'கூகுள் பே மூலம் பணம்': தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி மீது திமுக புகார், தேர்தல் ஆணையம் பதில் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

S.P. Velumani

பட மூலாதாரம், S.P. Velumani faceboo page

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அமைச்சர் வேலுமணி தரப்பினர் பண விநியோகம் செய்வதாக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார் தெரிவித்துள்ளது.

இதனையொட்டி தேர்தல் ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. என்ன நடக்கிறது தொண்டாமுத்தூரில்?

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்களைக் கொடுக்காமல் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

அப்படியிருந்தும், தற்போது வரையில் 230 கோடி ரூபாய் அளவுக்குப் பணம், நகை ஆகியவை பிடிபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், மேற்கு மண்டலத்தில் வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் ஆளும்கட்சியின் செயல்பாடுகளுக்குத் துணைபோவதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்தவரிசையில், கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கார்த்திக், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையராக இருக்கும் ரவி என்பவர், அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பில்லை எனவும் அவர் குறித்து விசாரித்து ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு இணையதளம் மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணத்தைக் கொடுக்க முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவின் அடிப்படையில் வங்கிகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 17ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள புகார் மனுவுக்கு தமிழக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு: தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, பொதுமக்களின் மொபைல் எண்களை சேகரித்து, கூகுள்-பே மற்றும் பிற ஆன்லைன் பண பரிமாற்ற தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு பணம் வழங்குவது தொடர்பான புகாரில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி தங்களின் கவனத்திற்குப் பின்வரும் பதில் அளிக்கப்படுகிறது.

அமைச்சர் வேலுமணியை கார்த்திகேய சிவசேனாபதி

பட மூலாதாரம், karhtikeya sivasanapathy facebook page

படக்குறிப்பு, அமைச்சர் வேலுமணியை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி தொண்டாமுத்தூரில் போட்டியிடுகிறார்.

வங்கிக் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்கள் குறித்து கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது அனைத்து வங்கிகளுக்கும் தெளிவாக விளக்கப்பட்டது. தினசரி ரூ.10 லட்சம் மேல் உள்ள பணப் பரிவர்த்தனைகளையும் மற்றும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளையும் உடனே தெரிவிக்கவும் மற்றும் சந்தேகத்திற்குரிய RTGS/NEFT பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறை மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக மாவட்ட முன்னணி வங்கி மேலாளர்களின் வழிகாட்டுதலுக்காக சென்னை ரிசர்வ் வங்கி, இந்தியா மற்றும் மாநில அளவிலான வங்கியாளர் குழுவுக்கும் முறையான வழிகாட்டுதல் வழங்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை வங்கி மேலாளர்கள் அனைத்து வங்கியாளர்களுக்கும் இதுபோன்ற மோசமான மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால், தினசரி அடிப்படையில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர் அவர்களுக்கு கடந்த மார்ச் 19ஆம் தேதி தனிப்பட்ட கூட்டத்தை அனைத்து வங்கியாளர்களுடனும் மற்றும் செலவின பார்வையாளர்கள், வருமான வரி நோடல் அதிகாரிகளுடனும் கலந்து விரிவான வழிமுறைகளை வழங்குவும் திட்டமிட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் பெயர், யாருக்கு தொகை விநியோகிக்கப்பட்டது, எந்தக் கணக்கிலிருந்து தொகை மாற்றப்பட்டது போன்ற விவரங்கள் ஏதேனும் தெரிவித்தால், தேர்தல் ஆணையத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தொண்டமுத்தூர் தொகுதியில் மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்தின் அனைத்து 10 தொகுதிகளிலும் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய பண பரிமாற்றம் பரிவர்த்தனைகளை சரிபார்க்க முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், தமிழக அமைச்சர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தகுந்த நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான தி.மு.கவின் புகார் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பேசினோம். 'பிரசாரத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: