குழந்தைகள் நலனை தடுக்கும் போர்: எத்தியோப்பியா உள்நாட்டு சண்டையால் 23 லட்சம் குழந்தைகளுக்கு உதவிகள் போகவில்லை - ஐநா

டீக்ரே குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

எத்தியோப்பியாவில், டீக்ரேயின் வடக்கு பகுதியில் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருப்பதால், அந்தப் பகுதியில் இருக்கும் 2.3 மில்லியன் குழந்தைகளுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

"அகதிகளாகவும், உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்தும் உள்ள குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு தான் முன்னுரிமை எனக் கூறியுள்ளது ஐநா குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப்.

எத்தியோப்பிய அரசுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும், டீக்ரே பகுதிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகக் மனிதாபிமான முகமைகள் கூறுகின்றன.

அரசுப் படைகள், டீக்ரே போராளிகளுடன், கடந்த 4 நவம்பர் முதல் போராடி வருகிறது.

தற்போது டீக்ரே பகுதி, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, போர் முடிந்துவிட்டது என்கிறது எத்தியோப்பிய அரசுத் தரப்பு. ஆனால், பல்வேறு இடங்களில், எத்தியோப்பிய அரசு படைகளுடன் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி போராடி வருவதாக மக்கள் முன்னணியினர் கூறுகிறார்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் இந்த சண்டையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமாராக 50,000 பேர் அண்டை நாடான சூடானுக்கு புலம் பெயர்ந்துவிட்டனர்.

உணவு, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் மருத்துவ உணவுகள், மருந்துகள், தண்ணீர், எரிபொருள் போன்ற அடிப்படைப் பொருள்கள் கிடைப்பது குறைந்து வருவதால், குழந்தைகளுக்கான தேவைகளை மறுப்பது, குழந்தைகளின் நிலைமையைத்தான் மோசமாக்கும் என யுனிசெஃப் தன் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

உதவிகள் தேவைப்படும் குடும்பங்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக, எந்த வித கட்டுப்பாடுகளும், பாரபட்சமுமின்றி, மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க வேண்டும் ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளது ஐ.நா.

டீக்ரே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போர் பதற்றம் காரணமாக அகதிகளாக முகாம்களில் வாழும் டீக்ரே சமூகத்தினர்

எத்தியோப்பிய அரசோ அல்லது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியினரோ, யாருமே இந்த பிரச்சனை குறித்து வாய் திறக்கவில்லை.

என்ன பிரச்சனை?

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியினர் தான், 2018-ல் அபீ அகமது அதிகாரத்துக்கு வரும் முன்பு வரை, சுமாராக 30 வருடங்களுக்கு வலுவான அரசியல் சக்தியாக இருந்தது.

அபீ அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

சீருடை அணிந்த படையினர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பல்வேறு இனக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை இணைத்து, ஒரே தேசியக் கட்சியை அமைத்தார்.

ஆனால், இந்தக் கட்சியில் இணைய டி.பி.எல்.எஃப் எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

ஜூன் 2020-ல், கொரோனாவைக் காரணம் காட்டி, அபீ அகமது தேர்தலை ஒத்திவைத்ததால் பிரச்னை மோசமடைந்தது.

எத்தியோப்பியாவின் மத்திய அரசு, ஆள்வதற்கான தகுதியை இழந்துவிட்டது என டீக்ரே மக்கள் இயக்கத்தினர் கூறினார்கள்.

கடந்த செப்டம்பர் 2020-ல், டீக்ரே மக்கள் இயக்கத்தினர், தாங்களே ஒரு தேர்தலை நடத்தினார்கள். அதை ஆளும் மத்திய அரசு சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டது.

கடந்த நவம்பர் 4ஆம் தேதி, எத்தியோப்பிய பிரதமர், டீக்ரே மக்கள் இயக்கத்துக்கு எதிராக தாக்குதலை அறிவித்தார். எத்தியோப்பிய ராணுவத்தின் வடக்கு தலைமையகமான மெக்கெல்லியை இலக்கு வைப்பதாகக் கூறி இந்த தாக்குதலுக்கு அவர் உத்தரவிட்டார்.

இப்போது வரை போர் நடந்து கொண்டிருப்பதாக டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியினரும், போர் முடிந்துவிட்டது என எத்தியோப்பிய அரசு தரப்பும் முரணாகக் கூறி வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :