Delhi Election Results: மீண்டும் ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்கள் போதும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி இப்போதைய நிலவரப்படி 62 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது . காங்கிரஸ் ஒரு இடத்திலும்கூட முன்னிலை பெறவில்லை.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை எட்டு மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
`24 மணி நேரமும் மின்சாரம் பெற்ற குடும்பங்களின் வெற்றி` - கேஜ்ரிவால்

பட மூலாதாரம், NurPhoto/Getty Images
"உங்களின் மகன் மீது மூன்றாவது முறையாக நம்பிக்கை வைத்த டெல்லி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்." என டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் தனது கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றுகையில் தெரிவித்தார்
தற்போது நிலவரப்படி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
தனது தொண்டர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், "இந்த வெற்றி என்னுடைய வெற்றியல்ல. இது டெல்லி மக்கள் அனைவரது வெற்றி," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"என்னை தங்களது மகனாக நினைத்து ஆதரவு தெரிவித்த அனைத்து குடும்பங்களின் வெற்றி,"
"இன்றைக்கு டெல்லியில் 24 மணி நேரமும் மின்சாரம் பெற்ற குடும்பங்களின் வெற்றி இது; தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி பெற்ற ஒவ்வொரு குடும்பங்களின் வெற்றி இது; அதேபோல் தங்களது குழந்தைகளுக்கு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கிடைக்கப்பெற்ற அனைத்து குடும்பங்களின் வெற்றி இது; இன்றைக்கு நாட்டில் ஒரு புதிய அரசியலுக்கு டெல்லி மக்கள் வழிகாட்டியுள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி," என்று கேஜ்ரிவால் தொண்டர்கள் முன் உரையாற்றினார்.
என்ன சொல்கிறார் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்?

பட மூலாதாரம், Getty Images
"கட்சியின் செயல்திறனுக்கு நான் பொறுப்பேற்கிறேன். இதன் பின்னணியில் உள்ள காரணிகளை ஆராய்வோம். எங்கள் வாக்கு சதவீதம் வீழ்ச்சியடைவதற்கு பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் துருவமுனைப்பு அரசியலே காரணம்" என்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாத காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவர் சுபாஷ் சோப்ரா தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மம்தா பானர்ஜி கருத்து
"அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துவிட்டேன். மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டார்கள். வளர்ச்சி திட்டங்கள் மட்டுமே எடுபடும், சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர் நிராகரிக்கப்படும்" என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வகுப்புவாத கொள்கைக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளதை முடிவுகள் வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லியின் தற்போதைய துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியா தான் போட்டியிட்ட பட்பர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளரைவிட 1,427 வாக்குகள் பின்தங்கி உள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
11:05 AM: 'இன்னும் நேரம் உள்ளது' - பாஜக
"ஆம் ஆத்மி - பாஜக இடையே நெருக்கமான போட்டி உள்ளதை தேர்தல் முன்னணி நிலவரங்கள் காட்டுகின்றன. ஆனால், இன்னமும் நேரம் உள்ளது; நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும், அதற்கு மாநில தலைவராகிய நானே பொறுப்பு" என்று டெல்லி மாநில பாஜகவின் தலைவரான மனோஜ் திவாரி கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

சல்மான் ரவி
பிபிசி செய்தியாளர் - ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்திலிருந்து...
பெரும்பாலான தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிப்பதை அடுத்து, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் இப்போதே தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சி அலுவலகம் முழுவதும் பலூன்கள் கட்டப்பட்டுள்ளதுடன், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பெரிய கட் அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளை தங்களது கட்சி வெற்றிபெறும் என்று இங்குள்ள தொண்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பல இடங்களில் நெருக்கமான போட்டி இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சி வலுவான வெற்றியைப் பெறும் என்று பிபிசியிடம் பேசிய அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த தேர்தலுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாடல்களை ஒலிக்க செய்து தொண்டர்கள் அதற்கேற்றவாறு நடனமாடி வருகின்றனர்.
62.59% வாக்குகள் பதிவு
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 672 வேட்பாளர்கள் களமிறங்கினர். சுமார் 1.47 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தினர்.

பட மூலாதாரம், EPA/ GETTY IMAGES
ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டுக்கு பிறகு பாஜக 67 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?
மீண்டும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்பு முடிவுகள் அனைத்துமே தெரிவித்துள்ளன. ஆனால், பாஜக இந்த கணிப்பை நிராகரித்துள்ளது.
70 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் கடந்த 2015 சட்டமன்றத் தேர்தலில் 67 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வரானார். பாஜகவுக்கு 3 இடங்களே கிடைத்தன.
டைம்ஸ் நவ் கருத்து கணிப்பானது ஆம் ஆத்மி 44 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றுமென்றும், பா.ஜ.க 26 தொகுதிகளை கைப்பற்றுமென்றும் கூறுகிறது.
நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 50 - 56 இடங்களை கைப்பற்றும் என்றும் பா.ஜ.க 10 - 14 இடங்களை கைப்பற்றுமென்றும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்லாது என்று கூறுகிறது.
ரிபப்ளிக் -ஜான் கி பாத் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 48 -61 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க 9 -21 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 0- 1 தொகுதியில் வெல்லும் என்றும் கூறுகிறது.
ஏ.பி.பி மற்றும் சி - வோட்டர் கருத்து கணிப்பானது ஆம் ஆத்மி 49- 63 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும், பா.ஜ.க 5 - 19 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும், காங்கிரஸ் 0 -4 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும் கணித்துள்ளது.
"அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி"
"அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி," - இது தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ.கவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட கோஷம். இந்த கோஷம் தோற்றது எப்படி?
இது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள: பாஜவின் பிரியாணி கோஷம் டெல்லி தேர்தலில் எடுபடாதது ஏன்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













