'பிரிட்டனில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு இந்தியாவில் இதுவரை இல்லை' - இந்திய அரசு

New Covid strain

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு இதுவரை இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை என இந்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் காணப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபு, இந்தியாவில் இதுவரை காணப்படவில்லை என நிடி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகள் உற்பத்தி செய்து வரும் கொரோனா தடுப்பு மருந்தின் திறனில், இந்த புதிய திரிபு வைரஸ், எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் வி.கே.பால்

கொரோனா வைரஸின் புதிய திரிபு பிரிட்டனில் தொடர்ந்து பரவி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்த புதிய திரிபு அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புதிய திரிபு, முந்தைய திரிபை விட 70 சதவீதம் சுலபமாகப் பரவும் என தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்த செய்தி ஒட்டுமொத்த உலகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டனில் இந்த புதிய திரிபு அதிவேகமாகப் பரவி, அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

உலக அளவில் இந்தியா உட்பட 25 நாடுகள், பிரிட்டனில் இருந்து அல்லது பிரிட்டனுக்குச் செல்லும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கின்றன. புதன்கிழமை நள்ளிரவு முதல், டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியாவில் இந்தப் பயணத் தடை தொடரும்.

இந்தியாவுக்கு வரும் எல்லா பயணிகளுக்கும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை, (Standard Operating Procedures) இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

கொரோனாதடுப்பு மருந்து: 13,000 பேர் பங்கெடுத்த மூன்றாம் கட்ட கோவேக்சின் பரிசோதனை

இதனிடையே இந்தியாவில் தயாராகும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வில், இலக்கு வைக்கப்பட்ட எண்ணிக்கையில் பாதி அளவை பாரத் பயோடெக் நிறுவனம் எட்டியுள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றான கோவேக்சினை பாரத் பயோடெக் என்கிற நிறுவனம் தயாரித்து, பரிசோதனை செய்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளில், கோவேக்சின் மட்டுமே மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.

கோவேக்சின்

இதுவரை 13,000 பேர் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கெடுத்திருக்கிறார்கள் என பாரத் பயோடெக் நிறுவனமே இன்று அறிவித்திருக்கிறது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் இந்தியா முழுக்க, பாரத் பயோ டெக் நிறுவனம் 26,000 பேரிடம் பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு வைத்தது. அதில் தாங்கள் பாதி எண்ணிக்கையைக் கடந்துவிட்டதாக அந்த நிறுவனத்தினர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவேக்சினின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நல்ல முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன. முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில், 1,000 பேர் பங்கெடுத்தார்கள். இந்த முடிவுகளை சர்வதேச அறிவியல் சஞ்சிகைகள் பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்டார்கள் எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தன் செய்திக் குறிப்பில் இன்று தெரிவித்துள்ளது.

"இதற்கு முன் இப்படி ஒரு தடுப்பூசி சோதனை இந்தியாவில் நடந்ததில்லை. தொடர்ந்து நிறைய மக்கள் கோவேக்சின் பரிசோதனையில் பங்கெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பான மற்றும் செயல் திறன் மிக்க கொரோனா தடுப்பு மருந்தைக் கொண்ட வர உதவும் 13,000 பேருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என அந்தச் செய்திக் குறிப்பில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா கூறியிருக்கிறார்.

'கொரோனா வைரஸின் புதிய திரிபு இந்தியாவில் இதுவரை இல்லை' - இந்திய அரசு

பாரத் பயோடெக் தன் கோவேக்சின் மருந்தை, அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு விண்ணப்பித்திருந்தது. ஆனால் இதுவரை இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (டி.ஜி.சி.ஐ)அலுவலகத்தால் அனுமதிக்கப்படவில்லை. கோவேக்சின் மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் தொடர்பான தரவுகள் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள்.

கோவேக்சினின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை. கோவேக்சினின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் 80 சதவீதம் பேர் மருந்தை எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். ஆக மறுப்பு விகிதம் (Refusal Rate) 80 சதவீதமாக இருக்கிறது. எனவே பொது மக்களுக்கு கோவேக்சின் மருந்து கிடைப்பது தாமதமாகலாம் என,

கோவேக்சின் பரிசோதனையின் முதன்மை புலனாய்வாளராக இருக்கும் எய்ம்ஸ் மருத்துவர் சஞ்சய் ராய் முன்பு குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :