டெல்லி விவசாயிகள் போராட்டம்: ராஜஸ்தான் எல்லையில் குவியும் விவசாயிகள், பெண்கள் - நெடுஞ்சாலை முடக்கம்

புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 8-ம் தேதி நடந்த பாரத் பந்த் முழு அடைப்பை ஒட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு போராட்டத்தில் சங்கு ஊதும் போராட்டக்காரர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு போராட்டத்தில்.
    • எழுதியவர், டெவினா குப்தா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ராஜஸ்தான் - ஹரியாணா எல்லைக்கும் பரவிவிட்டது.

இதன் மூலம் டெல்லியை நோக்கி வரும் இன்னொரு நெடுஞ்சாலையும் முடக்கப்பட்ட நிலை உருவாகியுள்ளது.

ராஜஸ்தான் விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள் என்று விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர்கள் சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூர் - டெல்லி சாலையில் டெல்லி சலோ பேரணி தொடங்கும் என்று அவர்கள் நேற்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை ஷாஜஹான்பூரில் ராஜஸ்தான் ஹரியாணா எல்லைப் பகுதியில் ஏற்கெனவே நடந்து வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களிலும், கார்களிலும், பேருந்துகளிலும் வந்து சேர்ந்தனர்.

தேசிய நெடுஞ்சைலையை மறிக்கவும், டெல்லி நோக்கி செல்லவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து வருகிறார்கள்.

ஷாஜஹான்பூரில் குவியத் தொடங்கிய விவசாயிகள்.
படக்குறிப்பு, ஷாஜஹான்பூரில் குவியத் தொடங்கிய விவசாயிகள்.

"நான் மேவாரில் இருந்து நேற்றிரவு கிளம்பினேன். என் சகோதரர்களோடு இணைந்து போராட்டம் செய்வதற்காக புறப்பட்டேன். போர்வை போர்த்திக்கொண்டு இரவு, வழியில் படுத்து தூங்கினேன். மீண்டும் காலையில் பயணத்தைத் தொடர்கிறேன்" என்று எங்களிடம் கூறினார் 60 வயது விவசாயி சிவக்குமார். அவர் காரில் வந்திருந்தார். அவரது காரின் மேல் படுக்கை கட்டப்பட்டிருந்தது.

கொடிகள் ஏந்தி, முழக்கம் எழுப்பும் பெண்கள்

போராட்டத்தின் முன் களத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 50 பெண்கள் கொடிகளை ஏந்தியபடி போராட்டத்தை வழி நடத்துகிறார்கள். அவர்கள் முழக்கம் எழுப்புகிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள்.

6 மாதம் போராடுவேன்: குழந்தைகளை கணவர் பார்த்துக் கொள்வார்

"இங்கே நான் 6 மாதம் தங்குவதற்குத் தயாராக வந்திருக்கிறேன். என் கணவர் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்கிறார். நான் அவர்களுக்காக போராடுகிறேன்" என்று எங்களிடம் கூறினார் பஞ்சாபில் இருந்து வந்திருந்த மன்பிரீத் கௌர் என்ற பெண்.

ஷாஜஹான்பூரில் குவியத் தொடங்கிய விவசாயிகள்.
படக்குறிப்பு, ஷாஜஹான்பூரில் குவியத் தொடங்கிய விவசாயிகள் கூட்டத்தில் பெண்கள்.

ஷாஜஹான்பூர் எல்லையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் தொடங்கிய இந்தப் பேரணியில் விவசாயிகளோடு யோகேந்திர யாதவ், மேதா பட்கர் போன்ற செயற்பாட்டாளர்கள் சேர்ந்துகொண்டார்கள்.

"நாங்கள் அமைதியாகப் போராட வந்திருக்கிறோம். எங்களை டெல்லிக்கு அனுமதிக்காவிட்டால் நாங்கள் எல்லையில் அமைதியாக உட்கார்ந்துகொள்வோம்" என்று யோகேந்திர யாதவ் எங்களிடம் கூறினார்.

அந்த இடத்தில் ஏராளமான ஹரியாணா போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போராட்டக் காரர்கள் எல்லையைக் கடப்பதைத் தடுத்தனர். இதையடுத்து டெல்லியை நோக்கி வருகிற மற்றொரு நெடுஞ்சாலையான அந்த சாலையை மறித்தபடி விவசாயிகள் அமைதியாக அமர்ந்துவிட்டனர்.

இதன் மூலம் இந்திய அரசுக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் விவசாயிகள் இன்னும் ஒரு கள முனையை திறந்திருக்கிறார்கள். டெல்லியை நோக்கி வரும் கிட்டத்தட்ட அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் மிகக் குறைவான அளவிலேயே வந்திருப்பது 'டெல்லி சலோ' போராட்டத்துக்கு போதிய ஆதரவு இல்லை என்பதைக் காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? என்று கேட்டதற்கு, இது தொடக்கம்தான் என்று பதில் அளித்தார் செயற்பாட்டாளர் மேதா பட்கர். "நாளை விவசாயிகள் பஞ்சாயத்து நடக்கிறது. சில நாள்களில் எண்ணிக்கை இங்கே உயரும். சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் நகரமாட்டோம்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் மேதா பட்கர். டெல்லியை ஒட்டி உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகளில் காணப்படுவதைப் போன்ற சூழ்நிலை ஷாஜஹான்பூரிலும் ஏற்பட்டு வரும் நிலையில், போராட்டம் தீவிரமடைந்திருப்பதாகவே தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: