலைப்படுகிறார்கள் செயற்பாட்டாளர்கள்.

நெல் வயல்

பட மூலாதாரம், Getty Images

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் நிச்சயமாக விவசாயத்தைப் பாதிக்கும் என்று கூறுகிறார் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பாரதிதம்பி. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர், திருப்பூர் பின்னலாடைத் தொழில் நிறுவனங்கள், திருவாரூருக்கு இடம் பெயர்கிற திட்டம் ஒன்று உள்ளது என்கிறார். கடலுக்கு அருகே இருப்பதால் சாயக்கழிவு போன்றவற்றை வெளியேற்றுவது எளிதாக இருக்கும் என்பதாலும், ஏராளமான மனித வளம் கிடைப்பதாலும் இந்த பகுதியின் மீது அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு உள்ளது என்கிறார் அவர்.

பெருமளவில் நடைபெறும் நெல் விவசாயத்துக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் ஓரளவு லாபம் தரக்கூடிய தொழிலாக உருவெடுத்திருந்தது. ஆனால், கஜா புயல் இந்த டெல்டா மாவட்டங்களில் வளம் கொழித்துவந்த தென்னை பொருளாதாரத்தை அடியோடு சாய்த்துவிட்டது என்கிறார் பாரதி தம்பி. கஜா புயல் மீட்புப் பணியில் நிலவிய தொய்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. உள்ளாட்சி அமைப்புகள் இருந்திருந்தால் இந்தப் பணிகள் இன்னும் சற்று மேம்பட்ட நிலையில் நடந்திருக்கும் என்கிறார் பாரதி தம்பி.

பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற வட்டங்களில் இருந்து பெருமளவில் மக்கள் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வதுதான் ஓரளவு இந்தப் பகுதியில் விவசாயத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், காவிரி வறண்ட சூழ்நிலையில் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்துக்கு மாறுவதற்கும் விவசாயிகளுக்கு உதவியதாக கூறுகிறார் இவர்.

நாகப்பட்டித்தில் குடிசைகள் அதிகம் ஏன்?

தமிழ்நாட்டின் பெரும்பாலான பிற மாவட்டங்களைப் போல அல்லாமல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிறைய குடிசை வீடுகள் இருக்கின்றன. ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாட்டிலேயே அதிக குடிசைகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதாக ஓர் அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார் என்று கூறுகிறார் பத்திரிகையாளர் கவின் மலர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர், அங்கே சாலை போன்ற உள் கட்டமைப்பு வசதிகளும், மருத்துவம், கல்வி போன்ற சேவைத் துறைகளும் மிகவும் பின் தங்கிய நிலைமையில் இருக்கின்றன என்கிறார். இந்த பின்தங்கிய நிலைமைகளுக்கான காரணம் என்ன என்று கேட்டபோது,

காவிரி டெல்டா பகுதி

"வயல்களும், பண்ணையார்களும் நிரம்பிய மாவட்டம் என்பதால், அவர்கள் அனுமதித்த வழிகளில் மட்டுமே சாலைகள் போடப்பட்டன. குறுகிய, வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளே இங்கு கிடைத்தன. மாவட்டத்தில் ஒரே ஒரு பெண்கள் கல்லூரி மட்டுமே இருந்தது. ரயில்வசதியும் அதிகம் இல்லை. சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்ல ஒரே ஒரு ரயில் மட்டுமே உண்டு. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி வரும் வரையில் மிகக் குறைவான வசதிகள் உடைய, அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக நோயாளிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே இறந்து போன சம்பவங்கள் நிறைய உண்டு" என்கிறார் கவின் மலர்.

"கடைமடை மாவட்டமாக இருப்பதால், பாசன வசதி குறைவு. இப்படி ஒருபுறம் பாசனப் பற்றாக்குறை என்றால், மறுபுறம், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வீசும் கடும் புயல்களில், வெள்ளத்தில் வீடிழந்து மீண்டும் மீண்டும் வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்து கட்டமைக்கும் ஏழைகள் அதிகம் உள்ள மாவட்டம் இது என்பதும் பின்தங்கிய நிலைமைக்கு காரணம்" என்கிறார் கவின் மலர்.

கஜா போன்ற பெரும் புயல், வெள்ளங்களின்போது வீடுகள் முற்றிலும் தரைமட்டமாவதற்குக் காரணம் அவை மண் சுவர் எழுப்பி, கூரை வேய்ந்து கட்டப்படுவதே என்கிறார் அவர். நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் மட்டும் நாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடும் அவர், இன்னும் பணிகள் தொடங்கவில்லை என்கிறார்.

வேளாண் பாதுகாப்பு மண்டலம்

ஒருபுறம் பின் தங்கிய பொருளாதாரம். மறுபுறம் பெரும் சூழலியல், வாழ்வியல் சீரழிவுகளை ஏற்படுத்தும் என்று செயற்பாட்டாளர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுப்புத் திட்டங்கள். இதற்கிடையில்தான் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தப் பிரச்சனை சட்டமன்றத் தேர்தலில் எப்படி எதிரொலிக்கும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமனிடம் கேட்டோம். 21.02.2020 அன்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு. இந்த சட்டத்தைக் கொண்டுவராமல் இருந்திருந்தால் அதிமுக எடப்பாடி அரசுக்கு விரோதமாக இருந்திருக்கும். இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது கொஞ்சம் அந்த எதிர்ப்பை மாற்றியமைத்திருக்கிறது. மற்ற காரணிகள் எப்படி இருக்கும் என்பது வேறு என்றார் ஜெயராமன்.

காவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலமாக மாறுமா? - சந்தேகம் எழுப்பும் செயற்பாட்டாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்த சட்டத்தால் அவர்கள் குறிப்பிடும் ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டதா என்று கேட்டபோது, இல்லை என்று மறுக்கிறார் அவர்.

"5 சுற்று ஹைட்ரோ கார்பன் ஏலத்தில், சுமார் 11,500 ச.கி.மீ. பரப்பில் நிலத்திலும், ஆழமற்ற கடற்பகுதியிலும், ஆழ்கடலிலும் ஏலம் விட்டிருக்கிறார்கள். இதில் நிலப்பகுதி பற்றி மட்டும்தான் எல்லோரும் பேசுகிறார்கள். தமிழ்நாடு அரசும் தனக்கு அதைத் தடுக்கும் சக்தி இல்லை என்று கருதுது. இந்த சட்டத்தின்படி புதிதாக திட்டங்கள் கொண்டுவருவதை தடை செய்கிறது இந்தச் சட்டம். புதிய திட்டங்களைத்தான் இந்த சட்டம் அனுமதிக்கவில்லை. பழைய திட்டங்கள் தொடரும். பழைய திட்டங்களைத்தானே எதிர்த்துப் போராடினோம். புதிய திட்டங்கள் தடை செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. ஆனால், பழைய திட்டங்களைத் தடுக்காவிட்டால் வேளாண் மண்டலம் என்று சொல்வது பொருளில்லாமல் போகும்.

பழைய வளாகங்களில் புதிய கிணறுகளை அமைத்தல் என்ற புதிய உத்தியைக் கையாள்கிறது ஓ.என்.ஜி.சி. எனவே எந்தப் பிடிமானமும் இல்லாமல் போராடிக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த சட்டம் சின்ன தொடக்கப்புள்ளியைத் தந்திருக்கிறது. அதே நேரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கும், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் சில வட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது சட்டம். ஆனால், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் போன்ற பகுதிகளை இதற்குள் கொண்டுவரவேண்டும். கடலூர் மாவட்டம் முழுமையாக கொண்டுவரப்படவேண்டும். காரைக்கால் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் அதையும் பாதுகாக்கவேண்டிய தேவை இருக்கிறது" என்றார் ஜெயராமன்.

'காவிரிப் படுகை நாசமாகும்'

காவிரிப்படுகை முழுவதும், புதிய திட்டங்களும் வராது. பழைய கிணறுகளும் நிரந்தரமாக மூடப்படும் என்ற வாக்குறுதியை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்துவதோடு, இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகளும் திரும்ப பெறப்படவேண்டும் என்பதையும் அரசிடமும், கட்சிகளிடமும் கோரிக்கையாக வைப்பதாகத் தெரிவித்தார் பேராசிரியர் ஜெயராமன்.

சூழலுக்கு கேடு விளைவிக்காத தொழில்களை அறிமுகம் செய்து பொருளாதார ரீதியாக இந்தப் பகுதியை முன்னேற்றுவது குறித்து அவரது பார்வையைக் கேட்டபோது, உணவு என்பது மனிதனின் தலையாய தேவை என்றும், இயற்கையே ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வோர் இயல்பை வழங்கியிருக்கிறது என்றும், எனவே இந்த காவிரி டெல்டா வேளாண் பகுதியாகவே நீடிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார் அவர்.

கோப்புப்படம்

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கேட்டபோது, ஒரு கிணற்றில் ஒரு வாரத்துக்கோ 10 நாள்களுக்கோ நீரியல் விரிசலை செயல்படுத்த 1 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும். வேதிக்கலவைகள் கலந்து விரிசலை செயல்படுத்திய பிறகு வெளியேற்றப்படும் அந்த நீர் வேளாண் பகுதிகளில் பாய்ந்து அதனை பயிர் செய்யப் பயனற்றதாக மாற்றிவிடும். இந்நிலையில் அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இருக்காது என்று கூறினார் ஜெயராமன்.

'தேவை வேளாண்மை சார்ந்த தொழில்களும், ஆராய்ச்சியும்'

காவிரி டெல்டா பகுதியில் குறைந்தது 2 ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடக்கிறது. இது இன்னும் பல காலம் நீடிக்கும் என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவரும் மன்னார்குடியைச் சேர்ந்தவருமான வி.சேதுராமன்.

நெல் விளைச்சலுக்கு ஏற்ற இந்த மண்ணில் வேறு பயிர்கள் அரிதாகவே வளர்கின்றன. பருத்தி கொஞ்சம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரிதாக வேறு பயிர்கள் விளைவதில்லை. ஆனால், காவிரிப் படுகையின் மாறுபட்ட நிலப்பரப்புகளும் வேளாண்மை சார்ந்தவையே. தலித்துகள், வன்னியர், முக்குலத்தோர், முத்தரையர் உள்ளிட்ட பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் முழுவதும் வேளாண்மையை சார்ந்திருப்பவர்களே. தமிழ்நாட்டின் நெல் விளைச்சலில் கணிசமான பகுதி காவிரி படுகையில் இருந்தே வருகிறது. எனவே, இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு வேளாண்மை சார்ந்த தொழில்களே தேவை என்கிறார் அவர்.

வேளாண்மை சார்ந்த தொழில்கள் என்று கூறும்போது ஒருபுறம் வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டி பதப்படுத்தும் தொழிற்சாலைகளைக் கொண்டுவரலாம். மறுபுறம், வேளாண்மைக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அது தொடர்பான ஆராய்ச்சி செய்து, புத்தாக்கம் செய்வதற்கான தொழிற்சாலைகளைக் கொண்டுவரலாம் என்கிறார் சேதுராமன்.

''தனியார் நிறுவனங்களுக்கு சலுகை, விவசாயிகளுக்கு கடன் மறுப்பு ஏன்?''

பட மூலாதாரம், Getty Images

எப்போது மீத்தேன் எடுக்கும் பிரச்சனை, ஓர் எரியும் பிரச்சனையாக உருவெடுத்தது என்று கேட்டபோது,

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அளிக்கப்பட்ட கச்சா எண்ணெய் எடுப்பதற்கான அனுமதி என்பது மரபு சார்ந்த முறையில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான அனுமதி.

மரபு சாரா எரிபொருள்களான ஷேல், மீத்தேன் ஆகியவை எடுப்பதற்கு அப்போது தனித்தனி கொள்கைகள் இருந்தன.

2014 ல் பதவியேற்ற மத்திய பாஜக அரசு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த NELP என்ற புதிய எண்ணெய் எடுப்பு கொள்கைக்கு பதிலாக HELP என்ற ஹைட்ரோகார்பன் எடுப்பு கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவந்தது..புதிய கொள்கையில் மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா என்ற இரண்டு முறைக்கும் (கச்சா எண்ணெய், ஷேல் மற்றும் மீத்தேன் உள்ளிட்ட அனைத்து வகை பொருளையும் எடுக்க) ஒற்றை அனுமதி (Single Licensing) வழங்க ஆவணச் செய்யப்பட்டது.

ஹைட்ரோ பிராக்கிங் எனும் நில மற்றும் நீர் வளத்தை பாதிக்கும் மரபு சாரா முறைக்கும் சேர்த்து அனுமதி வழங்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மாநில அரசு வேளாண் பாதுகாப்பு மண்டலம் கொண்டுவந்தது என்று விளக்கினார் சேதுராமன்.

இந்த 4 மாவட்டங்களிலும் சேர்த்து 20 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆனால், விரிந்த காவிரிப்படுகையை ஒட்டிய மாவட்டங்களின் தொகுதிகள் என்று கணக்கிட்டால் இந்தக் கணக்கு இருமடங்காகலாம். எண்ணிக்கையைத் தவிர்த்து, காவிரி டெல்டாவின் சிக்கல்கள் மீது, தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் ஆழமான கரிசனம் உண்டு என்பதால், காவிரிப்படுகை அரசியல் தமிழ்நாட்டின் அரசியல் மீது, அதன் எண்ணிக்கை வலுவுக்கும் கூடுதலான தாக்கத்தை செலுத்தும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: