தேமுதிக மீது குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி: "பக்குவமில்லாத அரசியல் செய்கிறார்கள்"

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palaniswamy

அ.தி.மு.க கூட்டணியை விட்டு விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. வெளியேறியதால் தங்களுக்கு பாதிப்பு இல்லையென முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. பக்குவமில்லாத அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, "புதுச்சேரியில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சில கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒன்றாக போட்டியிட பேசிவருகிறார்கள். ஆகவே முடிவு செய்வதில் தாமதமாகிறது. அ.தி.மு.கவுக்கு 3 இடங்கள்தான் தரப்படுவதாக சொல்லப்படும் கருத்து மிகத் தவறானது.கூட்டணி அமைவதற்கு தாமதமாவது இயல்பான விஷயம்தான்" என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து புதிய தமிழகம், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் வெளியேறியிருப்பது குறித்து கேட்டதற்கு, "புதிய தமிழகம் எங்களோடு இல்லை. கிருஷ்ணசாமி ஏற்கெனவே வெளியேறி விட்டார். தே.மு.தி.க வெளியேறியதில் எந்த இழப்பும் இல்லை. அவர்களுடையது பக்குவமில்லாத அரசியல் என்றே கருதுகிறேன். கூட்டணியை விட்டு வெளியேறியதும் தவறாகப் பேசுவது சரியல்ல. அது கூட்டணிக்கும் அழகல்ல. கூட்டணி அமையாவிட்டால் தனியாக நிற்பது தவறல்ல. ஆனால், பழி சொல்வது தவறு" என்றார் முதலமைச்சர் பழனிச்சாமி.

பா.ம.கவுக்கு அளித்த மரியாதை தங்களுக்குத் தரப்படவில்லை என்று தே.மு.தி.க கூறியிருப்பது குறித்து கேட்டபோது, "அது எப்படி தரப்பட முடியும்? ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தகுதி இருக்கிறது. வாக்கு வங்கி இருக்கிறது. அதற்கு ஏற்றபடிதான் பேச்சுவார்த்தை நடைபெறும்" என்றார் அவர்.

கருத்துக் கணிப்புகளில் தி.மு.க வெற்றி பெறும் என செய்தி வெளியாகியிருப்பது குறித்து கேட்டபோது, "விக்ரவாண்டியிலும் நாங்குநேரியிலும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். எல்லா ஊடகங்களும் இந்தத் தொகுதிகளில் வெற்றி கிடைக்காது என கூறியிருந்தன. ஆனால், நாங்கள் வெற்றி பெற்றோம். இப்படித்தான் இதுவும் என்று பதிலளித்தார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக கேட்டதற்கு, "அதை நான் பார்க்கவில்லை; அதனால் கருத்துச் சொல்ல முடியாது" என்றும் பதிலளித்தார் முதல்வர் பழனிசாமி.

புதுச்சேரி திமுக போட்டியிடும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக

பட மூலாதாரம், DMK

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதசார்பற்ற கூட்டணிக் கட்சிகள் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்ட சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இறுதிக் கட்ட தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், திமுகவிற்கு 13 தொகுதிகளும், விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது‌. காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வகிக்கும் இந்த மத சார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகள் அடங்கிய பட்டியலை சென்னையில் திமுக தலைமை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டது. அதில், 12 தொகுதிகளுக்கான வேட்பாளரை திமுக அறிவிப்பு செய்தது. இதில் மீதமுள்ள பாகூர் தொகுதிக்கு வேட்பாளர் யார் என்பதைப் பின்னர்‌ அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

திமுக சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள்: உருளையன்பேட்டை தொகுதியில் எஸ்.கோபால், உப்பளம் தொகுதியில் அனிபால்கென்னடி, மங்கலம் தொகுதியில் சண்குமரவேல், முதலியார் பேட்டை தொகுதியில் எல்.சம்பத், நெல்லித்தோப்பு தொகுதியில் கார்த்திகேயன், ராஜ்பவன் தொகுதியில் எஸ்.பி.சிவக்குமார், மண்ணாடிப்பட்டு தொகுதியில் ஏ.கிருஷ்ணன் என்கிற ஏ.கே.குமார், காலாப்பட்டு தொகுதியில் எஸ்.முத்துவேல், திருபுவனை தனித் தொகுதியில் ஏ.முகிலன், காரைக்கால் தெற்கு தொகுதியில் ஏ.எம்.எச்.நாஜிம், விரவி திருப்பட்டினம் தொகுதியில் எம்.நாகதியாகராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் கடந்த முறை திமுக சார்பில் காரைக்கால் விரவி திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வுத் செய்யப்பட்ட கீதா ஆனந்த் என்பவருக்கு இந்த முறை இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாதசார்பற்ற கூட்டணிக் கட்சி உள்ள திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களுடைய வேட்பாளர்களை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக-அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு அறிவித்துள்ளனர். இதில் தற்போது பாஜக மற்றும் அதிமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. மேலும் தொகுதிப் பங்கீடு குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமை எந்த தகவலும் தெரிவிக்காத காரணத்தினால் தனித்துப் போட்டியிடும் போவதாக பாமக அறிவித்தது. இதனிடையே விரைவில் எங்களுக்கு உரியத் தொகுதிகளைக் கொடுத்து எங்களை அழைத்துப் பேசினால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகப் புதுச்சேரி பாமக தலைமை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :