பாஜகவின் புதுச்சேரி தேர்தல் அறிக்கை: முக்கிய தகவல்கள் - சட்டமன்ற தேர்தல் 2021

புதுச்சேரிக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
படக்குறிப்பு, புதுச்சேரிக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

(தமிழ்நாடு, புதுச்சேரி, இந்தியா மற்றும் உலக அளவிலான முக்கியச் செய்திகளை இந்தப் பக்கத்தில் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.)

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.‌

  • புதுச்சேரி மாநிலத்திற்கான தனி பள்ளிக்கல்வித் தேர்வாணையம் உருவாக்கப்பட்டு, 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.
  • புதுச்சேரியில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்படும்.
  • உயர்கல்வி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி வழங்கப்படும்.
  • ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள் அரசால் நிர்வகிக்கப்படாது.
  • மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு 150 அடி உயரச் சிலை நிறுவப்படும்.
  • கொரோனா‌ பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
  • மகளிர்‌ அனைவருக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
  • அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்கப்படும்.
  • மகளிருக்கு அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 50 சதவீதம் ஒதுக்கீடு மற்றும் காவல்துறை பணியிடங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
  • 2.5 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • அரசு தேர்வெழுத வாய்ப்பு இழந்த இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வுகள் அளிக்கப்படும்.
  • சென்னையுடன் புதுச்சேரி மற்றும் காரைக்காலை இணைப்பதற்காகக் கடல்வழி, விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும்.
  • அனைத்து இல்லங்களுக்கு 24 மணி நேரமும் 100 சதவீதம் மின்சாரம், குடிநீர் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கான வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.
  • அனைத்து மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூபாய் 6000 உதவித் தொகை வழங்கப்படும்.
  • மீன்பிடி தடைக் காலங்களில் வழங்கப்படும் நிவாரணம் 5000 ரூபாயிலிருந்து 8000 ரூபாய் ஆக உயர்த்தப்படும்.
  • முந்தைய அரசால் மூடப்பட்ட அனைத்து நூற்பாலைகள், பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு ஆலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் ரூபாய் 5 ஆயிரத்திற்கு அதிகமாகும் செலவுகளை அரசே ஏற்கும்.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்குத் தனி தொழில்முனைவோர் மையம் அமைத்துத் தரப்படும்.
  • மூத்த குடிமக்களின் ஓய்வூதியத்தை 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் ஆக உயர்த்தித் தரப்படும்.
  • ஊனமுற்றோருக்கான மாத ஓய்வூதியத்தை 1750 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் ஆகவும், விதவைகள் ஓய்வூதியத்தை தற்போதுள்ள 2000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து, புதுச்சேரி அரசின்‌ சுமார்‌ 6000 கோடிக்கும் மேலான கடன்‌ ரத்து உள்ளிட்டவை குறித்து இந்த அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.

இந்த தேர்தல் அறிக்கையைப் புதுச்சேரி அனைத்து சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களிடம் கோரிக்கை கேட்கப்பட்டது. அதை "உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி" என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்து பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையைப் புதுச்சேரி பாஜக தயாரித்துள்ளதாக பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

கோவிட் மருத்துவமனை இருந்த மும்பை கட்டத்தில் தீ: 9 பேர் பலி

கோவிட் மருத்துவமனை இருந்த மும்பை கட்டத்தில் தீ: 9 பேர் பலி

மும்பையில் கோவிட் -19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையைக் கொண்டுள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று, வியாழக்கிழமை இரவு 11.57 மணியளவில் கிழக்கு மும்பையின் பாண்டப் பகுதியில் அமைந்துள்ள 'ட்ரீம்ஸ் மால்' எனும் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தக் கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக சன்ரைஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக ஏற்கனவே உயிரிழந்த இருவரது உடல்களும் தீ விபத்தில் சிக்காமல் மீட்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை தெரிவிக்கிறது.

நான்கு தளங்களைக் கொண்ட இந்தக் கட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் தீயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. நள்ளிரவில் தொடங்கிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இன்று காலை வரை தொடர்ந்தன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: