வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்; முதல்வருடன் அன்புமணி பேசியது என்ன?

பட மூலாதாரம், Anbumony
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியை அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பா.ம.க. தொண்டர்கள் வந்தனர். அவர்களை நகருக்குள் நுழையவிடாமல் தடுக்க காவல்துறை தடுப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பா.ம.க. தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பெருங்களத்தூர், தாம்பரம், உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் மீது கல்வீசிய சம்பவங்களும் நடைபெற்றன. சென்னை - பெங்களூர் சாலை வழியாக சென்னை நகருக்குள் வர முயன்ற வாகனங்களும் தடுக்கப்பட்டன. இதனால், அங்கும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்குப் பிறகு, அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செெய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 1989லிருந்து தற்போதுவரை எந்தெந்த சமுதாயத்திற்கு எத்தனை இடங்கள் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டுமென்று கோரியிருப்பதாகக் கூறினார்.
"முதலமைச்சரையும் துணை முதல்வரையும் சந்தித்து வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 1989லிருந்து தற்போதுவரை எந்தெந்த சமுதாயத்திற்கு எத்தனை இடங்கள் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தோம்.
கடந்த ஆண்டு, அ.தி.மு.க.வுடனான தேர்தல் கூட்டணிக்கு முன்பாக எங்களுடைய 10 அம்ச கோரிக்கைகளில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு வரும் வழியில் எங்கள் தொண்டர்கள் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டனர். இருந்தாலும் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்" என்று கூறினார்.
இதனை சாதி பிரச்னையாகப் பார்க்க வேண்டாமென்றும் யாருக்கும், எந்த அமைப்புக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் அல்ல என்றும் இது தமிழகத்தில் வளர்ச்சி பிரச்னை என்றும் அன்புமணி தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் நான்கில் ஒரு பங்கினர் வன்னியர்களாக உள்ளனர். அவர்கள் சாதாரண வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழும் பகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை. கல்வியில் கடைசி ஏழு மாவட்டங்கள், வட மாவட்டங்கள்தான். இந்த சமூகம் முன்னேறினால்தான் தமிழ்நாடு முன்னேறும்" என்றார் அன்புமணி.
இந்தப் போராட்டத்திற்காக வந்த பா.ம.க தொண்டர்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிகழ்வுகள் குறித்துக் கேட்டபோது, "இந்த சமூகத்தை வன்முறை சமூகமாக சித்தரிக்காதீர்கள். இரவெல்லாம் பயணம் செய்து வந்தவர்களை, காவல்துறை திடீரென நிறுத்திவிட்டது. குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடையாது. எங்கள் நோக்கம் அறவழியில் போராடுவதுதான். இவற்றை வேறு யாரோ செய்திருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு வழிமுறையை ஆராய ஆணையம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பட மூலாதாரம், Edappadi K Palanisamy
தமிழ்நாட்டில் ஜாதி ரீதியான புள்ளிவிரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய ஆணையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கைகளை வைத்துவருகின்றனர். அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. இவற்றின் பயன் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. மேலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கை எதிர்கொள்ள இத்தகைய புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன" எனக் கூறப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலகட்டத்தில் உள்ள ஜாதி வாரியான முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் என்றும் தமிழ்நாடு முழுவதும் ஜாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழுத் தகவல் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், "ஜாதி ரீதியாக தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்பதை பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. 2021ல் நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிரீதியாக நடத்த வேண்டுமென அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதற்கு முன்பாக, 1930களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஜாதி ரீதியான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு - தமிழ்நாடு அரசியல்

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! இந்திய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.
சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) இணைந்தார்.
செய்தியாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய ஆட்சிப் பணியாற்றிய சந்தோஷ் பாபு, கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வுப் பெற்றார்.
சந்தோஷ் பாபு நிர்வாக இயக்குநராக இருந்த தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனுக்கான ஒப்பந்த புள்ளிக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்ட மாற்றுக்கருத்தின் காரணமாக அவர் இன்னும் சுமார் எட்டாண்டுகள் பணி உள்ள நிலையிலும், விருப்ப ஓய்வு பெற்றார் என்று ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டிருந்தன.

பட மூலாதாரம், kamal haasan official facebook page
இந்த நிலையில், அவர் நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று இணைந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய கமல் ஹாசன், "நல்லதையும், நேர்மையையும் நோக்கிய எங்களது பயணத்தில் சந்தோஷ் சரியான நேரத்தில் இணைந்துள்ளார். நல்லவர்களின் கூட்டணி என்று நான் கூறியதை சரியாக புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள். அதற்கான முன்னுதாரணமாக இன்னும் நல்லவர்களும் வல்லவர்களும் கட்சியில் இணைய இருக்கிறார்கள்" என்று கூறினார்.
'சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்' - மு.க. அழகிரி
எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தமது பங்களிப்பு இருக்கும் என்று கூறியுள்ளார் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி.

பட மூலாதாரம், Getty Images
மதுரை வில்லாபுரம் பகுதியில் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுக நிர்வாகி எஸ்.ஆர்.மருதுவின் வீட்டிற்கு சென்று அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வரும் 2021சட்டமன்ற தேர்தலில் தமது பங்களிப்பு இருக்கும் எனவும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு விரைவில் நிர்வாகிகளை ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் எனவும் மு.க. அழகிரி தெரிவித்தார்.
அவரது மகன் தயாநிதி அழகிரிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு நான் சந்திக்கப் போவதாகப் பரவிய வதந்திபோல தான் அந்தச் செய்தியும் என்றார் அழகிரி.
பிற செய்திகள் :
- இலங்கை போரில் பிரிட்டிஷ் கூலிப்படை குற்றங்கள்: 1980கள் சம்பவம் இப்போது விசாரணை
- 'இரான் அணு விஞ்ஞானி இஸ்ரேலால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கொல்லப்பட்டார்'
- ஆந்திர கடலோரத்தில் தங்க வேட்டை: நிவர் புயல் கொண்டு வந்ததா?
- 100 கோடிக்கும் அதிக இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது எப்படி?
- மாரடோனாவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனக் குறைவான ஏற்பாடுகளா? - மருத்துவர் வீட்டில் சோதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












