சிறப்பு வேளாண் மண்டலம்: காவிரி டெல்டாவைப் பாதுகாக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றம்

காவிரி டெல்டா பகுதி

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட முன்வரைவு இன்று (வியாழக்கிழமை)தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படாததால் தி.மு.கவினர் வெளிநடப்புச் செய்தனர்.

News image

காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இந்த மசோதாவைத் தாக்கல் செய்வது தனக்குப் பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மசோதாவின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன.

அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும் கடலூர் மாவட்டத்திலிருந்து காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களும் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வருகின்றன.

இந்த மண்டலத்தில் அரசு புதிய பகுதிகளைச் சேர்க்கவோ, ஏற்கனவே உள்ள பகுதிகளை நீக்கவோ முடியும்.

காவிரி டெல்டா

இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப்பகுதிகளில் தொடங்க அனுமதி கிடையாது. சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தடைசெய்யப்பட்ட தொழில்களின் பட்டியலில் எதையாவது சேர்க்கவோ, நீக்கவோ அரசால் முடியும்.

இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பகுதிகளில் மேலே சொன்ன தொழில்களைத் துவங்கி நடத்தினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

துறைமுகம் , குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்பு, மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகள் இதன் கீழ் தடைசெய்யப்பட மாட்டாது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதிக்காது.

கோப்புப்படம்

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டு, முதலமைச்சர் தலைமையில் செயல்படும். இதில் முப்பது உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இப்பகுதியில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர்கள் அளிப்பார்கள்.

இந்தப் பகுதிகளில் நடக்கும் விவசாயமல்லாத சில பணிகள், பிராந்தியத்தின் விவசாயத்தை கடுமையாக பாதித்து, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால், "இந்தப் பிராந்தியத்தின் விவசாயத்தைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளைத் தடைசெய்ய" முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சட்டம் கூறுகிறது.

திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டிருப்பது ஏன்?

இந்த சட்டம் குறித்துப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டத்தை தாங்கள் வரவேற்பதாகவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியிலிருந்து திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுபட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை சட்டமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று கூறிய தி.மு.கவினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.கவின் கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, திருச்சி உள்ளிட்ட பகுதிகள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் அவற்றை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டுவரவில்லை என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர், சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: