தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: பாஜக தென் மாவட்ட தொகுதிகளை அதிகமாக குறிவைப்பது ஏன்?

பாஜக அதிமுக
    • எழுதியவர், ஏ.ஆர். மெய்யம்மை
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலமெங்கும் பரவலாகத் தான் போட்டியிடும் இடங்களை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது போல் தோன்றினாலும் தென் மாவட்டங்களிலேயே அதிக தொகுதிகளில் களமிறங்குகிறது.

இதுவரை அதிமுக 177 தொகுதிகளிலும், அதன் தோழமை கட்சிகளான பாமகவும் பாஜகவும் முறையே 23 மற்றும் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை அதிமுகவுடன் கையெழுத்தான தொகுதி பங்கீட்டின்படி பாஜக தமிழகத்தில் 20 சட்டப்பேரவை தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் இறப்பினால் காலியாக இருக்கும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல், சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்ந்து ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக தலைவர்களான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடனும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இரண்டு கட்சிகளுக்குமான தொகுதி பங்கீடு கையெழுத்தானது. பாஜக கொங்கு மண்டலத்தில் அதிகமான தொகுதிகளை கோரியதால் தான் தொகுதி பங்கீடு தாமதமானதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, அரவக்குறிச்சி, உதகமண்டலம், தாராபுரம், தளி ஆகிய தொகுதிகள் மேற்கு மண்டலத்தில் பாஜகவிற்கு ஒத்துக்கப்பட்டன. தென்மாவட்டங்களை பொறுத்தவரை ஒதுக்கீட்டில் பெரிதாக பிரச்னை எழவில்லை என்று கூறுகின்றனர் பாஜகவினர்.

அதனால் அதிகபட்சமாக 8 இடங்களில் இங்கே போட்டியிடுகிறது. ஆறு தொகுதிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு ஆகிய 3 தொகுதிகளில் பாஜக களமிறங்குகிறது. அதுபோக இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, காரைக்குடி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற்றுள்ளது.

அதிமுக பாஜக

பட மூலாதாரம், Vanathi

இதில் கோவை தெற்கு, உதகமண்டலம், குளச்சல், விளவன்கோடு மற்றும் காரைக்குடியில் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரசுடன் நேரடியாக மோதுகிறது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் சரி, இம்மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சரி, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடனேயே பாஜக இருக்கிறது. கிறிஸ்துவர்களும் இந்து நாடார்களும் அதிகம் வாழும் இங்கே, மத ரீதியான அணி திரட்டல் அடிப்படையிலேயே வாக்குகள் செலுத்தப்படுகின்றன.

2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நாகர்கோவிலில் திமுகவின் சுரேஷ் ராஜனும், குளச்சல் மற்றும் விளவன்கோட்டில் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்ட ஜெ. ஜி. பிரின்ஸும் எஸ். விஜயதாரிணியும் வெற்றி பெற்றார்கள். பாஜக இப்போது போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் தனித்து நின்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. தனித்து போட்டியிட்ட அதிமுகவோ நாகர்கோவிலிலும் குளச்சலிலும் மூன்றாம் இடத்தையும் விளவன்கோட்டில் நான்காவது இடத்தையுமே பெறமுடிந்தது.

இரு கட்சியினரும் சேர்ந்து பெற்ற வாக்குகள் திமுக கூட்டணியைவிட அதிகமே. இதனால் இப்போதுள்ள கூட்டணி பலத்தைக் கொண்டு வெற்றி பெற்றுவிட முடியும் என்று நம்புகின்றனர் பாஜகவினர்.

இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மறவர்கள் அதிகம் வசிக்கும் இராமநாதபுரத்திலும், மத ரீதியான துருவப்படுத்தலைக் கொண்டு வாக்குகள் பிரிகின்றன. கடந்த தேர்தலில் இத்தொகுதி மக்கள் அதிமுக வேட்பாளர் மணிகண்டனை சட்டமன்றத்திற்கு அனுப்பிவைத்தனர். திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஜவாஹிருல்லாஹ் இரண்டாம் இடத்தையும், மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தேமுதிக மூன்றாம் இடத்தையும், பாஜக நான்காம் இடத்தையும் பிடித்தன.

இம்முறை தினகரன் தலைமையிலான அமமுக கணிசமான வாக்குகளை பிரிப்பதற்குண்டான வாய்ப்புகள் உள்ள போதிலும், பாஜக இத்தொகுதியை தேர்ந்தெடுத்திருப்பது இந்து வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தான் என்கின்றனர் அக்கட்சியினர்.

அதிமுக பாஜக

திருநெல்வேலி மக்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜக வேட்பாளராக அங்கு களம் காண்பார் என்று தெரிகிறது. கட்சி தலைமை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே நெல்லை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார். கடந்த தேர்தல் வரை அதிமுக விசுவாசியாக இருந்த அவர் சொற்ப வாக்குகளில் தான் திமுகவின் எ.எல்.எஸ். லெட்சுமணனிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் மீண்டும் லெட்சுமணனே போட்டியிடுகிறார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பாஜகவிற்கு தாவிய நாகேந்திரனுக்கு அக்கட்சி மாநிலத் துணை தலைவர் பதவி கொடுத்தது. கவிஞர் வைரமுத்துவின் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாகப் பேசி மேலும் சர்ச்சையை கிளப்பினார். அதனால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவும் செய்தனர்.

காரைக்குடியை பொறுத்தமட்டில் அங்கு உள்ள வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமான பாஜகவின் சர்ச்சைக்குரிய தலைவர் ஹெச். ராஜா போட்டியிடுவார் என்று தெரிகிறது. அவர் 2001ல் பாஜக திமுக கூட்டணியில் இருந்த போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு போட்டியிட்ட 2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களிலும் 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் தோல்வியை தழுவினார். காங்கிரஸுடன் ஒப்பிடுகையில் அவரது களப்பணி நன்றாகவே இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

"மத்தியில் உள்ள பாஜக அரசின் நாடு முழுவதும் உள்ள 117 பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை முன்னேற்றுவதற்கான திட்டத்தின் கீழ், விருதுநகரும் இராமநாதபுரமும் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமானின் நேரடிப் பார்வையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதே இந்த இரண்டு தொகுதிகளையும் தேர்ந்தெடுக்க காரணம். அதே போல் மதுரையிலும் பாஜகவினர் கடந்த சில ஆண்டுகளாக தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் கணிசமான வாக்குகளை பெறமுடியும் என்று நம்புகின்றனர்," என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளருமான சாஸ்திரி மல்லாடி.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜியின் ஆதரவோடும் வணிகர் சமூகமான நாடார் சமூகத்தின் ஆதரவோடும் வாக்குகளை எளிதில் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் விருதுநகர் தொகுதியை கேட்டு வாங்கியுள்ளதாக கூறுகின்றனர் பாஜக நிர்வாகிகள்.

எனினும் திமுகவுடன் நேரடியாக மோதும் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை வடக்கு ஆகிய தென் தொகுதிகளில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு கடினமானதாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :