விஜயசாந்தி: "தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைப்பதே லட்சியம்"

விஜயசாந்தி

தெலங்கானா மாநிலத்தில் 2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்த்துவதே லட்சியம் என்று முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட உலகில் பிரபலமானவராக வலம் வந்த நடிகையும் முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி (54) பாரதிய ஜனதா கட்சியில் திங்கட்கிழமை முறைப்படி இணைந்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக விஜயசாந்தி அறிவித்தார்.

இதையடுத்து டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த விஜயசாந்தி, திங்கட்கிழமை பிற்பகலில் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை உறுதிப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தேசிய செயலாளர் அருண் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் திங்கட்கிழமை பாஜக உறுப்பினரானார்.

இதையடுத்து தெலங்கானா மாநிலத்துக்கு திரும்பி உடனடியாக கட்சியின் பிரசார நடவடிக்கைகளை தொடங்குமாறு அவரை கட்சியின் மேலிட தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை திங்கட்கிழமை சந்தித்த பிறகு நடிகை விஜயசாந்தி தனது தேர்தல் பிரசார பணிகளை தொடங்கவிருக்கிறார்.

பாஜகவில் அரசியலை தொடங்கியவர்

விஜயசாந்தி

பட மூலாதாரம், Twitter

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான விஜயசாந்தி 1998ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அப்போது அக்கட்சியின் மகளிர் அணி செயலாளராக பணியாற்றிய அவர், 2009இல் தல்லி தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்தார். அதே காலகட்டத்தில் ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே.சந்திரசேககர ராவ் முன்னெடுத்த தனி மாநில முழக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.

பிறகு தமது கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் 2009-ம் ஆண்டில் சேர்ந்த விஜயசாந்தி, தனி மாநில கோரிக்கைக்காக அந்த பிரதேசத்தின் பட்டி, தொட்டிகள் எல்லாம் பிரசாரம் செய்தார்.

அப்போது நடந்த மக்களவை தேர்தலிலும் விஜயசாந்தி எம்.பி ஆக வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்திலும் அவரது செயல்பாடு பலரது கவனத்தை ஈர்த்த நேரத்தில், கட்சி மேலிட உத்தரவின்படி தெலங்கானா இயக்கத்துக்காக தமது எம்.பி பதவியை 2011இல் ராஜிநாமா செய்தார்.

டிஆர்எஸ் அதிருப்தியால் காங்கிரஸில் இணைந்தார்

விஜயசாந்தி (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விஜயசாந்தி (கோப்புப் படம்)

அடுத்த சில மாதங்களிலேயே கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முற்றிய நிலையில், டிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் 2014இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அக்கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்து வந்த விஜயசாந்திக்கு 2018-ம் ஆண்டில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், தன்னை ஒரு பேச்சாளராகவே கட்சி மேலிடம் கருதுவதாகவும், முக்கிய அரசியல் கூட்டங்களுக்கும் கட்சிக் கூட்டங்களுக்கும் தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறி வந்தார்.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நடந்த பிரசாரத்தின்போது, நரேந்திர மோதியை தீவிரவாதி என்றும் சர்வாதிகாரி என்றும் குறிப்பிட்டு விஜயசாந்தி தேர்தல் பிரசாரம் செய்தார். அவரது கருத்துகள் தேசிய அளவில் பாஜகவினரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, அக்கட்சியில் இருந்து விலகி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். அதன் பிறகு தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் முன்னெடுத்த வேல் யாத்திரை நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

தற்போது குஷ்பு வரிசையில் நடிகை விஜயசாந்தியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறார். தமிழ்நாட்டில் குஷ்புவின் வருகையும், தெலங்கானாவில் விஜயசாந்தியின் வருகையும் அக்கட்சிக்கு தேர்தல் காலங்களில் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: