BBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்

உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள 100 பெண்களும் தற்போது நிலவும் நெருக்கடியான காலகட்டத்தில் நேர்மறையான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியவர்கள்.

இந்த ஆண்டு வழக்கமான ஆண்டு கிடையாது உலகெங்கிலுமுள்ள எண்ணிலடங்காத பெண்கள் பிறருக்கு உதவுவதற்காக இந்த ஆண்டு பல தியாகங்களை செய்துள்ளார்கள்.

அந்தப் பெண்களின் தியாகங்களை போற்றும் வகையில் 100 பெண்களை உள்ளடக்கிய ஒரு பட்டியலில் ஓர் இடம் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் தன்னலம் பாராமல் வாழ்ந்தும் அங்கீகாரம் கிடைக்காத அந்தப் பெண்களுக்கானது.

பிபிசி வழங்கும் 2020ஆம் ஆண்டின் 100 பெண்கள்

  • இசைவாணி

    இந்தியாஇசைக் கலைஞர்isaivaniisaiv

    இந்தியாவின் ஒரே பெண் கானா பாடகி என்ற பெருமை இசைவாணிக்கு உள்ளது. தமிழகத்தில் வடசென்னையைச் சேர்ந்த இவர், ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வரும் கானா பாடல் துறையில் பல ஆண்டுகளாக சாதித்து வருகிறார்.

    பிரபல ஆண் கானா பாடகர்கள் பாடிய அதே மேடையில் இவர் பாடுவதே ஒரு சாதனைதான். பழைய நடைமுறையை இசைவாணி உடைத்ததை அடுத்து, மற்ற இளம் பெண் கானா பாடகர்களும் இப்போது களமிறங்கியுள்ளனர்.

    > 2020-ல் உலகம் மாறிவிட்டது. ஆனால் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது: பெண்கள் செயல்பாடுகளின் போக்கை மாற்றியுள்ளனர், பணி நிலைகளை மாற்றியுள்ளனர். வரக்கூடிய தலைமுறைகளுக்கு இந்த நடைமுறை நிலையாக இருக்கும்.

  • பில்கிஸ்

    இந்தியாபோராட்டக்குழு தலைவர்

    82 வயதான பில்கிஸ் சர்ச்சைக்குரிய குடிமக்கள் சட்டத்தற்கு எதிராக நடந்த பெண்கள் போராட்டத்தில் அமைதியாக போராடியவர்.

    தலைநகரில் முஸ்லிம்கள் வாழும் ஷாஹீன் பாக் பகுதியில் அதிக நாட்கள் போராட்டம் நடந்த இடத்தில், போராட்டத்தில் முக்கியமானவராக அவர் இருந்தார். ``ஒடுக்கப்பட்டவர்களின் குரல்'' என்று அவரை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரானா அயூப் குறிப்பிட்டுள்ளார்.

    > பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறி குரல் எழுப்புவதில், குறிப்பாக அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதில் அதிகாரம் பெற்றவர்களாக உணர வேண்டும். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராவிட்டால், தங்கள் பலத்தை எப்படிக் காட்ட முடியும்?

  • மானசி ஜோஷி

    இந்தியாதடகள வீராங்கனை

    இந்திய மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனையான மானசி, இப்போது மாற்றுத் திறனாளி பாட்மிண்டன் உலக சாம்பியனாக இருக்கிறார். 2020 ஜூன் மாதம் உலக பாட்மின்டன் சம்மேளனம் அவரை எஸ்.எல்.3 ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக அறிவித்தது. மானசி பொறியாளராகவும், மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் இருக்கிறார்.

    இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளும், மாற்றுத் திறன் விளையாட்டும் அணுகப்படும் முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது இவருடைய விருப்பமாக உள்ளது. சமீபத்தில் இவரை - அடுத்த தலைமுறை தலைவராக டைம் இதழ் பட்டியலிட்டது. அதன் ஆசிய பதிப்பின் அட்டைப்படத்தில் அவரது படம் இடம் பெற்றது. இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் என அந்த இதழ் குறிப்பிட்டிருந்தது.

    > இந்த ஆண்டு பல வகைகளில் பெண்களுக்கு சவாலான ஆண்டாக உள்ளது. சவாலான நேரங்கள் உங்களை வென்றுவிட அனுமதிக்காதீர்கள்: ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் உங்களுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள்.

  • ரிதிமா பாண்டே

    இந்தியாபருவநிலை செயல்பாட்டாளர்

    ரிதிமா பாண்டே பருவநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாட்டாளர். பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி 2019-ல் தன் 9வது வயதில், வேறு 15 சிறுவர் மனுதாரர்களுடன் சேர்ந்து வழக்கு தொடர்ந்தார். ஐந்து நாடுகளுக்கு எதிராக அவர் ஐ.நா.வில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    ரிதிமா இப்போது சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று, மற்ற மாணவர்களுக்கு அதிகாரம் கிடைக்க உதவுகிறார். அனைத்து நிலைகளிலும் எதிர்காலத்துக்காகவும், பல்லுயிர்ப் பெருக்கத்துக்காகவும் போராட உதவுகிறார். தன்னுடைய மற்றும் வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்காக ரிதிமா பாடுபட்டு வருகிறார்.

    > நாம் ஒன்றுபட்டு பலமாக இருந்து, கஷ்டமான சூழ்நிலைகளில் நம்மால் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபிக்க வேண்டிய தருணம் இது. ஒரு விஷயத்தை சாதிக்க ஒரு பெண் முடிவு செய்துவிட்டால், யாரும் அவரை தடுத்துவிட முடியாது.

  • அறியப்படாத நாயகர்கள்

    உலகம் முழுக்கமாற்றத்தை ஏற்படுத்துதல்

    ஒரு அசாதாரண ஆண்டில், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பெண்கள் தியாக உள்ளத்துடன் மற்றவர்களுக்கு உதவ, அவர்களின் வேலையை அங்கீகரிப்பதுதான் முதல் பணி. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உயிர் துறந்தவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    உலகெங்கிலும் பங்களிப்பு வழங்கிய ஒவ்வொரு பெண்ணையும் பிபிசி 100 பெண்கள் பட்டியலில் சேர்க்க முடியாது என்றாலும், 2020 ஆம் ஆண்டில், உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களைப் பற்றி சிந்திக்க இது உதவும்

  • முயெஸ்ஸர் அப்துல் அஹெத்

    வெளியேற்றப்பட்ட வீகர் இனத்தவர், யிங்கிங்எழுத்தாளர்

    ஹெண்டன் மருத்துவம் படித்தபோது, ஒரு கவிஞராக, கட்டுரையாளராக தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். மருத்துவத்தில் மேல் படிப்பை முடித்ததும் எழுத்துப் பணியில் கவனம் செலுத்த தீர்மானித்தார். 2013ஆம் ஆண்டில் துருக்கிக்கு இடம்பெயர்ந்ததும், அய்ஹான் கல்வி அமைப்பை ஹெண்டன் உருவாக்கினார். வெளிநாடு வாழ் வீகர் மக்களுக்கு வீகர் மொழியை பயிற்றுவிப்பதை நோக்கமாக அந்த அமைப்பு கொண்டிருந்தது. தற்போது அவர் இஸ்தான்புல்லில் வசித்து வருகிறார்.

    ஹெண்டனின் சமீபத்திய படைப்புகள், அவரது தாயகத்தில் நெருக்கடியை சந்தித்தன. அவரது நாவல் கெய்ர்-கோஷ் குயாஷ் (சூரியனுக்கு விடைகொடுப்போம) புனைக்கதையின் விரிவாக்கமாக வீகர் பிராந்தியத்தில் தடுப்புக்காவல் முகாம்கள் பற்றி கவனம் செலுத்துவதாக இருந்தது.

    > குழந்தைகள் தான் எப்போதும் தேசத்தின் நம்பிக்கையாக உள்ளனர். கல்வியால் தான் இந்த நம்பிக்கையை உண்மையாக்க முடியும்.

  • லோஜா அபெரா ஜெய்னோரே

    எத்தியோப்பியாகால்பந்தாட்ட வீராங்கனை

    லோஜா அபெரா ஜெய்னோரே எத்தியோப்பியாவின் தென் பகுதியில் சிறிய நகரில் பிறந்து வளர்ந்தவர். எத்தியோப்பியா மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியில் இரண்டு சீசன்களில் ஹவஸ்ஸா சிட்டி எஸ்.சி. அணியில் அவர் விளையாடி இருக்கிறார். அப்போது அந்த அணியில் அதிகபட்ச கோல்கள் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

    இப்போது தொழில்முறை கால்பந்தாட்ட வீராங்கனையாக இருக்கிறார். எத்தியோப்பியா தேசிய மகளிர் அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

    > உலகில் எந்தவொரு பெண்ணாலும், அது எந்தவொரு சூழலை அவர் எதிர்கொள்வதாக இருந்தாலும், அவரால் தான் கண்ட கனவை அல்லது திட்டமிட்டதை நனவாக்கிட முடியும்.

  • ஹௌடா அபௌஸ்

    மொராக்கோராப்பர்khtek.17

    ஹௌடா அபௌஸ் என்கிற க்டெக், மொராக்கோவை சேர்ந்த ராப் இசைக் கலைஞர். தனித்துவமான ஸ்டைல் மற்றும் பாடல் வரிகளுக்காகப் பெயர் பெற்றவர்.

    பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்துக்கு அவர் குரல் கொடுக்கிறார். பெரிதும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மொராக்கோ ராப் குழுக்களில் பிரபலமாக இருக்கும் ஹௌடா, மாற்றத்துக்கான ஒரு கருவியாக இசையைப் பார்க்கிறார்.

    > போராடுவதை, உருவாக்குவதை, எதிர்ப்பதை தொடர்ந்து செய்யுங்கள், ஒருபோதும் பின்வாங்க வேண்டாம். நமது போராட்டம் இப்போது தான் தொடங்கியுள்ளது. நாம் தான் எல்லாமே, இந்த உலகிற்கு பெண்களின் சக்தி தேவைப்படுகிறது.

  • கிறிஸ்டினா அடானே

    நெதர்லாந்துபிரசாரகர்christina.adane

    கோடை விடுமுறையில் பள்ளிக்கூடத்தில் இலவச உணவு கேட்டு பிரிட்டனில் மனு செய்யப்பட்டதன் பின்னணியில் இருந்தவர் கிறிஸ்டினா. கால்பந்து வீரர் மார்க்கஸ் ராஷ்போர்டு இதை ஆதரித்தார்.

    உணவுத் துறையில் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பைட் பேக் 2030 அமைப்பின் இளவயதினர் குழுவின் இணை தலைவராக இருக்கும் இவர், பள்ளிக்கூடத்தில் மதிய உணவு சாப்பிட்டிருப்பவர் என்ற வகையில், பிரிட்டனில் ஒரு குழந்தைகூட பட்டினி கிடக்கக் கூடாது என்பதை உறுதி செய்திட விரும்புகிறார்.

    > உங்களுடன் அல்லது உங்கள் நம்பிக்கைகளுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். கூட்டத்தில் ஒருவராக இருக்கும் எந்த பெண்ணும் இதுவரை மாற்றத்தை ஏற்படுத்தியதில்லை.

  • யுவோன்னே அகி-சாவ்யெர்

    சியெர்ரா லியோன்மேயர்

    மேயர் யுவோன்னே அகி-சாவ்யெர் ஓ.பி.இ. மூன்றாண்டு கால டிரான்ஸ்பார்ம் ஃப்ரீடவுன் திட்டத்திற்காகப் பெயர் பெற்றவர். சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பருவநிலை மாற்ற சூழலைக் கையாள்வது முதல், இளைஞர்கள் வேலையில்லா பிரச்சினையைக் குறைக்கும் வகையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது வரை 11 துறைகளைத் தேர்வு செய்து அவர் திட்டமிட்டுள்ளார். பருவநிலை நெருக்கடி முக்கிய கவனத்தை ஈர்த்துள்ள ஆண்டில், வெள்ளம் மற்றும் தீ விபத்துகளால் சர்வதேச அளவில் பல மில்லியன் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இரண்டு ஆண்டு காலத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற தனது இயக்கத்தில் சேருமாறு ஃப்ரீடவுன் நகரவாசிகளிடம் மேயர் அகி-சாவ்யேர் உந்துதலை ஏற்படுத்தியுள்ளார்.

    2020 ஜனவரியில் ஆதாரவளம் ஏதுமின்றி #FreetownTheTreeTown தொடங்கப்பட்டது; அக்டோபர் மாதம் வரையில் 450,000 க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அடுத்த மழை காலத்தில் மீதி மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. வெள்ளம், மண் அரிப்பு, தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைகளை சமாளிக்க மரங்கள் முக்கியமானவையாக உள்ளன.

    > அநேகமாக நாம் வெறுப்படைந்து, திருப்தி இல்லாமல் போயிருக்கலாம். அது எதிர்மறையாக இருக்கக் கூடாது. நாம் உருவாக்க விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்மறை எண்ணத்தை மாற்றுவதன் மூலம் நம்மால் அதை நேர்மறையானதாக மாற்றிட முடியும்.

  • ரினா அக்தர்

    வங்கதேசம்முன்னாள் பாலியல் தொழிலாளி

    பெருந்தொற்று காலத்தில், ரினாவும், அவருடைய குழுவினரும் வாரத்திற்கு சுமார் 400 உணவுகள் வழங்கினர். சாப்பாடு, காய்கறிகள், முட்டைகள், மாமிசம் ஆகியவற்றை வழங்கினர். டாக்காவில் வாடிக்கையாளர்கள் வராத நிலையில் சிரமப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு உதவியாக அது அமைந்தது.

    > இழிவானதாக மக்கள் எங்கள் தொழிலைப் பார்க்கிறார்கள். ஆனால் உணவு வாங்குவதற்காக இதைச் செய்கிறோம். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் பட்டினி கிடக்கக் கூடாது, அவர்களுடைய பிள்ளைகள் இந்த வேலைக்கு வந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம்.

  • சாரா அல்-அமீன்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர்

    சாரா அல்-அமீன், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நவீன தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராகவும், எமிரேட்ஸ் விண்வெளி அமைப்பின் தலைவராகவும் உள்ளார். முன்னர் இவர் எமிரேட்ஸ் செவ்வாய் கிரக மிஷனின் முதன்மை அறிவியலாளராகவும், துணை திட்ட மேலாளராகவும் இருந்துள்ளார்.

    அரபு தேசங்களில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன் அனுப்பும் முயற்சியை மேற்கொண்ட முதல் நாடு எமிரேட்ஸ். ஹோப் என அழைக்கப்படும் ஆர்பிட்டர், பிப்ரவரி 2021இல் செவ்வாயில் தரையிறங்கி, காலநிலை மற்றும் வானிலை பற்றிய தரவுகளை சேகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    > இந்த வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. நாம் தனித்து வாழும் சூழல் ஏற்பட்டுவிட்டது. நிலையற்ற இந்த உலகில் நீடித்த வாழ்வை உறுதி செய்வதற்கும், வளர்ச்சியைத் தொடர்வதற்கும் நாம் கூட்டாக முயற்சிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

  • வாட் அல்-கட்டியப்

    சிரியாதிரைப்பட இயக்குநர்

    வாட் அல்-கட்டியப் என்பவர் சிரியா இயக்கவாதி, பத்திரிகையாளர், திரைப்படம் எடுப்பவர், அலெப்போவில் செய்தி சேகரித்தமைக்காக (எம்மி உள்ளிட்ட) பல விருதுகளை வென்றவர். 2020 ஆம் ஆண்டில் For Sama என்ற அவருடைய முதலாவது படத்திற்கு, சிறந்த ஆவணப் படத்திற்கான BAFTA விருது கிடைத்தது. சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

    அலெப்போவில் இருந்து 2016ல் வெளியேறிய வாட், அவருடைய கணவர் மற்றும் 2 மகள்கள் இப்போது லண்டனில் வசிக்கின்றனர். அங்கு சேனல் 4 நியூஸ் நிறுவனத்தில் வாட் பணியாற்றுகிறார். Action for Sama -வின் பிரசாரத்தை முன்னெடுத்துச் செய்கிறார்.

    > நம்பிக்கையை இழந்தால் மட்டுமே தோற்கிறோம். எல்லா பெண்களும், எந்தப் பகுதியினராக இருந்தாலும், நீங்கள் நம்பும் விஷயத்துக்காக போராட்டத்தைத் தொடருங்கள், கனவு கண்டுகொண்டே இருங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதும், ஒருபோதும் நம்பிக்கையை கைவிட்டு விடாதீர்கள்.

  • அட்ரியனா அல்பினி

    இத்தாலிநோய்க் கிருமி நிபுணர்

    அட்ரியனா அல்பினி ஐ.ஆர்.சி.சி.எஸ். மல்டி மெடிக்கா மற்றும் மல்லி மெடிக்கா அறக்கட்டளையின் ரத்தநாள உயிரியல் மற்றும் ஆஞ்சியோ ஜெனசிஸ் ஆய்வகத்தின் தலைவராக இருக்கிறார். மிலன்-பயோகோக்கா பல்கலைக்கழகத்தில் பொது ரத்த நாளத் துறை பேராசிரியராகவும் இருக்கிறார். அமெரிக்க சுகாதார தேசிய நிலையங்களில் பகுதிநேர விஞ்ஞானியாகவும் இருந்துள்ளார்.

    அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அசோசியேசன் இயக்குநர் குழுவுக்கு இத்தாலியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதலாவது நபராக இவர் இருக்கிறார். இத்தாலியில் உயரிய அமைப்பாக இருக்கும் பெண்கள் ஆரோக்கியம் குறித்த தேசிய அப்சர்வேட்டரி பவுன்டேசனில், பெ் விஞ்ஞானிகள் கிளப்பின் தலைவராக இருக்கும் அவர், பெண் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறார். வாள்வீச்சு சாம்பியனாகவும் இருக்கிறார். 2018ல் முதியோர் உலகக் கோப்பை போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2015ல் ஐரோப்பிய முதியோர் வாள்வீச்சு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    > ஆராய்ச்சியாளர்கள் ஒரு பாதையைப் பின்பற்றி தங்கள் பணியைத் தொடங்குகிறார்கள்; ஏற்கெனவே உருவாக்கப்பட்ட பாதை முடிந்துள்ள இடத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஒரு பாதையை உருவாக்குகின்றனர். பன்முக செயல்பாட்டுத் திறன் கொண்ட பெண் விஞ்ஞானிகள், யாருமே யோசித்திராத புதிய பாதைகளைக் கண்டறிய வேண்டும்.

  • உபாஹ் அலி

    சோமாலிலேண்ட்எப்.ஜி.எம். கல்வியாளர்

    சோமாலிலேண்ட் சிறுமியர் ஆறுதலுக்கான அமைப்பின் இணை நிறுவனராக உபாஹ் அலி இருக்கிறார். சோமாலிலேண்ட்டில் சிறுமிகளின் பிறப்புறுப்பை சிதைக்கும் பழக்கத்துக்கு (எப்.ஜி.எம்.) கல்வி மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் முடிவு கட்டும் சேவையில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

    பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்து வருவதால், லெபனாலில் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

    > 2020-ல் உலகம் நிறைய மாறிவிட்டது. உலகம் முழுக்க பெண்கள் ஒன்றுபட வேண்டிய அவசர தேவை இருக்கிறது. பலர் குடும்ப வன்முறை, பாலியல் பலாத்காரம், எப்.ஜி.எம். மற்றும் இதர துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஒன்றுபட்டால், நீதி கேட்கலாம்!

  • நிஸ்ரின் அல்வான்

    இராக்/பிரிட்டன்பொது சுகாதார நிபுணர்

    நிஸ்ரின் பிரிட்டனில் பொது சுகாதாரத் துறை டாக்டர் மற்றும் கல்வியாளர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று சூழலில், மரணத்தில் இருந்து காப்பாற்றுவது மட்டுமின்றி, வைரஸ் தாக்குதலால் ஏற்படும் நீண்டகால ஆரோக்கிய பாதிப்பு (நீண்டகால கோவிட் உள்பட) பிரச்னைகளை கையாளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கோவிட் -19 தொற்றுநோய்களின் போது, இறப்பு விகிதத்தை மட்டுமல்லாமல், வைரஸிலிருந்து நீண்டகால உடல்நலக்குறைவையும் அளவிட மற்றும் தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சோர்வு, தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை அறிகுறிகளாக இருப்பதாக நீண்டகால கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்

    > 2020-ல் நான் 3 விஷயங்களை அதிகமாகச் செய்தேன்: மனதில் பட்டதை பேசினேன், அச்சப்பட்டதை செய்தேன், சுயமாக மன்னித்துக் கொண்டேன். 3 விஷயங்களைக் குறைவாகச் செய்தேன்: என்னைப் பற்றிய பிறரின் நினைப்புக்கு அக்கறை காட்டுவதை குறைத்தேன். சுயமாக குறை கூறுவதை குறைத்தேன். பிறருக்கு நான் குறைந்தவள் என நம்புவதை குறைத்தேன்.

  • எலிசபெத் அனியன்வூ

    இங்கிலாந்து, பிரிட்டன்செவிலியர்

    பேராசிரியை டேமே எலிசபெத் அனியன்வூ மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் செவிலியர் துறையில் கௌரவப் பேராசிரியையாக உள்ளார். பிரிட்டன் சிக்கில் செல் சொசை்டியில் புரவலராகவும் உள்ளார்.

    இவர் முத்திரை பதித்த சிக்கில் செல் மற்றும் தலசீமியா செவிலியர். பிரிட்டிஷ் - ஜமைக்கா செவிலியர் மேரி சியாகோலேவுக்கு சிலை வைக்கும் இயக்கத்திற்கு ஆதரவு திரட்டியவர். BAME சமுதாயங்களில் கோவிட்-19 பாதிப்பு விகிதாச்சார அளவில் இல்லை என்பதை மேன்மைப்படுத்திக் காட்டியதில் முக்கியமானவராக இருக்கிறார்.

    > நீங்களும் மற்ற பெண்களும் அளிக்கும் உலகளாவிய பங்களிப்பின் பாசிடிவ் நிலையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.

  • நதீன் அஸ்ரப்

    எகிப்துபிரசாரகர்actuallynadeen

    தத்துவவியல் படிக்கும் மாணவி நதீன். சமூக ஊடகங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புபவர். சாதாரண மக்கள் அணுகும் வகையில் அறிவைப் பரப்பும் முறைகளில் நாட்டம் கொண்டவர்.

    அசால்ட் போலீஸ் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியவர். எகிப்து பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் தகவல்களை அதில் பதிவிடலாம். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் சமூக மாற்றத்துக்கான கடையாணி போலபெண்ணிய இயக்கத்தினர் நதீனை பார்க்கிறார்கள்.

    > மாற்றத்தை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்பு கொண்ட பெண்கள் சூழலில் நான் வளர்ந்தேன். அவர்களின் குரல்களை இன்னும் பலமாக ஒலிப்பவளாக நான் வருவேன் என ஒருபோதும் நினைத்தது இல்லை. நீங்கள் நம்பும் விஷயத்தை செய்ய நேரம் கடந்து விடவில்லை என்று நினையுங்கள்.

  • எரிக்கா பேக்கர்

    ஜெர்மனிபொறியாளர்

    GitHub-ல் பொறியியல் இயக்குநராக எரிக்கா இருக்கிறார். 2006-ல் கூகுளில் சேர்வதற்கு முன்பு அலாஸ்கா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவி பிரிவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய தொழில்நுட்பத் துறை வாழ்க்கை தொடங்கியது.

    2015-ல் Slack, 2017-ல் Patreon-ல் அவர் சேர்ந்தார். பிறகு மைக்ரோசாப்டில் சேர்ந்து, பின்னர் GitHub-க்கு மாறினார். Atipica and Hack the Hood, Code.org Diversity council, Barbie Global ஆகிய நிறுவனங்களின் ஆலோசனைக் குழுக்களில் எரிக்கா இடம் பெற்றுள்ளார். Girl Develop It இயக்குநர்கள் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். Black Girls Code-ல் தொழில்நுட்ப வழிகாட்டியாக இருந்தார். இப்போது எரிக்கா கலிபோர்னியாவில் ஓக்லாண்டில் இருக்கிறார்.

    > 2020-ல் உலகம் நிறைய மாறிவிட்டது. தன்னலமற்று இருப்பது, சேவையின் முக்கியத்துவம், தொடர்பில் இருப்பதன் மதிப்பு ஆகியவற்றின் அர்த்தத்தை நாம் மீண்டும் கற்றுக்கொள்ளும் நிலையில், உலகம் எல்லோருக்கும் சமமான இடமாக இல்லை என்பதையும் நினைவுபடுத்துவதாக உள்ளது. நீதிக்காக, விடுதலைக்காக போராட பெண்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். எல்லோரும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • டயானா பார்ரன்

    பிரிட்டன்நாடாளுமன்ற இளநிலை செயலாளர்

    பரோனஸ் பரன் 2019 ஆம் ஆண்டில் பிரிட்டனின் சிவில் சொசைட்டி அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் சிவில் சமூக அலுவலகம் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவர். குடும்ப வன்முறையை ஒழிக்க அர்ப்பணிக்கப்பட்ட SafeLives என்ற ஒரு தேசிய தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகி ஆவார். அவர் புதிய தொண்டு சிந்தனைக் குழுவில் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

    ராயல் அறக்கட்டளை மற்றும் காஸ்மிக் ரிலீஃப் அமைப்பின் அறங்காவலராக பரோனெஸ் பார்ரன் இருந்தார். ஹென்ரி ஸ்மித் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தார். பிரிட்டனுக்கான பீக்கான் விருது 2007ல் இவருக்கு அளிக்கப்பட்டது. குடும்ப வன்முறை பிரச்னைகள் தொடர்பாக ஆற்றிய பணிகளுக்காக 2011-ல் MBE (பிரிட்டிஷ் உயர் மரியாதை அந்தஸ்து) ஆக அறிவிக்கப்பட்டார்.

    > மயா ஏஞ்சலோவ் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன: ``நீங்கள் கூறியதை மக்கள் மறந்துவிடுவார்கள். நீங்கள் செய்ததை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்படுத்திய உணர்வை ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.''

  • சிண்டி பிஷப்

    தாய்லாந்து ஐ.நா பெண்கள் தூதர் / மாடல்cindysirinya

    சிண்டி சிரின்யா பிஷப் ஒரு மாடல், நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கவும் பிரசாரம் செய்து வருகிறார். ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா. பெண்கள் பிராந்திய நல்லெண்ண தூதராக இந்த ஆண்டு நியமிக்கப்பட்ட இவர், கல்வி, சமூகங்கள் மற்றும் அரசாங்கங்கள் மூலம் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தார். தாய்லாந்து புத்தாண்டு விழாக்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் இருக்க விரும்பினால், பெண்கள் “கவர்ச்சியாக” இருக்க வேண்டாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியதை அடுத்து, 2018 ஆம் ஆண்டில் அவர் #DontTellMeHowToDress இயக்கத்தை நிறுவினார்.

    ஆசியாவில் பாலின சமத்துவத்தை ஆதரிக்கும் பிராந்திய தளமான டிராகன்ஃபிளை 360-இன் அறிவு இயக்குநராகவும் உள்ளார். ஆசியாவில் பாலின சமத்துவத்துக்காக குரல் கொடுக்கும் இந்த அமைப்பில், பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் மரியாதைக்குரிய உறவுகள் குறித்த குழந்தைகளுக்கான புத்தகங்களை இவர் எழுதுகிறார்.

    > 2020 ஆம் ஆண்டில் உலகம் நிறைய மாறிவிட்டது. மாற்றத்துடன் முன்னேற்றத்திற்கான வாய்ப்பும் வருகிறது. ஒவ்வொருவரும் சம கண்ணியத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். அடுத்த தலைமுறை இளம் பெண்களுக்கு நாம் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்

  • மெக்கின்லே பட்சன்

    ஆஸ்திரேலியாவிஞ்ஞானி மற்றும் கண்டுபிடிப்பாளர்

    மெக்கின்லே பட்சன் ஏழு வயதாக இருக்கும் போதிருந்தே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். இப்போது 20 வயதாகும் அவர், பல கருவிகளை உருவாக்கியுள்ளார். மார்பக புற்றுநோய்க்கு ரேடியோதெரபி செய்து கொள்வதன் பலனை அதிகரிப்பது, வளரும் சமுதாயத்தினருக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது உள்ளிட்டவை இவரது நோக்கங்களில் அடங்கும்.

    STEM அமைப்பு மூலம் சமுதாயத்திற்கு எப்படி நன்றிக்கடன் செலுத்தலாம் என்பதை காட்டி இளம் ஆஸ்திரேலியர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் முன்மாதிரியாக விளங்குகிறார்.

    > மாற்றத்தை உருவாக்கும் நமது திறமையை எதுவும் வரையறுக்க முடியாது. ``என்னால் முடியாது என்றால், யாரால் செய்ய முடியும்? இப்போது இல்லை என்றால், எப்போது செய்வது?'' என்று உலகெங்கும் உள்ள மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

  • எவெலினா கேப்ரெரா

    ஆர்ஜென்டினாகால்பந்து பயிற்சியாளர் மற்றும் மேலாளர்evelinacabrera23

    பாதிப்புக்கு ஆளாகும் சமூக சூழலில் பிறந்தாலும், கால்பந்து பயிற்சியாளர் மற்றும் மேலாளராக உயர எதுவும் எவெலினாவுக்குத் தடையாக இருக்கவில்லை. தனது 27வது வயதில் ஆர்ஜென்டினா மகளிர் கால்பந்து சங்கத்தை இவர் உருவாக்கினார்.

    பல அணிகளை இவர் உருவாக்கினார் (பார்வையற்ற பெண்களின் கால்பந்து அணியும் அதில் அடங்கும்). சிறைக் கைதிகளுக்குப் பயிற்சி கொடுத்தார். பாதிப்புக்கு ஆளாகும் சூழலில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமியருக்கு விளையாட்டு மற்றும் கல்வியின் மூலம் உதவி செய்தார். ஆர்ஜென்டினாவில் முதல் பெண் கால்பந்து பயிற்சியாளர்களில் ஒருவராக உள்ள இவர், சமத்துவத்துக்காக தனது போராட்டங்களை விவரிக்கும் தன்னுடைய வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

    > நமது பாலினமும், பிறப்பும் நமது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருக்கக் கூடாது. இது சிரமமான பாதை தான். ஆனால், ஒன்றுபட்ட உலகில் கூட்டாக போராடினால் சமத்துவத்தை நம்மால் பெற முடியும்.

  • வென்டி பியாட்ரிஜ் கேய்ஸ்பால் ஜேக்கோ

    எல் சால்வடார்மாற்றுத்திறனாளி இயக்கவாதிwendy_caishpal

    வென்டி கேய்ஸ்பால் ஒரு தொழில்முனைவோர், செயல்பாட்டாளர், உத்வேகம் ஏற்படுத்தும் பேச்சாளர், மாற்றுத்திறனாளி மற்றும் ஆயுத சண்டையில் உயிர் தப்பியோருக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவராக இருக்கிறார்

    தலைமைத்துவம், மாற்றுத் திறனாளி மகளிர் இன்ஸ்டிடியூட் (WILD) மற்றும் சர்வதேச மொபிலிட்டி யு.எஸ்.ஏ.வில் எல் சால்வடாரின் பிரதிநிதியாக இருக்கிறார். மாற்றுத்திறனாளி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலில் ஈடுபட்டிருக்கும் அஹுவாச்சபன் சின் பாரெராஸ் என்ற மாநகராட்சித் திட்டத்தை தொடங்கியவராகவும், இயக்குநராகவும் இருக்கிறார்.

    > என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்பதை நாம் நேசிக்க வேண்டும். சமூக மாற்றத்துக்கான கருவியாக நாம் இருப்போம். நாம் செயல்படுவோம், போராடுவோம், வித்தியாசத்தை ஏற்படுத்துவோம். எல்லோரும் சேர்ந்து போராடினால், நமக்கு நல்ல உலகம் கிடைக்கும்.

  • கரோலினா கேஸ்ட்ரோ

    ஆர்ஜென்டினாஅரசாங்கம்

    ஆர்ஜென்டினா தொழிற்சாலை யூனியனில் (UIA) 130 ஆண்டு கால வரலாற்றில், நிர்வாகப் பொறுப்புக்கு வந்த முதலாவது பெண்மணி கரோலினா கேஸ்ட்ரோ. நாடு முழுக்க பாலின சமத்துவக் கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் அவர் தீவிரம் காட்டுகிறார். அதுகுறித்து பொது மக்கள் தீவிரமாக விவாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளார்.

    கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் குடும்ப தொழிற்சாலையில் மூன்றாவது தலைமுறை தலைவராக இருப்பவர் கேஸ்ட்ரோ. பழங்கால வழக்கத்தை உடைத்தெறிந்து, மார்க்கெட் சராசரியைவிட கூடுதல் சம்பளத்தில் பணிமனைகளில் பெண்களுக்கு வேலை கொடுத்துள்ளார். சமீபத்தில் இவர் ``கண்ணாடியை நாம் உடைத்தோம்'' என்ற புத்தகத்தை வெளியிட்டார். தொழில், கலை, அரசியல், அறிவியலில் சிறந்து விளங்கும் 18 ஆர்ஜென்டினா பெண்களுடன் கலந்துரையாடல்களை அதில் பதிவு செய்துள்ளார்.

    > சமத்துவத்துக்கான செயல்பாடுகளை தனித்துவமானவர்கள் செய்ய வேண்டியதில்லை. நம்மில் ஒவ்வொருவரும், எல்லா பாலினத்தவரும், நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சிறிய வாய்ப்பிலும் முயற்சிக்க வேண்டும்.

  • அக்னேஸ் சோவ்

    ஹாங்காங்ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்chowtingagnes

    அக்னேஸ் சோவ், 23 வயது ஜனநாயக சார்பு செயல்பாட்டாளர். 2014ஆம் ஆண்டு குடை இயக்கத்தின் முக்கிய நபராக இருந்தார். சீன அரசின் சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணிசமான செயல்பாட்டாளர்களில் இவரும் ஒருவர். வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து செயல்பட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது முதல் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. 15 வயது முதல் அரசியலில் தீவிர பங்களிப்பை வழங்கி வருகிறார். தனது குடும்பத்தையும் நாட்டையும் காக்க போராடிய சீன கதாநாயகி முலனின் நினைவாக, அவரது பெயரிலே இவரை செல்லமாக ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள்.

    > பெண் ஒருவர் தலைவராக இருந்தால் பெண் உரிமைக்கானதாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்றில்லை. இந்த சிஸ்டமே மாற வேண்டும், நியாயமான ஜனநாயகம் வேண்டும்.

  • பேட்ரீசியா கல்லர்ஸ்

    அமெரிக்காமனித உரிமைகள் செயல்பாட்டாளர்

    கலைஞர், ஏற்பாட்டாளர், கல்வியாளர், பிரபல பொது மேடை பேச்சாளரான பாட்ரிசியா கல்லர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் சேர்ந்தவர். கருப்பினத்தவர் வாழ்வு முக்கியம் குளோபல் நெட்வொர்க்கின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர், லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த டிக்னிடி அன்ட் பவர் நவ் என்ற அமைப்பை உருவாக்கியவர்.

    அரிசோனாவில் பிரெஸ்காட் கல்லூரியில் புதிதாக அவர் உருவாக்கியுள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்ட்ஸ் செயல்பாடு எம்.எப்.ஏ. துறையில் கல்வியாளர் குழு இயக்குநராக இருக்கிறார்.

    > அதிகாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்கள் மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள். மாற்றத்தை வற்புறுத்துங்கள் - உங்கலுக்காக அல்ல - உங்களுடன் வரும் பெண்களுக்காக அதைக் கேளுங்கள்.

  • டிசிடிசி டாங்கரெம்ப்கா

    ஜிம்பாப்வேஎழுத்தாளர், திரைப்படம் எடுப்பவர்

    மிகவும் பாராட்டு பெற்ற எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் கலாசார செயல்பாட்டாளராக டிசிடிசி இருக்கிறார். ஜிம்பாப்வேயின் கிளாசிக் என மதிக்கப்படும், விருது பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எடுத்த திரைப்படங்கள் சன்டேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட உலகெங்கும் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. ஹராரியில் வசிக்கிறார். ஆப்பிரிக்க திரைப்பட பெண் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறார்.

    இந்த ஆண்டு ஜிம்பாப்வேயில் அரசு மீது ஊழல் மற்றும் தவறான ஆளுகை குற்றச்சாட்டுகளை மக்கள் சுமத்தி பல போராட்டங்களை நடத்தினர். அதில் பங்கெடுத்தவர்களில் ட்ஸை ட்ஸையும் ஒருவர். வன்மையில் ஈடுபட தூண்டியது மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைதான அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். அவருடன் போராடியவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், அவற்றை மறுக்கும் ட்ஸை ட்ஸை, அவற்றை கைவிட வலியுறுத்தி வருகிறார்.

    > மாற்றத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். உங்களுக்கு சரிப்பட்டு வரக் கூடிய மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

  • ஷானி தண்டா

    பிரிட்டன்மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர்

    ஷானி தண்டா விருது பெற்ற மாற்றுத்திறனாளி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சமூக தொழில்முனைவோர், பிரிட்டனில் செல்வாக்கு மிகுந்த மாற்றுத்திறனாளிகளில் ஒருவராக அறியப்பட்டவர். பன்முகத்தன்மை கார்டு முன்முயற்சியாக ஆசிய மகளிர் திருவிழா மற்றும் ஆசிய மாற்றுத்திறனாளி நெட்வொர்க் உருவாக்கி, தொடர்ந்து நடத்தி வருகிறார்.

    பிரதிநிதித்துவம் கிடைக்காத சமுதாயத்தினருக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருவது என்ற பொது தேவையின் அடிப்படையில், இந்த மூன்று களங்களையும் அவர் ஒருங்கிணைத்துள்ளார்.

    > உலகம் மீட்சி பெறும் சூழலில், அனைவரும் பங்கேற்கக் கூடிய, அனைவருக்கும் நீடித்த நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது நம் எல்லோருடைய கூட்டுப் பொறுப்பு.

  • நவோமி டிக்சன்

    பிரிட்டன்தலைமை நிர்வாகி

    குடும்ப உறவுகளால் பாதிக்கப்பட்ட யூதர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக நவோமி தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். யூதர் சமுதாயத்தவர்கள் இப்போதும், எதிர்காலத்திலும் குடும்ப வன்முறைகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான கருவியாக இருக்கும் வகையில் அவர்களுக்கு கல்வி கற்பிக்கிறார்.

    யூதர் பெண்கள் உதவி அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் நவோமி, அனைத்து மத பெண்களுடனும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி காண்கிறார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக எந்த வகையிலான வன்முறைகளையும் பொறுத்துக் கொள்ளாத ஓர் உலகத்தை உருவாக்க வேண்டும் ன்பதற்காக சமுதாயத்தினர் மற்றும் மதத் தலைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    > 2020-ல் உலகம் நிறைய மாறிவிட்டது. பிறருக்கு நாம் உதவக் கூடிய வகையில், சவால்களை தாங்கும் திறனை நாம் உருவாக்கிக் கொள்வதற்குக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

  • கரேன் டோல்வா

    நார்வேபுதுமை கண்டுபிடிப்பாளர்

    2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆஸ்லோவை சேர்ந்த தனிமை கிடையாது (No Isolation) அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக கரேன் டோல்வா இருக்கிறார். தொழில்நுட்பம் மற்றும் அறிவின் மூலம் மக்களை ஒன்று சேர்ப்பது இதன் நோக்கமாகும்.

    இதுவரையில் இந்த நிறுவனம் இரண்டு பொருட்களை உருவாக்கியுள்ளது: AV1 என்ற டெலிபிரசன்ஸ் அவதார். நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளவயதினரின் தனிமையைப் போக்க இது உதவுகிறது. KOMP என்ற முதியவர்களின் விசேஷமான பயன்பாட்டுக்காக ஒரு-பட்டன் தொடர்பு சாதனத்தையும் உருவாக்கியுள்ளது.

    > போராட்டத்தை நிறுத்திக் கொள்வதற்கு கோவிட்-19 பாதிப்பை ஒரு காரணமாகக் கூறிவிடக் கூடாது. அதை ஒரு விழிப்புக்கான அழைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்: எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் இருப்பவர்கள் தான் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்க, இந்த சமயத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு ஒரு மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும்.

  • இல்வாட் எல்மன்

    சோமாலியாசமாதான செயல்பாட்டாளர்

    சோமாலியா அமைதி முயற்சிகளில் முன்னணியில் இருக்கும் இளம் பெண் தலைவர் இல்வாட் எல்மன். மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, சமுதாயங்கலை ஒருங்கிணைக்கும் முயற்சியில் உலக அளவிலான முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.

    20 வயதாக இருந்தபோது சோமாலியாவின் முதலாவது பாலியல் பலாத்கார பிரச்சினை மையத்தின் இணை நிறுவனராக இருந்தார். கடந்த ஒரு தசாப்த காலத்தில், மோதல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமியருக்கும் கௌரவமான நிலையை உருவாக்கிக் கொடுத்து அமைதியை ஏற்படுத்தும் சாம்பியனாக மாறியுள்ளார்.

    > பரிதாபங்களை சமாளிப்பது குறித்த குறுகிய கால பாடத்தை பெருந்தொற்று பாதிப்பு கற்பித்துள்ளது. மற்றவர்கள் தோல்வி அடைந்தவற்றில், பெண்கள் முன்னெடுத்துச் செல்வதை நாம் பார்த்தோம். இரண்டாவது நிலை வாய்ப்பாக பெண்களைப் பார்க்காமல், அடிப்படை முன்னுரிமையாக அவர்களைப் பார்க்க வேண்டும்.

  • ஜியோங் யுன்-கியோங்

    தென்கொரியாகே.டி.சி.ஏ. கமிஷனர்

    டாக்டர் ஜியோங் யுன்-கியோங் ``வைரஸ்-ஹண்டர்'' என குறிப்பிடப்படுகிறார். கோவிட்-19 நோய்க்கு எதிராக தென் கொரியாவின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்பவர்.

    கொரியா நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஏஜென்சியின் (KDCA) இப்போதைய ஆணையாளராக இருக்கும் இவர், முன்னர் அதன் முதல் பெண் தலைவராக இருந்தார். பெருந்தொற்று பாதிப்பு பற்றி தினமும் தகவல்களை அளிப்பதில், வெளிப்படைத்தன்மையுடன், பொறுமையான செயல்பாட்டுக்குப் பெயர் பெற்றுள்ளார்.

    > பெருந்தொற்று பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சுகாதார அலுவலர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நோய்க்கு எதிரான திறன்களை பலப்படுத்தி, உலக நாடுகளுக்கு உதவிட அதிகபட்ச அளவில் முயற்சிகள் எடுப்பேன்.

  • ஃபாங் ஃபாங்

    சீனாஎழுத்தாளர்

    ஃபாங் ஃபாங்கின் இயற்பெயர் வாங் ஃபாங். விருது பெற்ற சீன எழுத்தாளர். 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் முதலில் தாக்கிய வுஹானில் நிகழ்வுகளை இந்த ஆண்டு ஆவணப்படுத்தத் தொடங்கினார். நகரில் அபூர்வமான காட்சிகளை அவரது டைரியில் பதிவு செய்துள்ளார். தினசரி ஏற்பட்ட சவால்கள் முதல், கட்டாயமாக தனிமைப்படுத்தி வைத்ததால் உடல்ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் வரை பல விஷயங்கள் பற்றி அவர் எழுதியுள்ளார்.

    அவருடைய குறிப்புகளுக்கு அதிகமாக சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததால், ஆங்கில மொழி பெயர்ப்புகள் ஆன்லைனில் இடம் பெற்றபோது, அவருடைய பதிவுகளுக்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை தேசதுரோகி என்று கூட சீனாவில் பலர் அவரைக் கூறினர்.

    > உங்களுக்கான சுதந்திரம் உள்ளவராக இருங்கள்.

  • சோமய்யா ஃபரூக்கி

    ஆப்கானிஸ்தான்ரோபோட்டிக்ஸ் குழு தலைவர்

    சோமய்யா வாழும் ஹெராட் மாகாணத்தில் ஆப்கானிஸ்தானின் முதலாவது கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட போது, அவரும், ``Afghan Dreamers'' என்ற அவருடைய ரோபோட்டிக்ஸ் குழுவினரும் சேர்ந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர குறைந்த விலையிலான வென்டிலேட்டர்களை உருவாக்கும் பணியைத் தொடங்கினர்.

    தங்களுடைய வடிவமைப்பை பொது சுகாதார அமைச்சகத்தில் காட்டுவதற்கு சோமய்யாவும் அவரது குழுவினரும் திட்டமிட்டுள்ளனர். புரொட்டோடைப் கருவிக்கு ஒப்புதல் கிடைத்தால், எளிதில் அணுக முடியாத தொலைதூர மருத்துவமனைகளில் இதைப் பயன்படுத்த முடியும். 2002 ஆம் ஆண்டில் பிறந்த சோமய்யா அமெரிக்காவில் முதலாவது குளோபல் சேல்ஞ்ச் நிகழ்வில் தைரியமான சாதனைக்கான வெள்ளிப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றிருக்கிறார். உலக செயற்கைப் புலனறிதல் மாநாட்டில் மனிதகுலத்துக்கு பயன்தரும் செயற்கைப் புலனறிதல் முயற்சிக்கான விருது; ரா சயின்ஸ் திரைப்பட விழாவில் ஜேனட் ஐவரி-டியூயென்சிங்கின் பர்மிஷன் டு ட்ரீம் விருது, ஐரோப்பாவின் மிகப் பெரிய ரோபோட்டிக்ஸ் திருவிழாவாகக் கருதப்படும், எஸ்டோனியாவில் நடந்த ரோபோட்டிக்ஸ் துறையில் தொழில்முனைவோர் சவால் நிகழ்வில் விருது ஆகியவையும் இதில் அடங்கும்.

    > நமது எதிர்காலத்திற்கான விஷயங்களைதான் இன்று நம் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம். ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான கல்வி வாய்ப்பையும், அவர்களின் கனவுகள் நினைவாகுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

  • எய்லீன் ஃபிளின்

    அயர்லாந்து குடியரசுசெனட் உறுப்பினர்

    அயர்லாந்து நாடாளுமன்றத்தின் மேல்சபையில் இடம் பெற்ற, முதலாவது அயர்லாந்து டிராவலர்ஸ் சமுதாயத்துப் பெண்மணியாக இருந்ததன் மூலம் எய்லீன் ஃபிளின் சரித்திரத்தில் இடம் பிடித்தார்.

    அயர்லாந்து டிராவலர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட இதர சமுதாயத்தினருக்கும் உதவி செய்வதற்காக தன் பதவியை அவர் பயன்படுத்துகிறார். வெறுப்புணர்வை குற்றமாக்கும் சட்டத்தை அயர்லாந்து குடியரசில் உருவாக்க வேண்டும் என்பது அவருடைய லட்சியம்.

    > பரஸ்பரம் கவனித்துக் கொள்ளுங்கள்; பரஸ்பரம் கை கொடுங்கள்; இன்னொரு பெண்ணை கீழே தள்ள ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். இன்னொருவரின் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தால், உங்கள் மெழுகுவர்த்தி பிரகாசமாக எரிந்துவிடாது. நாம் ஒன்றுபட்டு நின்றால், நம்முடைய நெருப்புகள், உலகையே பற்ற வைக்கும்.

  • ஜேன் ஃபோண்டா

    அமெரிக்காநடிகை

    ஜேன் ஃபோண்டா இரண்டு முறை அகாடமி விருது பெற்ற நடிகை. Klute, Coming Home, On Golden Pond மற்றும் 9 to 5 போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது வெற்றிகரமான நெட்ஃபிக்ஸ் தொடரான Grace and Frankie-யில் நடக்கிறார்.

    திரைப்படங்களில் நடிப்பதை தவிற, அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக செயல்பாட்டாளராக உள்ளார். பெண்களின் உரிமைகள் முதல் தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கவும் அவர் குரல் கொடுக்கிறார்.

  • கிரண் காந்தி

    அமெரிக்காபாடகர்

    மேடம் காந்தியாக நடிக்கும் கிரண் காந்தி, நடிகை, செயல்பாட்டாளர், பாலின விடுதலையை ஏற்படுத்துதல் மற்றும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டவர்.

    > வீட்டில் இருந்தே வேலை பார்க்க நமது தொழிலை நாம் மறுவடிவாக்கம் செய்து கொள்ள வேண்டியிருப்பதால், பிள்ளைகளைக்க வனிப்பதில் ஆரோக்கியமான போக்கை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. நடைமுறைகளை மறு உருவாக்கம் செய்து, நமக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் சக்தி நமக்கு இருக்கிறது.

  • லாரென் கார்ட்னர்

    அமெரிக்காவிஞ்ஞானி

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பேராசிரியை லாரென் கார்ட்னர். சென்டர் பார் சிஸ்டம்ஸ் சயின்ஸ் மற்றும் என்ஜினியரிங்கின் இணை இயக்குநராகவும் இருக்கிறார்.

    கோவிட்-19 பெருந்தொற்று தடமறிதல் நடைமுறையை கார்ட்னரும் அவருடைய அணியினரும் உருவாக்கினர். கோவிட்-19 பாதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அளிப்பதாக அது உள்ளது. உலகெங்கும் அரசுகள், தொற்றும் தன்மையுள்ள நோய் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.

    > அனுமதிக்காக காத்திருக்காதீர்கள். உங்களுடைய இடத்தை நீங்களே எடுத்துக் கொண்டு செயல்படுங்கள்.

  • அலிசியா கார்ஸா

    அமெரிக்காமனித உரிமைகள் செயல்பாட்டாளர்

    அலிசியா கார்ஸா நிகழ்ச்சி அமைப்பாளர், அரசியல் உத்திகள் வகுப்பாளர். "The Purpose of Power: How We Come Together When We Fall Apart" (அதிகாரத்தின் அவசியம்: நாம் விலகி இருக்கும்போது எப்படி ஒன்று சேருவது) என்ற புத்தகத்தை எழுதியவர்.

    பிளாக் பியூச்சர்ஸ் லேப் மற்றும் பியூச்சர் ஆக்சன் நிதியத்தில் கருப்பினத்தவர் அமைப்பின் முதல்வராக இருக்கிறார்; கருப்பினத்தவர் வாழ்வு முக்கியம் மற்றும் கருப்பினத்தவர் வாழ்வு முக்கியம் குளோபல் நெட்வொர்க்கை உருவாக்கியவர்களில் ஒருவர்; தேசிய வீட்டு பணியாளர் கூட்டமைப்பின் உத்திகள் மற்றும் பங்களிப்புப் பிரிவு இயக்குநர், சூப்பர் மெஜாரிட்டியின் இணை நிறுவனர்; Lady Don’t Take No podcast என்ற நிகழ்ச்சியை நடத்துபவர்.

    > பூமியில் கால் பதித்து, வானிலே தலையை வைத்து, பரிசின் மீது பார்வையை வைத்திடுங்கள்.

  • இமான் காலேப் அல்-ஹாம்லி

    யேமன்மைக்ரோகிரிட் மேலாளர்

    பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் யேமன் உள்நாட்டுப் போர் நடைபெறும் பகுதியில் இருந்து 20 மைல்கள் தொலைவில், தூய்மையான, குறைந்த செலவிலான மின்சாரத்தை அளிக்கும் சோலார் மைக்ரோகிரிட் ஒன்றை உருவாக்கிய 10 பெண்களைக் கொண்ட குழுவின் தலைவராக இருக்கிறார்.

    யேமனில் மின் பகிர்மான வசதி இல்லாத பகுதிகளில் ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டத்தில் உருவாக்கப்பட்ட மூன்று திட்டங்களில் ஒன்றாக மைக்ரோகிரிட் உள்ளது. பெண்களால் நடத்தப்படும் ஒரே மைக்ரோகிரிட் ஆக இது உள்ளது. ஆண்களின் வேலையை செய்வதாக ஆரம்பத்தில் இமான் அணியினரை கேலி செய்தார்கள். இருந்தாலும், தங்கள் சமுதாயத்தினரின் மரியாதையை அவர்கள் பெற்றுள்ளனர். அதன் மூலம் தங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை பெற்றுள்ளனர். புதிய தொழில் திறன்களை உருவாக்கவும் வருமானம் கிடைத்துள்ளது.

    > யேமனில் உள்ள பெண்கள் தங்கள் கனவுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே நான் சொல்லும் தகவலாக உள்ளது. நம்பிக்கையுடன் அவர்கள் முயற்சிக்க வேண்டும், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து சிரமங்களையும் எதிர்கொண்டு கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.

  • சாரா கில்பர்ட்

    பிரிட்டன்விஞ்ஞானி

    புதிய கொரோனா வைரஸ் பற்றிய மரபணு விவரங்களை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டதும், ஆக்ஸ்போர்டில் சாராவும் அவருடைய குழுவினரும் உடனடியாக பணிகளைத் தொடங்கினர். அவர்கள் கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். அது மூன்றாம் கட்ட ஆய்வகப் பரிசோதனையில் உள்ளது.

    நுண்ணுயிரியல், உயிரி வேதியல், மூலக்கூறு வைராலஜி, தடுப்பு மருந்தியல் துறைகளில் பயிற்சி பெற்ற விஞ்ஞானியான சாரா, 2014ல் இருந்து, புதிதாக உருவாகும் நோய்களுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    > இந்த ஆண்டை நாம் தாக்குபிடித்து விடலாம். உண்மையில் கவலைப்பட வேண்டிய விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்; சுகாதாரம், கல்வி மற்றும் பிறருடன் நல்ல உறவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

  • மேகி கோப்ரன்

    எகிப்துகாப்டிக் கன்னியாஸ்திரிstephenschildrenus

    எகிப்தில் ஒதுக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வுக்காக மமா மேகி கோப்ரன் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். வசதியான வாழ்க்கையை, மதிப்புமிக்க கல்விப் பணியை உதறித் தள்ளிவி்ட இவர், ஒதுக்கப்பட்ட குழந்தைகளை தேடிப் பிடித்து, பாதங்களைக் கழுவி, கண்களை உற்றுப் பார்த்து, நீங்கள் முக்கியமானவர்கள் என்பதைச் சொல்கிறார்.

    மமா மேகியும் அவருடைய குழுவினரும் 1989-ல் இருந்து புனிதமான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதனால் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை மாறியுள்ளது. அவர்களுக்கு மன உறுதி, கல்வி, ஆரோக்கியம், எல்லாவற்றுக்கும் மேலாக கண்ணியத்தை இவர்கள் கொடுத்துள்ளனர்.

    > உங்களுடன் நீங்கள் சமரசம் செய்து கொண்டால், சொர்க்கம் மற்றும் பூமியுடன் சமரசம் செய்து கொள்வீர்கள்.

  • ரெபெக்கா கியுமி

    தான்சானியாவழக்கறிஞர்

    சிறுமியரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் உள்ளூர் என்.ஜி.ஓ.வான மிசிச்சனா இனிசியேட்டிவ் என்ற அமைப்பை உருவாக்கியவர், இப்போது நிர்வாக இயக்குநராக இருப்பவர் ரெபெக்கா கியுமி. பாலின சமத்துவக்காக வாதாடுபவர். தேசிய மற்றும் அடிப்படை நிலையில் இயக்கங்கள் நடத்துதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதில் இளம் பெண்களுடன் பணியாற்றுவதில் நீண்ட அனுபவம் உள்ளவர்.

    2019 ஆம் ஆண்டில் மிசிச்சனா இனிசியேட்டிவ் அமைப்புக்கு தான்சானியா அப்பீல் நீதிமன்றத்தில் தடம் பதிக்கும் ஒரு தீர்ப்பு கிடைத்தது. திருமண வயதை 18 என உயர்த்தி, குழந்தைத் திருமணத்துக்கு தடை விதிக்கும் உத்தரவாக அது இருந்தது.

    > பயணம் கடினமாகத் தோன்றும் போது, கடினம் தான் ஆட்சி செய்யும். போராடுவதற்கு, அந்தப் பயணத்தைத் தொடர்வதற்கு, பாலின சமத்துவத்தைப் பெறும் வரையில் நமது குரலை எழுப்புவது, பங்களிப்பு செய்வதைத் தொடர்ந்திட வேண்டும்.

  • டெட்டா ஹெட்மன்

    ஜமைக்காடார்ட்ஸ் சாம்பியன்

    ராயல் மெயிலில் டெட்டா 22 ஆண்டுகள் பணியாற்றினார். 215 பரிசுகள் வென்றிருக்கிறார். இந்த விளையாட்டில் அதிக வெற்றிகள் பெற்ற இரண்டாவது வீராங்கனை. பில் டெய்லரிடம் மட்டும் தோல்வி அடைந்தார். 341 இறுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டார்ட்ஸ் வரலாற்றில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கை. இவர் 1973-ல் இங்கிலாந்துக்குச் சென்றார். இப்போது இங்கிலாந்து டார்ட்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

    ஹார்ட் ஆஃப் டார்ட்ஸ் என்ற அறக்கட்டளையின் தூதராக, இங்கிலாந்தின் இளம் டார்ட்ஸ் தூதராக இருக்கிறார். உலக டார்ட்ஸ் சம்மேளனத்தின் இயக்குநர் குழுவில் அதலெடிக் பிரதிநிதியாக இருக்கிறார். 11 முறை இவர் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்துள்ளார். இங்கிலாந்து மகளிர் அணியில் அதிகம் விளையாடியவர்களில் இரண்டாவது நபராக இருக்கிறார்.

    > பெண்களை நான் கேட்டுக் கொள்கிறேன்: உங்கள் கனவுகளைத் தொடருங்கள், ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள். தோல்விக்கு வயது, பாலினம், இனம் ஆகியவற்றை காரணமாகச் சொல்லக் கூடாது. ஒரு முறைதான் இங்கே பிறக்கிறோம் - அதில் அதிகபட்ச அளவுக்கு செய்வோம். #Believe

  • உயாயெடு இக்பே-எட்டிம்

    நைஜீரியாதிரைப்பட இயக்குநர்

    உயாயெடு இக்பே-எட்டிம் விநோதமான, பெண்ணிய திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் LGBTQ+ ஆதரவாளர். நைஜீரியாவில் ஒதுக்கப்பட்ட மக்களைப் பற்றி செய்திகள் உருவாக்குவதில் ஆர்வம் காட்டுபவர்.

    ``காதல்'' என்ற பெயரில் அவர் தயாரித்த திரைப்படம் இரண்டு நைஜீரிய லெஸ்பியன் பெண்களைப் பற்றியதாக உள்ளது. தாங்கள் வாழும் நாட்டின் கடினமான, தன்பாலின உறவுகளின் யதார்த்த நிலையை அந்தப் படம் விளக்குகிறது. தன்பாலின சேர்க்கை மிகவும் விவாதத்துக்குரிய விஷயமாக நைஜீரியாவில் இருப்பதால், இந்தப் படம் வெளியாவது பற்றிய அறிவிப்பு வந்ததும், அரசின் தணிக்கை பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    > பெண்களே, தயவுசெய்து உங்களுக்கான இடத்தை எடுத்துக் கொள்ளங்கள். அடக்கப்பட்ட மக்களின் குரலை வெளியில் சொல்வதை நிறுத்தி விடாதீர்கள்.

  • மிஹோ இமடா

    ஜப்பான்சேக் மாஸ்டர் மது தயாரிப்பாளர்

    சேக்-மது தயாரிப்பு என்பது நீண்ட காலமாக, நூற்றாண்டு காலமாக ஆண்களின் துறையாக இருந்து வந்தது. ஜப்பான் மது தயாரிப்பு ஆலைகளில் பெண்கள் அனுமதிக்கப்பட்டது கிடையாது.

    தன் குடும்பத்தில் ஆண் மாஸ்டர் மது தயாரிப்பாளர் ஓய்வு பெற்றதை அடுத்து, தாமே பயிற்சி பெற்று, ஜப்பானில் முதலாவது பெண் சேக் மாஸ்டர் மது தயாரிப்பாளராக மாற மிஹோ முடிவு செய்தார். இப்போது நாட்டில் 20 சேக் மது தயாரிப்பு நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுகின்றன.

    > உங்கள் வாழ்வில் அர்ப்பணிப்புக்கு உரியதாக ஒரு வேலையை நீங்கள் நினைத்தால், அதில் மூழ்கிவிடுங்கள். தேர்ந்தெடுத்த தொழிலை மரியாதை மற்றும் ஒழுக்கத்துடன் செய்தால், உங்கள் இலக்குகளை அடையும் பாதையில் செல்வீர்கள்.

  • நாடீன் காடன்

    பிரான்ஸ்எழுத்தாளர்/விளக்கப்படம் வரைபவர்

    சிரியா எழுத்தாளரான நாடீன் காடன் எட்டாவது வயதில் இருந்து கதைகள் எழுதி, விளக்கப்படங்கள் வரைந்து வருகிறார். தனது புத்தகங்களில் பிரதிநிதித்துவம் குறித்து திருப்தி அடையாத நிலையில், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பிரதிநிதித்துவத்தை உணரும் வகையில் கதைகள் எழுதத் தொடங்கினார்.

    தனது சொந்த கலாசார பாரம்பர்யத்தால் உந்தப்பட்ட அவர், அரபு உலகில் படிக்கிற கலாச்சாரத்தை பரப்ப வேண்டும் என்ற உந்துதல் கொண்டு, மத்திய கிழக்கில் உள்ள குழந்தைகளின் விசேஷ தேவைகள் மற்றும் மோதல்களைத் தொடும் வகையில் கதைகள் எழுதினார்.

    > மோதலாக இருந்தாலும், கோவிட்-19 பாதிப்பாக இருந்தாலும் பெண்கள் அமைதி உருவாக்குபவர்களாக, தலைவர்களாக இருக்க முடியும். இருந்தாலும் கட்டமைப்புகள் நமக்கு எதிரானவையாக உள்ளன. பெண்கள் முழுமையாக தங்கள் திறன்களை வெளிக்காட்டுவதற்கு, அவற்றை மறு உருவாக்கம் செய்வதற்கான போராட்டம் தொடர வேண்டும்.

  • முலெங்கா கப்வெப்வே

    ஜாம்பியாகலைஞர் மற்றும் கலைப் பொருள் காப்பாளர்

    ஜாம்பிய மகளிர் வரலாற்று அருங்காட்சியகத்தை நிறுவியவர்களில் முலெங்கா முபுண்டு கப்வெப்வே ஒருவர். ஜாம்பியாவின் வளர்ச்சியில் அந்த நாட்டுப் பெண்களின் பங்களிப்பை நினைவாக்கம் செய்தமைக்காக 2020ல் பாராட்டு பெற்றார். ஜாம்பியா தலைநகர் லுசாகாவில் குழந்தைகளுக்காக நூலகங்களை உருவாக்கினார்.

    ஜாம்பியா கலை கவுன்சிலின் தலைவராக 2004 முதல் 2017ஆம் ஆண்டுவரை இருந்தார். காட்சக்கலையில் பெண்கள் மற்றும் ஜாம்பிய கிராமிய இசை, நடன சங்கம், இளைஞர் கலாசார சங்கம் போன்றவற்றிலும் அவர் பங்கெடுத்துள்ளார். யுகுஷெஃப்யா பா என்குவெனா கலாசார சங்கம், ஜாம்பியா தேசிய காட்சிக் கலை கவுன்சில், ஜாம்பியா பெண் எழுத்தாளர்கள் சங்கம் ஆகியற்றின் துணைத் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.யுனெஸ்கோ மற்றும் ஆப்பிரிக்க தஸை ஆணையத்திலும் அவர் பங்கு வகிக்கிறார். ஆர்டேரியல் நெட்வொர்க்கின் தலைவராகவும் இருக்கிறார்.

    >உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

  • டாக்டர் ஜெமிமா கரியுகி

    கென்யாடாக்டர்

    டாக்டர் ஜெமிமா கரியுகி நோய்த் தடுப்பு மருத்துவத்தில், குறிப்பாக மகப்பேறு மற்றும் குழந்தை ஆரோக்கியம் தொடர்பான மருத்துவத்தில் தீவிர நாட்டம் கொண்டவர். அமைதி கிளப் (2007-ல் போருக்குப் பிந்தைய வன்முறையின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது) தொடங்கினார், பொது சுகாதார கிளப் தொடங்கினார். இது கருப்பை புற்றுநோய் தடுப்பு முன்முயற்சிகள் எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மகப்பேறு மருத்துவம் படித்துள்ள இவர், கோவிட்-19 காலத்தில் பிரசவத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததையும், சிக்கல்கள் அதிகரித்ததையும், குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இப்படி நிகழ்ந்ததையும் கவனித்தார். போக்குவரத்து வசதிகள் இல்லாததால் சுகாதார நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை என்பதை உணர்ந்த அவர், ஒரு தீர்வை ஏற்படுத்தினார்: பெண்களை வீடுகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வாகனங்களுக்கு அனுமதிகள் வழங்க ஏற்பாடு செய்தார். இதனால் வாழ்க்கைக்கான சக்கரங்கள் என்பதாக, இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைத்தது.

    > பெருந்தொற்று நோய் உங்களை மட்டும் பாதிக்கவில்லை, எல்லோரையும் பாதித்துள்ளது. தினமும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். எதிர்வினையாற்ற பயப்பட வேண்டாம். இன்னொருவரின் தேவைக்கு, உங்களின் செயல்பாடு தான் பதிலாக இருக்கக் கூடும்.

  • குல்சும் கவ்

    துருக்கிசமூக நீதி செயல்பாட்டாளர்

    குல்சும் கவ் துருக்கி டாக்டர், கல்வியாளர். சிசுக்கொலையை தடுப்போம் அமைப்பை நிறுவியர்களில் ஒருவர். கடந்த ஆண்டில் சிசுக் கொலைகள் அதிகரிப்பு மற்றும் இஸ்தான்புல் மாநாட்டு ஒப்பந்தத்தை (குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வ கட்டைப்பு பற்றியது) ரத்து செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள் துருக்கியில் பரவலாக விமர்சிக்கப்பட்டன.

    துருக்கியில் பாலின அடிப்படையில் நடைபெறும் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த குல்சும் ஓய்வின்றி உழைத்து வருகிறார். சிசுக் கொலையால் உறவினர்களை இழந்த பல குடும்பத்தினருக்கு இவர் குரல் கொடுத்து வருகிறார்.

    > இன்றைக்கு எதிர்ப்பு காட்டும் பெண்கள் சமத்துவம், சுதந்திரம் கோருகிறார்கள். பெண்கள் எதிர்கொள்ளும் சமத்துவமற்ற நிலையை பெருந்தொற்று காலம் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தப் பெண்கள் மாற்றத்துக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இது காட்டியுள்ளது.

  • ஜாக்கி கே

    ஸ்காட்லாந்து, பிரிட்டன்கவிஞர்

    ஜாக்கி கே ஸ்காட்லாந்து கவிஞர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர். 2016-ல் இவர் ஸ்காட்லாந்தின் தேசியக் கவிஞராக அறிவிக்கப்பட்டார்.

    ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார். தன் பணிகளுக்காக பல பரிசுகள் பெற்றிருக்கிறார். 2020-ல் இலக்கிய சேவைகளை பாராட்டி CBE விருது வழங்கப்பட்டது.

    > நாம் ஒருபோதும் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது; உலகம் முழுக்க இந்த ஆண்டு நடந்த போராட்டங்கள் நம் எதிர்காலம் பற்றிய விநோதமான நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தியுள்ளன.

  • சல்சாபிலா காய்ருன்னிஸா

    இந்தோனீசியாசுற்றுச்சூழல் பிரசாரகர்jaga_rimba

    இந்தோனீசியா ஜகார்த்தாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சல்சாபிலா. காடுகள் அழிப்புக்கு எதிராக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சக அலுவலகம் எதிரே தன் பள்ளிக்கூட மாணவர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.

    15வது வயதில் ஜகா ரிம்பா என்ற இளைஞர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார். வனப் பாதுகாப்பு மட்டுமின்றி, கலிமன்னில் கடைசி மழைக்காடுகளில் ஒனறாக இருக்கும் கினிபன் வனத்தில் வீடுகளை இழந்த மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காகவும் அந்த அமைப்பு போராடி வருகிறது.

    > லாபத்தை நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ நடைமுறையில் நாம் எல்லோரும் இருக்கிறோம் என்ற உண்மையை இந்தப் பெருந்தொற்று காலம் நமக்கு உணர்த்தியுள்ளது. நாம் ஒன்றுபட்டு, பசுமையான மற்றும் நியாயமான மீட்சிக்காக போராட வேண்டிய காலம் இது.

  • மஹிரா கான்

    பாகிஸ்தான்நடிகைmahirahkhan

    மஹிரா கான் சாதாரண பாலிவுட் நட்சத்திரம் கிடையாது - பாலியல் வன்முறைக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுப்பவர், தோலின் நிறத்தை பளபளக்கச் செய்வதாகச் சொல்லும் கிரீம்களுக்கு விளம்பரம் செய்ய மறுத்தவர், இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பவர். பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் டி.வி.களில் விவரிப்புகளை மாற்றுவதன் மூலம், தன்னுடைய நாடான பாகிஸ்தானில் சமூகப் பிரச்சினைகளை சரி செய்ய விரும்புகிறார்.

    அகதிகள் பிரச்சினைகள் குறித்த விஷயங்களில் ஐ.நா. உயர் ஆணையரகத்தின் தேசிய நல்லெண்ண தூதராக மஹிரா இருக்கிறார். பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரச்சினையை எழுப்பியுள்ளார். 2006-ல் எம்.டி.வி. வி.ஜே.வாக அறிமுகம் ஆனதில் இருந்து ரசிகர்களுக்குப் பிடித்தமானவராக இருந்து வருகிறார். 11 வயது மகனை பாசத்துடன் கவனித்துக் கொள்ளும் தாயாகவும் மஹிரா இருக்கிறார்.

    > ஊக்குவிக்க வேண்டிய, மாற்றம் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றியும், அவை ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றியும் பேசுங்கள்.

  • ஏஞ்சலிக் கிட்ஜோ

    பெனின்இசைக் கலைஞர்

    நான்கு முறை கிராமி விருது பெற்ற ஏஞ்சலிக் கிட்ஜோ, சர்வதேச இசை உலகில் மகத்தான கலைஞர்களில் ஒருவராக இருக்கிறார். பெனினில் சிறுவயதில் வளர்ந்த போது இருந்த மேற்கு ஆப்ரிக்க பாரம்பரியங்கள், அமெரிக்க R & B அம்சங்கள், ஃபங்க் மற்றும் ஜாஸ், இவற்றுடன் ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க தாக்கத்தால் ஏற்பட்ட சிந்தனைகள் ஆகியவற்றை அவர் ஒன்று சேர்த்துள்ளார்.

    டாக்கிங் ஹெட்ஸின் Remain in Light ஆல்பத்தில் புலம் பெயர்ந்த ஆப்ரிக்க மக்களின் வாழ்க்கையை குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு - பெனினிஸ் பாடகரான இவர், கொண்டாடப்படும் நபராக இருக்கும், கியூபாவில் பிறந்த செலியா குரூஷின் ஆப்ரிக்க பூர்வீகம் பற்றி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். யுனிசெப் தூதர் என்ற வகையில் குழந்தைகள் நலனுக்காக ஏஞ்சலிக் குரல் கொடுத்து வருகிறார். பட்டோங்கா என்ற அறக்கட்டளை அமைப்பின் மூலமாக ஆப்ரிக்க சிறுமிகளுக்கு கல்வி அளித்து வருகிறார்.

    > அன்பு, ஒற்றுமை, வலிமையோடு நாம் ஒருவருக்கொருவர் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஒற்றுமை சமூக வகுப்புகள், இனம் மற்றும் பாலியல் பாகுபாடுகளை கடந்திருக்க வேண்டும்

  • ச்சூ கிம் டக்

    வியட்நாம்கட்டடக் கலைஞர்kim_duc_

    வியட்நாமில் குழந்தைகள் விளையாடுவதற்கான உரிமையை ஊக்குவிப்பது கட்டடக் கலைஞர் கிம் டக்கின் நோக்கமாக உள்ளது. திங்க் பிளேகிரவுண்ட்ஸ் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் டைரக்டராக உள்ள இவர், பங்காளர்கள் மற்றும் சமுதாயத்தினருடன் இணைந்து, மறுசுழற்சி செய்த பொருட்களைக் கொண்டு 180-க்கும் மேற்பட்ட பொது விளையாட்டு மைதானங்களை உருவாக்கியுள்ளார்.

    ஹனோய் நகரில் வியட்நாம் தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு தெரபி விளையாட்டு மைதானங்களை உருவாக்க இப்போது செயலாற்றி வருகிறார். நகரில் முதலாவது குறைந்த கார்பன் வள ஆடுகளமாக அது இருக்கும்.

    > வேலையிலும், வாழ்க்கையிலும் விளையாட்டுத்தனமாக இருங்கள். ஈடுபாட்டுடன் கூடிய உந்துதலுடன் கற்பதாகத்தான் எல்லாமே இருக்கும்: நீங்கள் என்ன செய்ய வேண்டும், எதை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறீர்கள் என கற்பீர்கள். தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பதில் நாட்டம் கொண்டிருந்தால், கஷ்டங்களைக் கடக்கவும், பரந்த மனதுடன் இருக்கவும் அது உதவியாக இருக்கும்.

  • சாஃபா குமாரி

    சிரியாதாவர வைராலஜிஸ்ட்

    தாவர வைராலஜிஸ்ட் என்ற வகையில், பயிர்களை அழிக்கும் நோய்களுக்குத் தீர்வு கண்டுபிடிப்பதில் டாக்டர் சாஃபா குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சிரியாவில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் விதைகளை உருவாக்கியதை அடுத்து, அலெப்போவில் இருந்து அந்த மக்களை மீட்பதில் தன் உயிரை பணயம் வைத்து முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    او سال‌های زیادی را صرف کشف گونه‌های مختلف گیاهان مقاوم در برابر ویروس کرده است. از جمله آن‌ها نوعی بذر باقلا است که در برابر ویروس زرد ی بافت مرده باقلا ()

    > 2020-ல் உலகம் நிறைய மாறிவிட்டது. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட ஓர் அணி தேவை - அதன் திறன் தான் முக்கியமே தவிர, பாலினம் முக்கியமல்ல. எந்தவொரு ஆணின் பங்களிப்புக்கும் இணையாக தங்களின் பங்களிப்பு இருக்கும் என்பதில் பெண்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

  • இஷ்தர் லக்கானி

    தென்னாப்பிரிக்காசெயல்பாட்டாளர்

    இஷ்தர் ஒரு பெண்ணியவாதி, செயல்பாட்டாளர் மற்றும் ``பிரச்னை உருவாக்குபவர்'' என கூறிக் கொள்பவர். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர், உலகெங்கும் உள்ள சமூக நீதி அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் நெட்வொர்க் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறார். மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களை முன்னெடுக்கத் தேவையான ஆதரவுகளை அளிக்கிறார்.

    இந்த ஆண்டு Center for Artistic Activism மற்றும் Universities Allied for Essential Medicines (UAEM) முன்னெடுத்த தடுப்பூசி விடுதலை இயக்கத்தில் இவர் முக்கிய பங்காற்றினார். குறைந்த விலையில் கோவிட்-19 தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பிறருடன் சேர்ந்து இவர் பணியாற்றி வருகிறார்.

    > நமது மகிழ்ச்சியை மனதில் கொண்டு ஒருபோதும் திட்டங்களை உருவாக்க கட்டமைப்பை சரி செய முயற்சிப்பதைவிட, முழுக்க பரவலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு சரியான வாய்ப்பை அளிப்பதாக, இந்த இடையூறு ஏற்படுத்திய காலக்கட்டம் அமைந்துள்ளது.

  • கிளாடியா லோபஸ்

    கொலம்பியாமேயர்

    கொலம்பியா தலைநகர் பகோட்டாவின் முதலாவது பெண் மேயராக கிளாடியா லோபஸ் இருக்கிறார். நாட்டின் மிகப் பெரிய நகராகவும் அது இருக்கிறது.

    ஆசிரியரின் மகளான இவர், பசுமை கூ்டணியில் 2014 முதல் 2018 வரையில் செனட் உறுப்பினராக இருந்தார். ஊழல் எதிர்ப்புக்கான பிரபலமான ஆலோசனை கேட்பை அவர் நடத்தினார். அதில் 11.6 மில்லியன் வாக்குகள் (99.9 சதவீதம்) உத்தேச நடவடிக்கைகளுக்கு ஆதரவாகக் கிடைத்தன: கொலம்பியா வரலாறறில் அது சாதனை அளவாகும்.

    > உலக பெண்களுக்கு நான் கூறிக் கொள்கிறேன்: நின்றுவிடாதீர்கள். கடந்த நூற்றாண்டில் தொடங்கிய சமூகப் புரட்சி நிற்காது. நமது பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த மாற்றங்களை நாம் தெளிவாகக் காண்போம்.

  • ஜோசினா மைக்கேல்

    மொசாம்பிக்சமூக நீதி செயல்பாட்டாளர்JosinaZMachel

    ஜோசினா இசட் மைக்கோல் மனித உரிமைகளுக்காக நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகிறார். இயக்கவாதி குடும்பத்தில் இருந்து வந்தவர். பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதில் தீவிர நாட்டம் கொண்டவர்.

    லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி பட்டம் பெற்றுள்ளார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட இவர், சொந்த துயரத்தை குஹ்லுகா இயக்கம் மூலமாக மாற்றி வருகிறார். பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பாக சமூக மாற்றத்தை விரைவுபடுத்த இந்த அமைப்பு உதவுகிறது. தென்னாப்பிரிக்கா முழுக்க இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல வாழ்க்கையை உருவாக்கித் தருகிறது.

    > பெண்கள் மீதான கூடுதல் அழுத்தங்களின் தாக்கம் இன்னும் மதிப்பிடப்படவில்லை. ஆனால், நமது சமாளிக்கும் திறன் காரணமாக, தாயாக, மனைவியாக, சகோதரியாக, தலைவர்களாக, தொழிற்சாலைகளின் தலைமைப் பொறுப்பாளராக இருக்கும் வாய்ப்பு உருவாகிறது, உலகிற்கு இவை தேவைப்படுகின்றன.

  • சன்னா மரின்

    பின்லாந்துபின்லாந்து பிரதமர்

    சன்னா மரின் பின்லாந்தின் பிரதமராகவும், பின்லாந்து சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். வேறு 4 கட்சிகளுடன் இணைந்து இவரது தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சிகள் அனைத்தும் பெண்களால் தலைமை ஏற்று நடத்தப்படுகின்றன: மரியா ஓஹிசலோ (க்ரீன் லீக்), லீ ஆன்டர்சன் (இடது கூட்டணி), அன்னா-மாஜா ஹென்ரிக்சன் (ஸ்வீடன் மக்கள் கட்சி) மற்றும் அன்னிகா சாரிக்கோ (சென்டர் பார்ட்டி).

    கோவிட்-19 பாதிப்பை சிறப்பாகக் கையாண்டதாக பின்லாந்து பாராட்டு பெற்றுள்ளது. நவம்பர் 2020 நிலவரத்தின்படி ஐரோப்பாவில் மிகக் குறைந்த அளவு பாதிப்பு உள்ள நாடாக பின்லாந்து இருந்தது.

    > வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் அதே சமயத்தில் பருவநிலை மாறறத்தை சமாளித்தல், கல்வியில் முதலீடு செய்தல், சமூகத்தில் நியாயமான சீர்திருத்தங்கள் செய்தல் போன்றவற்றை நம்மால் செய்ய முடியும் என்று பெண்களான நம்மால் காட்ட முடியும்.

  • ஹயாத் மில்ஷத்

    லெபனான்செயல்பாட்டாளர்

    பெண்ணிய செயல்பாட்டாளர், பத்திரிகையாளர் மற்றும் மனிதாபிமானியான ஹயாத், Fe-Male அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். லெபனாலில் பெண்ணியவாதிகளின் முன்னோடி அமைப்பாக இது உள்ளது. சமரசம் செய்து கொள்ளாத, காரணம் கூறிக் கொள்ளாத குணம் கண்ட ஹயாத், பெண்களுக்கும், சிறுமியருக்கும் நீதி, தகவல், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.

    தேசிய அளவில் பேரணிகள் நடத்துதல், ஊழலுக்கு எதிராக, தந்தைவழி ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்துதல், மாற்றத்தை ஏற்படுத்தக் கோருதல் என பல்வேறு வாய்ப்புகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    > சவால்கள் மற்றும் பின்னடைவுகள் இருந்தாலும், வாரிசு ஆட்சி முறைக்கு எதிராக பெண்கள் போராடி வெற்றி பெற்ற வரலாறுகள் உள்ளன. ஒற்றுமையாக இருந்தால், சகோதரித்துவம் மற்றும் அன்பு இருந்தால் நாம் தொடர்ந்து போராடுவோம், நம் குரல் பலம் பெருகும், நீதி மற்றும் பாலின சமத்துவமான எதிர்காலத்தைக் கேட்டு போராட முடியும்.

  • புலெல்வா எம்குடுகானா

    தென்னாப்பிரிக்காபாடகர்/பாடல் ஆசிரியர்zaharasa

    புலெல்வா எம்குடுகனா மேடைகளில் ஜஹரா என குறிப்பிடப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் இவருடைய தொடக்கம் எளிமையாக இருந்தது. பாடுவதில் உள்ள ஆர்வம் பள்ளிக்கூட பாட்டுக் குழுவில் இருந்து தொடங்கியது. தெருக்களில் பாடத் தொடங்கினார். ஆனால் 2011-ல் ஜஹராவின் முதலாவது ஆல்பம் மூன்று வாரங்களுக்குள் 20 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி இரட்டை பிளாட்டின அந்தஸ்தைப் பெற்றது.

    பாடகர் - பாடல் ஆசிரியரான இவருக்கு விருதுகள் குவிந்தன. இசை உலகில் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்துப் பேசுவதற்கு இந்தக் களத்தை அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தனக்கும் இதுபோல நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    > பிரார்த்தனை தான் கடினமான இந்த காலத்தைக் கடக்க எனக்கு உதவியது. பிரார்த்தனையை எதனாலும் மிஞ்ச முடியாது.

  • லூசி மோனாகான்

    வடக்கு அயர்லாந்துபிரசாரகர்

    பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தம்மை வடக்கு அயர்லாந்து காவல் துறையினரும், வழக்கறிஞர்களும் எப்படி நடத்தினார்கள் என்பதைச் சொல்லும்போது, தன் விவரங்களை மறைத்துக் கொள்ளும் உரிமை இருந்தும், அதை மறுத்துவிட்டு தகவல்களைச் சொன்னவர் லூசி மோனாகான். அவர் ``விரும்பி வெளியில் சுற்றுகிறார்'' என்று ஆரம்பத்தில் காவல் துறை கூறியது. அதனால் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இல்லாததாக அந்த வழக்கு இருந்தது.

    புலனாய்வில் ஏற்பட்ட தவறுகளைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் லூசி முறையிட்டார். அதனால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாலியல் பலாத்காரத்தில் சிக்கியவர்களுக்கு லூசி இப்போது ஆதரவு அளிக்கிறார். 2019-ல் நீதிபதி கில்லென் ஆய்வில் அவர் பங்கேற்றார். சட்டத்தில் 250க்கும் மேற்பட்ட மாற்றங்களுக்கு அந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டது.

    > என்னால் செய்ய முடியாது என்று அவர்கள் கூறினார்கள். எப்படியும் நான் அதைச் செய்துவிட்டேன். எனவே உங்களாலும் முடியும்!

  • டௌஸ் நம்வெஜி நிலம்பம்பா

    டி.ஆர். காங்கோபத்திரிகையாளர்

    டௌஸ் நம்வெஜி நிலம்பம்பா மல்டிமீடியா செய்தியாளர், உவெஜோ ஆப்பிரிகா முன்முயற்சி அமைப்பை நிறுவியவர். அந்த அமைப்பு இதழியல், வேலை பயிற்சி மற்றும் சமூக தொழில்முனைவு மூலமாக பெண்களுக்கு அதிகாரம் பெற உதவும் லாப நோக்கற்றதாக உள்ளது.

    மாதவிலக்கு பற்றி மூட நம்பிக்கைகளை ஒழிக்க பெண்கள் மற்றும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தூய்மையைப் பேணும் பொருட்கள் அளித்தல் போன்றவற்றை காங்கோ ஜனநாயகக் குடியரசில் அவர் மேற்கொண்டு வருகிறார்.

    > மாற்றத்தை ஏற்படுத்தும் தலைமுறையைச் சேர்ந்த பெண்களாக நாம் இருப்போம். தினசரி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய, சாத்தியமற்றது எதுவும் கிடையாது என்று எப்போதும் சொல்லக் கூடிய தலைமுறையாக இருப்போம்.

  • வானெஸ்ஸா நகாட்டே

    உகாண்டாபருவநிலை செயல்பாட்டாளர்

    23 வயதான வானெஸ்ஸா நகாட்டே, உகாண்டாவைச் சேர்ந்த பருவநிலை மாற்ற செயல்பாட்டாளர். ஆப்பிரிக்காவை சேர்ந்த ரைஸ் அப் இயக்கத்தை உருவாக்கியவர். பருவநிலை மாற்றத்தால் ஏற்கெனவே ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சர்வதேச அளவில் பிரசாரம் செய்து வருகிறார். வறுமை, மோதல் மற்றும் பாலின சமத்துவமற்ற நிலையை பருவநிலை பாதிப்பு எப்படி தீவிரப்படுத்துகிறது என்பதை எடுத்துச் சொல்வதில் கவனம் செலுத்துகிறார்.

    2020 ஜனவரியில் கிரேட்டா துன்பெர்க் மற்றும் ஐரோப்பிய செயல்பாட்டாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின் புகைப்படத்தில் நகாட்டே படத்தை அசோசியேட்டட் பிரஸ் நீக்கிவிட்டது. உலக பொருளாதார அமைப்பில் பங்கேற்றதால் படத்தை நீக்கியது. அதைத் தொடர்ந்து உலக அளவிலான பருவநிலை மாற்ற இயக்கத்தில் இனவாதம் எப்படி ஊடுருவியுள்ளது என்று நகாட்டே பேசினார். பின்னர் அந்தப் படத்தில் நகாட்டேவையும் அசோசியேட்டட் பிரஸ் சேர்த்து வெளியிட்டது. தவறான எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று கூறியது, மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. பின்னர் 2020 ஜனவரி 27-ல் அதன் எக்சிகியூட்டிவ் எடிட்டர் சல்லி புஷ்பீ தனது சொந்த பெயரில் உள்ள ட்விட்டர் மூலம், அசோசியேட்டட் பிரஸ் சார்பில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார்.

    > முடக்கநிலை மற்றும் பருவநிலை நெருக்கடியால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் நாமே தான் அதற்குத் தீர்வாகவும் இருக்கிறோம்: பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிகாரம் அளித்தால் கார்பன் உற்பத்தி செயல்பாடுகள் குறையும், பேரழிவைத் தாங்கும் செயல்பாடுகள் அதிகரிக்கும், எதிர்காலத்துக்கான பருவநிலை பாதுகாப்பு தலைவர்கள் உருவாவார்கள்.

  • டாக்டர் எதெல்ரெடா நகிமுலி-முபுங்கு

    உகாண்டாமன ஆரோக்கிய நிபுணர்

    உகாண்டாவில் மேக்கரேரெ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எதெல்ரெடா நகிமுலி-முபுங்கு, கலாச்சார ரீதியில் ஏற்புடைய தெரபி முறையை உருவாக்கியுள்ளார். குறிப்பாக எச்.ஐ.வி. பாதிப்பு மற்றும் மன அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த தெரபியை அளிக்கிறார்.

    சாதாரண சுகாதார அலுவலர்கள் கையாளக் கூடிய வகையில், குறைந்த செலவில் குழுவினருக்கு தெரபி அளிக்கும் ஒரு நடைமுறையை இவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம், மன அழுத்த அறிகுறிகளை வெகுவாகக் குறைத்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் வைரஸ் எதிர்ப்பு மருந்து செயல்பாட்டுக்கு ஒத்திசைவு நிலை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.

    > மன ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுங்கள், உங்கள் சக்தியைத் திரும்பப் பெறுங்கள்.

  • நான்டர்

    மியான்மார்பெண்ணியவாதி செயல்பாட்டாளர்

    நான்டர் பெண்ணியவாதி வழக்கறிஞர், மொழி பெயர்ப்பாளர், கதை சொல்லி மற்றும் Feminist talks, G-Taw Zagar Wyne என்ற இரண்டு பாட்காஸ்ட்களை தயாரித்துள்ளார். பர்ப்பிள் பெமினிஸ்ட் குரூப் அமைப்பை இவர் உருவாக்கியுள்ளார். யாங்கூனில் The Vagina Monologues - தயாரிப்பில் இணை இயக்குநராக இருந்துள்ளார்.

    > சமத்துவம் அற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இன்னும் நிறைய பேர் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் மனிதர்களாக மதிக்கப்படும் உலகில் வாழ்வதற்கு அது தேவை. நாம் ஒன்று சேர்ந்தால் நியாயமான உலகை உருவாக்க முடியும்.

  • வெனெட்டா எம் நே மொபர்லி

    அமெரிக்காசுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்

    வெனெட்டா மொபர்லி மனைவி, தாய், பாட்டி மற்றும் தோழியாக இருக்கிறார். கடந்த பல ஆண்டுகளில் தன் மூத்தவர்களிடம் இருந்து அறிவைப் பெற்று, இனுபியட் சமுதாயத்தில் அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை அளித்துள்ளார். அன்னை பூமியைப் பாதுகாக்க போராடுவதில் ஆர்வம் கொண்டவர்.

    > தாய்மார்களே: உங்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். உங்கள் முன்னோரின் அறிவைப் பெறும் முயற்சிகளைத் தொடருங்கள். நாம் எல்லோரும் தொடர்பு கொண்டிருக்கிறோம், நம் குழந்தைகள் வளர்வதற்கு, நமக்கு ஒரே மாதிரி உள்ளுணர்வுகள் மற்றும ஆர்வம் இருக்கிறது. என்ன குழப்பம் வந்தாலும், ஒரு தீர்வைக் கண்டுபிடியுங்கள்.

  • நெமோன்டே நென்குவிமோ

    எக்வடோர்வாவோரனி தலைவர்nemonte.nenquimo

    முன்னோர் எல்லை,கலாச்சாரம் மற்றும் அமேசான் மழைக்காடுகளில் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் வாவோரனி மலைவாழ் பெண் நெமோன்டே நென்குவிமோ.

    செய்போ அலையன்ஸ் என்ற லாபநோக்கற்ற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவராக உள்ளார். அந்த அமைப்பை மலைவாழ் மக்கள் நடத்துகின்றனர். பாஸ்டஜா மாகாணத்தில் வாவோரனி அமைப்பின் முதலாவது பெண் தலைவர் இவர். உலகில் மிகுந்த செல்வாக்கான 100 பேர் என டைம் இதழ் வெளியிட்ட பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார்.

