நிவர் புயல்: பாம்பன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள்

(இன்றைய நாளில் உலக அளவிலும், இந்தியா மற்றும் தமிழக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல அரசு தடை விதித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால், தமிழக கடலோர மாவட்ங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மணிக்கு சுமார் 40 முதல் 60 கி.மீ வேகத்துடன் கூடிய சூறாவளி காற்று வீசும் என்ற எச்சரிக்கையால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, தொண்டி, மூக்கையூர் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு நேற்று முதல் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்குவதை மீன்வளத்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளதால் இன்று இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். நாளை மாலைக்குள் நிவர் புயல் கரையைக்கடக்கும் என்பதால் பாம்பன் துறைமுகத்தில் நேற்று (திங்கள்கிழமை) முதல் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பாம்பன் வடக்கு மற்றும் தென் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் புதிய ரயில் பாதைக்கான கட்டுமான உபகரணங்கள் சேதமடைந்து கரை ஒதுங்கியுள்ளன. மேலும் கரையோர பகுதியில் அமைந்துள்ள 30க்கும் மேற்பட்ட குடிசைகள் மீன் கம்பெனிகள் முற்றிலும் சேதமடைந்து கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்களது மீன் பிடி சாதனங்கள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர்.

பாம்பன் பாலத்தில் சூறைக்காற்று வீசி வருவதால் பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கால மீட்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 429 ஊராட்சிகளில் மாவட்ட நிர்வாகம்,காவல் துறை, சுகாதாரத்துறை,தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 3500 ஊழியர்கள் 135 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகள்,மழை நீர் மற்றும் கடல் நீர் சூழும் பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகள் சாலை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்டம் முழுவதும் 32 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு உணவு,மருத்துவம்,குடிநீர்,மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைவசதிகளுடன் 24மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், பேரிடர் பாதிப்பு குறித்து 1077 மற்றும் 04567-230067 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் புயல், மழை தொடர்பாக உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதற்காக 1077, 04322-222207 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் அரசு அலுவலர்கள் வேண்டிய தகவல்களை தெரிவிப்பார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தை பயன்படுத்தி காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தால், இந்த தொலைபேசி உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தார், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

அய்யாகண்ணு வீட்டில் தடுத்து வைப்பு: டெல்லியில் போராட்டம் நடத்த திட்டம்

பட மூலாதாரம், Getty Images
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக புறப்படவிருந்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, திருச்சியில் உள்ள அவரது வீட்டிலேயே காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். நதிகளை இணைத்தல், விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயித்தல், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லியில் போராட்டமும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டு முன்பு உண்ணாவிரதமும் இருக்க, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்திருந்தது.அதன்படி அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ரயில் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டு, திருச்சி ரயில்வே நிலையத்திற்கு புறப்பட்டனர்.
பேரணியாக புறப்பட்டு திருச்சி-கரூர் பைபாஸ் சாலைக்கு வந்த அவர்களை, தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் தடுத்தனர்.
இதனால் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்த விவசாயிகள், திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சிலர், அரை மொட்டை அடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
டெல்லி செல்வதை தடுத்ததால் அரை மொட்டை அடித்த விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் அய்யாக்கண்ணு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வீட்டு வாயிலில் ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப்பட்டு, அவர்கள் வெளிவராதபடி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்ட நகலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்ட நகலை தாக்கல் செய்யமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அலைபேசி, கணிப்பொறி என எதில் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடினாலும் அதனை சைபர் பிரிவினரால் கண்டுபிடிக்க முடியும்," என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசு சரியான முடிவு எடுத்துள்ளது என்றும் கூறிய நீதிபதிகள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய இயற்றப்பட்ட அவசர சட்ட நகலைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நெல்லை காவல் நிலைய வாயிலில் தீக்குளித்து உயிரிழந்த பெண் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் காவல்துறையினர் மகன்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சுத்தமல்லி சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவருக்கு பிரசாந்த், பிரதீப் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலைக்குச் சென்று வந்தார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதால் பிரதீப் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று விசாரணைக்கு பிரதீப்பை காவல்துறையினர் சுத்தமல்லி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து இன்று காலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் வீட்டிலிருந்த பிரதீப்பின் அண்ணன் பிரசாந்த்தையும் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் திருட்டு வழக்கு தொடர்பாக சில பொருள்களைப் பறிமுதல் செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் பிரதீப்பின் அம்மாவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தேவையில்லாமல் வீட்டில் வந்து தொல்லை செய்வதாக காவல்துறையினரிடம் சகுந்தலா வாக்குவாதம் செய்ததோடு மட்டுமின்றி வீட்டிற்குள் சென்று உடலில் தீ வைத்துக் கொண்டிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி காவல்நிலையத்துக்கு நேரில் சென்று காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டார். திருட்டு வழக்கில் பிரதீப் மற்றும் பிரசாந்த் இருவருக்கும் தொடர்பு இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் செய்தியாளர்களிடம் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தல்- முடிவுகள் வெளியீடு

பட மூலாதாரம், Vishal/Twitter
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் முரளி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் தலைவர் பதவிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பாளர் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் 378 வாக்குகளும், தேனப்பன் 87 வாக்குகளும் பெற்றனர். 18 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் வெற்றி பெற்றார். இரண்டாவது துணைத்தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசன் வெற்றி பெற்றார். கௌரவ செயலாளர் பதவிக்கு டி.ராஜேந்தர் அணியைச் சேர்ந்த மன்னனும் முரளி அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.
பொருளாளர் பதவிக்கு முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.
2020-22ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் (நவம்பர் 22) நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் கடும் போலீஸ் பாதுகாப்பு இடையே காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இதில் நடிகர்கள் கமல், சசிகுமார், சமுத்திரக்கனி, விமல், சேரன் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 1303 வாக்காளர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல், அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 1,050 வாக்குகள் பதிவாகின.
கடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை விட இம்முறை அதிக அளவில் வாக்குப் பதிவாகியுள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் நடிகர் டி.ராஜேந்தர் தலைமையிலான 'தயாரிப்பாளர் பாதுகாப்பு அணி' போட்டியிட்டனர். இந்த அணியில் இருந்து செயலாளர் பதவிகளுக்கு இயக்குநர் லிங்குசாமியின் சகோதரரான சுபாஷ் சந்திரபோஸும், தயாரிப்பாளர் மன்னன் ஆகியோரும் போட்டியிட்டனர்.
இதேபோல துணைத் தலைவர் பதவிகளுக்கு முருகன் மற்றும் நடிகர் விஜய்யின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பிடி செல்வகுமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதே அணியில் இருந்து பொருளாளர் பதவிக்கு தயாரிப்பாளர் ராஜனும் போட்டியிட்டார்.இந்த அணியில் இருந்து மனோபாலா உள்ளிட்ட 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டனர்.
இதேபோல நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரும், மறைந்த ராமநாராயணனின் மகனுமான முரளியின் தலைமையில் 'தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி' போட்டியிட்டது.இந்த அணையில் இருந்து செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.துணைத் தலைவர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன் மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.
பொருளாளர் பதவிக்கு 'தலைவா' திரைப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் போட்டியிட்டனர். இந்த அணியில் இருந்து ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட 21 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டனர்.
இந்த இரு அணிகள் தவிர்த்து தயாரிப்பாளர் தேனப்பன் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டார். இதே போல பொருளாளர் பதவிக்கு ஜே.எஸ்.கே.சதீஷ், செயலாளர் பதவிக்கு கதிரேசன் உள்ளிட்டோரும் சுயேச்சையாக போட்டியிட்டனர். இவர்கள் தவிர இரு குழுக்களாக செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு இரண்டு அணிகள் களம் இறங்கின.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












