விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தரும் கனடா பிரதமர் - இழுபறியால் டிசம்பர் 3இல் மீண்டும் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images
இந்தியா தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 6.45 மணிவரை நீடித்தது. இதில் பஞ்சாபில் உள்ள 32 சங்கங்களின் பிரதிநிதிகள், ஹரியாணாவில் உள்ள விவசாய சங்கம், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு கமிட்டி, ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் சங்கதன் ஆகிய இரு அகில இந்திய விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என மொத்தம 35 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நரேந்திர சிங் தோமர் மட்டுமின்றி, இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் அச்சங்களை களைய ஐவர் குழுவை அமைக்கலாம் என்றும் அதில் விவசாயிகள் தரப்பில் இடம்பெறும் சங்கங்களின் பிரதிநிதிகளின் பெயர்களை தெரிவிக்குமாறும் அரசு சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அத்தகைய குழுவால் எந்த பயனும் ஏற்படவில்லை என்று விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டப்பிரிவுகளில் ஏதேனும் ஆட்சேபம் இருக்குமானால் அதை விரிவாக விளக்கினால் அதை கவனிக்க அரசு தயாராக உள்ளது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய சட்டங்களின் நன்மைகள், அவை விவசாயிகளுக்கு தரும் பலன்கள் குறித்து அவர்களிடம் அதிகாரிகள் விளக்கினார்கள். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள இயலாத மன நிலையில், விவசாயிகள் இருந்த நிலையில், எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து மீண்டும் டிசம்பர் 3ஆம் தேதி இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், "வேளாண் சட்டங்கள் தொடர்பாக சங்கங்களின் பிரதிநிதிகளை சமாதானப்படுத்துவே அரசு முனைப்பு காட்டி வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் விளக்கம் தொடர்பாக மேலும் விவாதிக்க ஏதுவாக வரும் 3ஆம் தேதி மீண்டும் கூடிப்பேசலாம் என தெரிவித்துள்ளார்கள். எனவே, மீண்டும் கூடி பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்களுடைய கோரிக்கைகள் தீர்க்கப்படும்வரை போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தனர்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அரசு ஒரு குழுவை அமைத்து பிரச்னைகளை விவாதிக்க யோசனை கூறியது. ஆனால், எல்லோரும் அடங்கிய குழுவாக அது இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். எங்களுக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. மீண்டும் விவாதிக்க இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
முன்னதாக, பிற்பகல் 3 மணி முதல் மாலை 6.45 மணிவரை நடந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு தேநீர் தரப்பட்டது. ஆனால், அதை அருந்தாமலேயே விவசாயிகளின் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதில் உறுதியாக இருந்தனர்.
இதற்கிடையே, டெல்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தீவிரமாகி வரும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து வெளியிட்டிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
கனடாவில் சீக்கியர்கள் அதிகமாக வசிப்பதால், அவர்கள் நேற்று கொண்டாடிய குருநானக் ஜெயந்தியையொட்டி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு காணொளியில் பேசினார். அப்போது, இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக தகவல்கள் வருகின்றன. அங்குள்ள நிலைமை கவலையளிக்கிறது. நாங்கள் அனைவரும் குடும்பம், நண்பர்கள் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். உங்களில் பலருக்கும் நிஜமாகவே அப்படித்தான் இருக்கும். ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அமைதியாக நடக்கும் போராட்டங்களின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணையாக இருக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ அந்த காணொளியில் பேசினார்.
இந்திய வெளியுறவுத்துறை எதிர்வினை
இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் வெளிப்படையாக கருத்து வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில், கனடா பிரதமரின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை எதிர்வினையாற்றியிருக்கிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரத் தொடங்கியதுமே இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்தியாவில் விவசாயிகள் தொடர்பாக கிடைத்த தவறான தகவல்கள் அடிப்படையில் கனடா நாட்டுத் தலைவர்கள் கருத்து வெளியிட்டதாக நாங்கள் பார்க்கிறோம். அத்தகைய கருத்துக்கள் தேவையற்றவை. அதுவும் அவை, ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பானவை. ராஜீய உரையாடல்கள், அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதே சிறந்ததாக இருக்கும்," என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
சிவசேனை தலைவர் அதிருப்தி
இதேபோல, சிவசேனை கட்சியின் துணைத் தலைவர் பிரியங்கா சதுர்வேதியும், ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துகளுக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளார். "உங்களுடைய கவலைகளால் நெகிழ்ந்தேன். ஆனால், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை, வேறு தேச அரசியலுக்கு தீவினமாகக் கூடாது. பிற நாடுகளுக்கு நாங்கள் தரும் மரியாதையை தயவு செய்து மதியுங்கள். மற்ற நாடுகள் கருத்து தெரிவிக்க இடம் கொடுக்காமல் இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோதி தலையிட்டு தீர்வு காண வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
டெல்லியில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை
இதற்கிடையே, டெல்லி புராரியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேச்சுவார்த்தையை நடத்தினார். இதில் 32 விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images
விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதையடுத்து, டெல்லியை இணைக்கும் ஹரியாணா மாநில எல்லையை குருகிராம் அருகேயேும், உத்தர பிரதேசத்தை இணைக்கும் காஜியாபாத், நொய்டா எல்லைகளிலும் தடுப்புகளை போட்டு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
முன்னதாக, டெல்லி நோக்கி போராட்டம் நடத்தும் நோக்குடன் விவசாயிகள் நுழைவதற்கு நகர காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், நகர எல்லையில் திரண்ட விவசாயிகளின் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை காவல்துறையினருக்கு ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான விவசாயிகள், டிராக்டர் வாகனங்களில் குடும்பம் குடும்பமாக திரண்டனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டத்தை கைவிடக்கூடாது என்ற தீர்மானத்துடன் அவர்கள் காலவரையின்றி போராட்டங்களில் ஈடுபடும் எண்ணத்துடன் சமையல் பாத்திரங்கள், கூடாரங்களுடன் டெல்லிக்கு வர முற்பட்டனர்.
அவர்களை காவல்துறையினர் நகருக்குள் நுழைய அனுமதிக்காத நிலையில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கண்ணீர புகை குண்டுகளையும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் முற்பட்டனர். இந்த நடவடிக்கைகள் தேசிய அளவில் எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, டெல்லியின் புறநகர் எல்லையான புராரி நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். இந்த கூட்டம் அதிகமாவதையடுத்து, மீண்டும் டெல்லிக்குள் நுழைய முற்படும் வெளி மாநில விவசாயிகளுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலையில், தடுப்புகளை போட்டு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கோபம் அடைந்த சில விவசாயிகள், தங்களுடைய டிராக்டர்களைக் கொண்டு தடுப்புகள் மீது மோதச் செய்து நகருக்குள் நுழைய முற்பட்டனர். இதனால் பல அடுக்கு தடுப்புகள் சாலை முழுவதும் போடப்பட்டிருந்தன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள், விவசாயிகளே இல்லை என்று இந்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார். "காணொளிகளில் பார்க்கும்போது போராடுபவர்கள் உண்மையிலேயே விவசாயிகள் போல நடந்து கொள்ளவில்லை. வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகளுக்கு பிரச்னை இல்லை. அவர்கள் விளைவிக்கும் பொருட்கள் மூலம் கமிஷன் பெறுவோரே எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறாரக்ள்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள் :
- கொரோனா: குணமடைந்த 3 மாதம் கழித்தும் நுரையீரல் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
- நாசாவின் கவனத்தை ஈர்த்த 6 வயது மாற்றுத் திறனாளி சிறுவன்
- மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபு
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












