நிவர் புயல்: அதிதீவிர புயலாக கரையை கடக்கும் - தமிழகம், புதுவையில் தற்போதைய நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Pib chennai
நிவர் புயல் காரைக்கால் - புதுச்சேரி இடையே அருகே புதன்கிழமை மாலை கரையை கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றின் அரசு தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசுத்துறை செயலாளர்களுடன் இந்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கெளபா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நிவர் புயல் தாக்கும்போது, ஒரு உயிருக்கு கூட பாதிப்பு நேரக்கூடாது என்றும் அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அப்போது அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புயல் சீற்றம், நில நடுக்கம் போன்ற காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை மேற்பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க, இந்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கெளபா தலைமையில் தேசிய நெருக்கடி கால மேலாண்மை குழு உள்ளது. இந்த குழுவில் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநில அரசுகளின் அரசுத்துறை தலைமை செயலாளர்கள், மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்த நிலையில், நிவர் புயல் சில மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் அதன் முன்னேற்பாடு குறித்து விவாதிக்க அந்த குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. புயல் சீற்றத்தின் சமீபத்திய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் அதிகாரிகளிடம் விளக்கினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பது தொடர்பாக அந்த படையின் தலைமை இயக்குநர் விளக்கினார். 20 அணிகள் இந்த மாநிலங்களில் இருப்பது குறித்தும் அவர் விவரித்தார். இந்த மாநிலங்களின் கடலோர பகுதிகளில் வாழும் மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு விடுமுறை
அதன் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை கருத்தில் கொண்டு புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்த விடுமுறையை நீட்டிப்பது பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மாலையில் பேசிய முதல்வர் தெரிவித்தார்.
புயல் கரையை கடக்கும் வரை கடலோர பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
நிவர் புயலை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தொடர்ந்து உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
புயல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
இதற்கிடையே, நிவர் புயல் தென்மேற்கு வங்க கடலில் மூன்று மணி நேரமாக நிலை கொண்டிருந்த புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் தற்போது நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், இன்று மாலை 6 மணியளவில் தெரிவித்துள்ளனர்.
நிவர் புயல் பற்றிய சமீபத்திய தகவல்களை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், புதன்கிழமை மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்த புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வரை மழை தொடரும் என்றும் கூறினார்.
சென்னை, புறநகர் பகுதிகளில் மழை எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுவையில் மிக பலத்த மழை பெய்யும் என்றார். திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுவையில் மிக பலத்த மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், அதிக கனமழை ஏற்படும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். காற்றின் வேகம் சுமார் 100 முதல் 120கிமீ வேகத்தில் வீசும் என்றும் அவர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் புயலை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவர் புயல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டிஐஜி சத்யப்பிரியா, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஹர்மந்தர் சிங் கேட்டறிந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அண்ணாதுரை கூறியதாவது, "விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளாக 122 இடங்கள் கண்டறிந்துள்ளது. பொதுமக்களுக்கு உதவி தேவைப் படுவோருக்கு கட்டுப்பாட்டு அறைகள் 5 அமைக்கப்பட்டது.
அதில் மூன்று மினி கட்டுப்பாட்டு அறைகளாக திண்டிவனம், வானூர், மரக்காணம் பகுதியில் செயல்படுகிறது. மேலும் விழுப்புரத்தில் உள்ள 30 காவல் நிலையங்களைச் சார்ந்த காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மூன்று குழுக்களாக திண்டிவனம், வானூர், மரக்காணம் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடத் தயாராக உள்ளனர்," என்றார்.அதே போன்று 12 மீனவ கிராமங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், 10 குடிநீர் டேங்கர்கள் மூலம் குடிநீர் வழங்கவும், ஏரி குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் வீசும் போது பொதுமக்கள் வெளியே வரக் கூடாது என்பதைத் தெரிவிக்க ஒலிபெரிக்குகள் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கடலூரில் அதிகாரிகள் ஆய்வு
இன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி உடன் சென்று பார்வையிட்டார்.
இதன் ஒரு பகுதியாக கடலூர் அருகிலுள்ள ராசாபேட்டை, சாமியார் பேட்டை ஆகிய மீனவ கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் 120 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியும் மற்றும் அவர்களிடம் ஏதாவது உதவி தேவையா என்று கேட்டு விசாரித்தார். மேலும் சாமியார் பேட்டை புயல் பாதுகாப்பு மையத்தில் செய்யப்பட்ட உணவை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி சோதனை செய்த பிறகே முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழகம்,புதுவையில் தற்போதைய நிலவரம் என்ன?
வங்க கடலில் நிவர் புயல் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது; புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் கடலோர பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழை ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், போக்குவரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
நிவர் புயல் நாளை மாலை புதுவையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ள அதிகாரிகள், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளனர்.
நிவர் புயல் காரணமாக, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கும் அரசு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Imd
தமிழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னர் தெரிவித்திருந்தார்.
கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்தபோதும் புதுவையில் புயல் கரையை கடக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை நகரத்தில் வசிப்பவர்கள், புயல் சேதம் ஏற்பட்டால் அல்லது இடர்கள் ஏற்பட்டால், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்புகொள்ள 044 2538 4530, 044 2538 4530, 044 2538 4540 , 1913 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடற்கரைகளில் பொது மக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என்றபோதும், கடற்கரை சுற்றுப்பகுதிகளில் செல்ஃபி எடுப்பவர்கள், உடற்பயிற்சி செய்ய வருபவர்களையும் அங்கிருந்து காவல்துறையினர் வெளியேற்றுகின்றனர்.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை பலத்த மழை காணப்படவில்லை என்றபோதும், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டம் என்பதால், அரக்கோணத்தில் இருந்து 120 பேர் அடங்கிய ஆறு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடலூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை அதிக கனமழை ஏற்படும் என்றும் புயல் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், பொது மக்கள் பாதுகாப்போடு இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Pib chennai / ndrf
நிவர் புயல் கரையை நாளை கடக்கும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் கடைகளை திறக்க வேண்டாம் என்றும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்கள் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
புதுவையை அடுத்த, மரக்காணம் பகுதியில் உப்பளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், உப்பு உற்பத்தி செய்த குழிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
காரைக்கால் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றிருந்த மீனவர்களை தொடர்பு கொண்டு திரும்பிவர மீன்வளத்துறை அதிகாரிகள் முயற்சி செய்துவருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












