வேளாண் பாதுகாப்பு மண்டலம்: காவிரிக்கு கைகொடுத்த முதல்வர் கடலூரை கைவிட்டுவிட்டாரா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், கடலூர் மாவட்டத்தில் அமெரிக்க நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை வரவுள்ளது என்ற அறிவிப்பும் வந்துள்ளதால், விவசாயிகள் மத்தியில் குழப்பமும், சந்தேகமும் எழுந்துள்ளன.
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி,முன்னர், அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கடலூரில் ரூ.50,000 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு,பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது குறித்து ஆலோசித்ததாக இரண்டு நாட்களுக்கு முன்னர், அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கடலூரில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைந்துள்ள நிலப்பகுதி, புதிதாக வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் மேலும் மோசமடையும் என்ற அச்சத்தில் இருப்பதாக கடலூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே தானே புயலில் மோசமாக பாதிக்கப்பட்ட பெரிய குப்பம் பகுதியில் உள்ள 2,100 பரப்பளவில் உள்ள நாகார்ஜூனா ஆலை செயல்பட்ட இடத்தில் ஹால்தியா நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை வரவுள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் குறிப்பிட்டுள்ளார். 2011ல் தானே புயலுக்குப் பிறகு, பல மாதங்கள் காத்திருந்து, நிலத்தைச் சீர்படுத்தி தற்போது விவசாயத்தைப் பெரிய குப்பம் பகுதியில் மேற்கொண்டுவருகின்றனர்.
விவசாயிகளை அச்சுறுத்துவது எது?

பட மூலாதாரம், Ramanathan
ஹால்தியா நிறுவனத்தின் ஆலை அமையவுள்ளது என முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, நம்பிக்கையுடன் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கடலூர் விவசாயிகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறுகிறார் காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.ரவீந்திரன்.
''காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும் இந்த மண்டலத்தில் கடலூரும் அடங்கும் என முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஹால்தியாவின் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை இங்கு அமைந்தால், மேலும் மாசுபாடு அதிகரிக்கும். மண் வளம் குறைந்துவிடும் மற்றும் கால்நடைகள் பாதிப்புகளை சந்திக்கும். நிலத்தின் வளத்தைக் கூட்ட எங்களைப் போன்ற விவசாயிகள் பல சிரமங்களை சந்திக்கிறோம். அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் பணம் ஈட்ட எங்களைப் போன்ற விவசாயிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறார்கள்,''என்கிறார் விவசாயி ரவீந்திரன்.
காவிரிக்குக் கைகொடுத்த முதல்வர் கடலூரைக் கைவிட்டுவிட்டாரா? என கேள்வி எழுப்பிய ரவீந்திரன், காயல்பட்டு மற்றும் பூச்சிமேடு உள்ளிட்ட பல விவசாய கிராமங்களில் சவுக்கு நாற்று, வெட்டிவேர், வெள்ளரி, முந்திரி மற்றும் கடலை பயிர்கள் பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன என்றும், ஹால்தியாவின் ஆலை அமைந்தால் கடலூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார்.
காணாமல்போன மீன்கள்

பட மூலாதாரம், Arulselvam
ஆசியாவில் மிகப்பெரிய திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கமான நெய்வேலி அமைந்துள்ளது. அதனருகே அனல் மின் நிலையம் உள்ளது. இயற்கை வளம் மிகுந்த சதுப்பு நில காடான பிச்சாரவத்திற்கு அருகில் நிலக்கரியை பயன்படுத்தி, அனல்மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் என கடலூரில் எங்கெங்கு காணினும் ஆலைகள் இந்த மாவட்டத்தில் தென்படுகின்றன என்கிறார்கள் மீனவர்கள். மீனவர்களின் வாழ்விடமாகக் கடற்கரை ஆலைகளின் குப்பை தொட்டியாகிவிட்டது என்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் பல வகையான மீன்கள் கிடைப்பதில்லை என்பதை மாசுபாட்டின் உச்சமாக பார்க்கிறார்கள் மீனவர்கள். ''சூட மீன் என்ற மீனை நாங்கள் பிடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மீன்களின் தரம் குறைந்துவிட்டது. அதோடு, மீன்கள் கிடைக்கும் காலமும் மாறிவிட்டது. ஒருவேளை, மீன்கள் மாசுபாடு காரணமாக இடம்பெயர்ந்துவிட்டன என்றும் தோன்றுகிறது. அதோடு, இந்த ஆலைகளின் கழிவுகள் காரணமாக, கடற்பரப்பின் தகவமைப்பு மாறியுள்ளது,''என்கிறார் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர் செல்வன்.

பட மூலாதாரம், Arulselvam
தற்போதுள்ள ஆலைகளின் கட்டமைப்பு மற்றும் தொடர் செயல்பாட்டின் காரணமாக கடலூரில் பல பகுதிகளில் கடலரிப்பு அதிகரித்துள்ளது என்கிறார் மங்கையர் செல்வன். ''பேத்தோடை கிராமத்தில் சமீபத்தில் ரேஷன் கடை ஒன்று கடலரிப்பால் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. குழந்தைகள் பூங்கா ஒன்றும் நீரில் மூழ்கிவிட்டது. ஆமைகள் முட்டையிடும் கடற்கரை பகுதிகள், இயற்கை சீற்றங்களில் எங்களைக் காக்கும் மணல்மேடுகள் போன்றவற்றை அழித்தால், எங்களின் அடுத்த தலைமுறையினர் இங்கு வசிக்கமாட்டார்கள் எனத் தோன்றுகிறது,''என்கிறார் அவர்.
''சுற்றுச்சூழல் தாங்குதிறன் கணக்கீடு செய்யவேண்டும்''
கடலூரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்குவதால், நிலம்,நீர்,காற்று மாசுபாட்டின் அளவுகள் அதிகரித்துள்ளது என்றும், புதிதாக பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை வருவதால், மேலும் குவியும் கழிவுகளால், மாசுபாடு அதிகரிக்கும் என்கிறார் சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தி.அருள்செல்வம்.
''மத்திய அரசு நிறுவனமான மத்திய நிலத்தடி நீர்வள ஆதார அமைப்பு(Central ground water authority of India) கன உலோகங்கள் கலந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடலூர் மாவட்டத்தில் நீர் மாசுபாடு மோசமாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. அதாவது மாசுபாடு அபாய அளவை எட்டியுள்ளது என்பதைக் குறிக்க சிகப்பு குறியீட்டின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதி வகைப்படுத்தப்பட்டது. மேலும், இங்குள்ள மாசுபாட்டால், பிற இடங்களைக்காட்டிலும், சிப்காட் பகுதியில் வசிப்பவர்களுக்கு கேன்சர் நோய் ஏற்படும் வாய்ப்பு 2,000 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்திருந்தது. இதுபோன்ற முக்கியமான ஆய்வுகளை புறந்தள்ளிவிட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, ஆலையை திறக்கிறோம் என சொல்வது மக்களை நேரடியாக பாதிக்கும் செயல்,''என்கிறார் அருள்செல்வம்.

பட மூலாதாரம், Arulselvam
கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் தாங்கு திறன் பற்றி துளியும் அக்கறை இல்லாமல் புதிய ஆலைகள் திறக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவிக்கிறார்.
''ஒரு இருசக்கர வாகனம் இருந்தால், அந்த வாகனத்தில் எத்தனை நபர்கள் செல்லமுடியும் என அளவு இருக்கிறது. அதேபோல ஒரு பேருந்தில் சுமார் 60 பேர் வரைதான் செல்லமுடியும் என்றால், அதிகமான நபர்கள் ஏறினால் விபத்து ஏற்படும். அதுபோலத்தான், கடலூர் மாவட்டத்தில் 1980கள் முதல் விதவிதமான அலைகள் திறக்கப்பட்டுள்ளன. சிப்காட், ரசாயன ஆலைகள், பெயிண்ட் தயாரிப்பு ஆலை, மருந்து பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எனப் பலவிதமான தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலை மாசுபாட்டால், பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் மற்றும் கடலூரிலிருந்து இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர். உள்ளூர் மக்களுக்குக் கணிசமான வேலைவாய்ப்புகள் அளிக்காமல், அவர்கள் வாழ்விடத்தையும் மாசுபடுத்துவதால் இந்த மாவட்ட மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படும்,''என்கிறார் அருள்செல்வம்.
ஹால்தியா நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளது குறித்து மக்களிடேயே எதிர்மறையான கருத்துகள் எழுந்துள்ளன என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணனிடம் தெரிவித்தோம். அவருடைய பதிலைக் கேட்டோம். ''இந்த ஒப்பந்தம் முதல்வரின் துறையின் கீழ் வந்துள்ளது. கடலூரைப் பொறுத்தவரை முன்பை போல இல்லாமல், மாசுபாட்டைக் குறைக்க எல்லா நடவடிக்கையும் எடுத்துவருகிறோம். குறிப்பாக நீர் மாசுபாட்டைக் குறைக்க, தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே வெளியேற்றவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறோம். அவ்வப்போது கண்காணிப்பும் செய்கிறோம். குடிநீர் பிரச்சனையையும் தீர்க்க வழிவகை செய்கிறோம். இந்த புது ஆலை பற்றிய அரசாணை வெளியானால்தான் முழு விவரம் தெரியும். பின்னர் விளக்கமாகப் பேசலாம்,''என்றார் அமைச்சர் கருப்பண்ணன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