    > நமது பூமியும், மனிதகுலமும் அழிவுநிலையில் இருக்கும்போது, இந்த ஆபத்தான நேரங்களில் நல்ல பாதையை உருவாக்கும் பலம் பெண்களான நமக்கு உள்ளது. பெண்கள் ஒன்று சேருவதற்கான தருணம் இது.

  • சானியா நிஷ்டர்

    பாகிஸ்தான்உலக அளவிலான ஆரோக்கிய தலைவர்

    உலக அளவிலான சுகாதாரம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடும் ஒரு தலைவராக டாக்டர் சானியா நிஷ்டர் இருக்கிறார். 2018-ல் இருந்து எஹ்சாஸ் ஏழ்மை ஒழிப்பு திட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார். இதன் மூலம் மொபைல் வங்கி சேவை மற்றும் சேமிப்பு கணக்குகள், இதர அடிப்படை ஆதார வளங்கள் அளித்து பல மில்லியன் பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது.

    ஏழ்மை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான பிரதமரின் சிறப்பு உதவியாளராக இருக்கும் சானியா, பாகிஸ்தானில் மக்கள் நலன் சார்ந்த முயற்சிகளில் முதல்கட்ட நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம், மக்களுக்கு அதிகாரம் கிடைக்க உதவியாக இருந்தார்.

    > நியாயமான உலகை உருவாக்க, ஏழ்மைக்கு முடிவு கட்ட, சமத்துவமின்மை மற்றும் பருவநிலை நெருக்கடிக்கு முடிவு கட்ட, தலைமுறையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பாக கோவிட்-19 நெருக்கடி அமைந்துள்ளது. இதற்கு பெண்கள் சமத்துவமாக, அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

  • பில்லிஸ் ஓமிடோ

    கென்யாசுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்

    நீதி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டு மையம் என்ற அமைப்பை உருவாக்கியவர், அதன் செயல் இயக்குநராக இருப்பவர் பில்லிஸ் ஓமிடோ. கென்யாவின் சுரங்கத் தொழிற்சாலைகளால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகள் கிடைக்க இந்த அமைப்பு போராடி வருகிறது. 2015-ல் இவர் கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு (``பசுமை நோபல்'' என குறிப்பிடப்படுகிறது) பெற்றார். ஓவினோ உஹுருவில் ஈயம் உருக்காலையை வெற்றிகரமாக மூடச் செய்தமைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

    2020 ஜூன் மாதம் சுற்றுச்சூழல் செயல்பாட்டு வழக்கில் வெற்றி கிடைத்தது. ஓவினோ உஹுரு சமுதாயத்தினருக்கு 1.3 பில்லியன் கென்ய ஷில்லிங்குகள், போராடிய CJGEA அமைப்புக்கு 700 மில்லியன் ஷில்லிங்குகள் வழங்க உத்தரவிடப்பட்டது. பில்லிஸுக்கு வழக்கு செலவுகள் தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய சுற்றுச்சூழல் மேலாண்மை ஆணையம் இதில் அப்பீல் செய்துள்ளது. இப்போது அப்பீல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    > பெரிய பாதிப்புகளுக்கு எதிராக, தங்களுக்கு உரிய இடத்தைப் பெறுவதற்கு உலகம் முழுக்க பெண்கள் மறு சிந்தனையில் ஈடுபட்டிருப்பதைப் போல, சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இருந்து புதுப்பித்துக் கொள்ள இயற்கையும் போராடிக் கொண்டிருக்கிறது. பெண்களால் மட்டும் தான் இயற்கையின் துயரங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

  • லாலேஹ் ஒஸ்மேனி

    ஆப்கானிஸ்தான்செயல்பாட்டாளர்

    ஆப்கானிஸ்தானில் பெண்களின் பெயரை பொதுவில் குறிப்பிடுவது வழக்கம் இல்லை. பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் மட்டுமே இருக்கும். திருமணத்தின் போது, அழைப்பிதழில் பெண்ணின் பெயர் இடம் பெறாது; நோயுற்றால் மருத்துவக் குறிப்புகளில் அந்தப் பெண்ணின் பெயர் இருக்காது. இறப்பின் போதும், இறப்புச் சான்றிதழில் அவரது பெயர் இருக்காது. கல்லறை கல்வெட்டிலும் கூட அவரது பெயர் இருக்காது.

    அடிப்படை உரிமை என பெண்கள் நினைத்த விஷயங்கள் மறுக்கப்படுவதால், அதிருப்தி அடைந்த செயல்பாட்டாளர் லாலேஹ் ஒஸ்மேனி வேர் இஸ் மை நேம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 3 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு, 2020-ல், தேசிய அடையாள அட்டைகளில் பெண்கலின் பெயரைப் பதிவு செய்ய ஆப்கான் அரசு ஒப்புக்கொண்டது. அவர்களுடைய பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்க்கவும் ஒப்புக்கொண்டது.

    > உலகை நல்லவிதமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாற்றம் கஷ்டமானது. ஆனால், சாத்தியமற்றது கிடையாது. ஆப்கானிஸ்தான் போன்ற பழமைவாத நாட்டில்கூட பெண்கள் தங்கள் அடையாளத்துக்காகப் போராடியதைப் பார்த்திருக்கிறீர்கள்.

  • லோர்னா பிரென்டெர்காஸ்ட்

    ஆஸ்திரேலியாநினைவாற்றல் பாதிப்பு பற்றிய ஆராய்ச்சியாளர்

    2019 ஆம் ஆண்டில் 90வது வயதில் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற போது லோர்னா பிரென்டர்காஸ்ட் உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். வயது மூப்பு துறையில் அவர் மாஸ்டர் பட்டம் பெற்றார். காலஞ்சென்ற தன் கணவருக்கு தன் பட்டத்தை அவர் சமர்ப்பித்தார். திருமணமாகி 64 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த கணவர், நினைவாற்றல் குறைபாடு காரணமாக காலமானார்.

    ஓர் ஆராய்ச்சியாளர் என்ற வகையில், நினைவாற்றல் குறைபாடு உள்ள நோயாளிகளைப் பற்றிய ஆழமான புரிதல், அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்பவர்களுடனான உறவு ஆகியவை பற்றிய புரிதல்களை உருவாக்கினார்.

    > என்ன வயதாக இருந்தாலும், இளம் வயது அல்லது முதிய வயதாக இருந்தாலும், உலகில் உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

  • ஒக்சனா புஷ்கினா

    ரஷ்யாடுமா பேரவை துணைத் தலைவர்

    ரஷ்யாவின் டுமா மன்றத்தில் குடும்பம், மகளிர் மற்றும் குழந்தைகள் விஷயங்கள் குறித்த கமிட்டியின் துணைத்தலைவராக ஒக்சனா புஷ்கினா இருக்கிறார்.

    2018-ல் அரசு டுமா கமிட்டியின் சர்வதேச விவகாரங்கள் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி மீது பல டஜன் பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கூறியபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒக்சனா மட்டும் தான் வெளிப்படையாக பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    > 2020-ல் உலகம் மாறிவிட்டது. ஆனால் துன்பங்கள் மற்றும் நெருக்கடிகளுடன் சவால்கள் தான் மக்களிடம் சிறந்த விஷயங்களை எப்போதும் வெளிக்கொண்டு வரும் என்ற பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.

  • சிபெலே ரேசி

    பிரேஸில்ஆசிரியை

    சிபெலே ரேசி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. சா பாலோ நகரில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இந சமத்துவம் கற்பித்தலில் முன்னோடியாக இருந்தார்.

    தமது பள்ளியின் நிர்வாக நடைமுறைகள் அனைத்தையும் அவர் மறு ஆய்வு செய்து, எந்த இனம், பாலினம் அல்லது அந்தஸ்தில் இருந்தாலும் எல்லோரையும் ஈடுபடுத்திய பணிச் சூழலை உருவாக்கினார்.

    > இந்த ஆண்டு சமூக மாற்றத்துக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய வைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 2021ல் ஏற்படும் சவால்களை சமாளிக்க நாம் சக்தியை சேகரித்துள்ளோம் என்று நம்புகிறேன்.

  • சுசனா ரஃபாலி (எ) சுசனாரஃபாலி

    வெனிஸ்வேலாசத்துணவு நிபுணர்

    உலகெங்கும் அவசர கால சேவை செய்வதில் 22 ஆண்டுகள் சுசனா பணியாற்றியுள்ளார். குழந்தைகளுக்கான பிரச்சினைகள் இருப்பதை வெனிசுலா மறுத்தபோது, உடனுக்குடன் அதுகுறித்த தகவலை அளிக்கும் வசதியை உருவாக்க அவர் உதவினார். குப்பம் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பதற்கு மையங்களின் நெட்வொர்க்குகளை சுசனா உருவாக்கினார்.

    குறைந்த வருவாய் உள்ள குடிமக்கள், எச்.ஐ.வி. பாதித்த பெண்கள் மற்றும் சிறைகளில் உள்ள ிளம் கைதிகளுக்கு 2020 பெருந்தொற்று காலத்தில் உணவு வழங்கும் சேவைகளை தொடர்ந்து பராமரித்தார். சத்துணவை அதிகரித்தல் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றிய சுசனா மத்திய அமெரிக்கா முழுக்க பெருந்தொற்று காலத்தில் சத்துமிகுந்த உணவு வழங்குதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    > முதலில் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு அங்கிருந்து விடுதலையைத் தொடங்குங்கள். அது இந்த முடக்கநிலையை அருமையாக ஆக்கிடும்.

  • சபனா ரோகா மகர்

    நேபாளம்தகன அறை டெக்னீசியன்

    3 மாதங்கள் வீடில்லாமல் இருந்த சபனா காத்மாண்டு சென்றார். அங்கு கேட்பாரற்ற உடல்களை தகனம் செய்யும் அமைப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

    கோவிட்-19 பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை நேபாள ராணுவம் தீவிர பாதுகாப்புடன் கையாள்கிறது. தெருக்கள் அல்லது சவ அறைகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் உடல்களை சபனாவின் அமைப்பு பெற்று வந்து, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறது. 35 நாட்களாக உடலை யாரும் கேட்காவிட்டால், இந்த அமைப்பே உடலை தகன மயானத்துக்கு எடுத்துச் சென்று நெருப்பூட்டும் சடங்குகளை செய்கிறது. இறந்தவரின் மகன் தான் இந்த சடங்குகளை செய்வது இந்து கலாசாரம்.

    > வீடில்லாத, கைவிடப்பட்ட மக்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். தெருக்களில் மரணம் அடைபவர்களுக்கு உரிய இறுதிச் சடங்குகள் கிடைக்க வேண்டும். சமூக சேவையாக இந்த வேலையை நான் செய்யவில்லை. என் மன அமைதிக்காக இதைச் செய்கிறேன்.

  • பர்டிஸ் சபேட்டி

    இரான்அனுமான மரபியலாளர்

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.ஐ.டி. மற்றும் ஹார்வர்டு பிராட் இன்ஸ்டிட்யூட், மற்றும் ஹார்வர்டு ஹ்யூக்ஸ் மருத்துவ இன்ஸ்டிட்யூட்டில் பேராசிரியையாக பர்டிஸ் சபேட்டி இருக்கிறார். மேற்கு ஆப்ரிக்காவில் மனித மற்றும் நுண்கிருமி மரபணுவியல், தகவல் கோட்பாடு மற்றும் ஊரகப் பகுதி தொற்று நோய்கள் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளில் பங்களிப்பு வழங்கியிருக்கிறார்.

    2014-ல் டைம்ஸ் இதழ் வெளியிட்ட ``ஆண்டின் சிறந்த நபர்கள்'' பட்டியலில் எபோலாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் அணியில் இடம் பெற்றிருந்தார். ``செல்வாக்கு மிகுந்த 100 பேரின்'' பட்டியலிலும் அவர் இடம் பெற்றிருந்தார். Against All Odds என்ற கல்வி வீடியோ தொடரின் தொகுப்பாளராகவும், Thousand Days என்ற Rock இசைக் குழுவில் முக்கிய பாடகராகவும் இருக்கிறார்.

    >எல்லா சவால்களையும் எதிர்கொண்டு நாம் வெற்றி கொள்வோம். நல்ல உலகை உருவாக்க விரும்புவோரின் ஒற்றுமை மற்றும் புன்னகைதான் முக்கியமானதாக இருக்கும்.

  • ஃபெப்ஃபி செட்யவதி

    இந்தோனீசியாசெயல்பாட்டாளர்Febfisetyawati

    பணப் பிரச்னைகள் மற்றும் கோவிட்-19 பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவக் கூடிய உன்ட்டுக்டெமன் ஈத் அமைப்பை இவர் உருவாக்கினார். இவரும் இவருடைய குழுவினரும் வோல்ஸ்வேகன் வேனில் தங்கள் பகுதியில் சென்று இலவச இன்டர்நெட் வசதியை அளிக்கின்றனர். (கட்டணம் செலுத்தினால் அதிக செலவாகும்). மாணவர்களுக்கு நடமாடும் நூலக வசதி அளிப்பதன் மூலம், அவர்கள் தங்கள் வேலையைத் தொடர முடிகிறது. இன்டர்நெட் சிக்னல் இல்லாத பகுதிகளில் சிக்னல் டிரான்ஸ்மிட்டர்கள் அளிக்க இந்தக் குழு இப்போது முயற்சி மேற்கொண்டுள்ளது.

    தன்னுடைய மகன் அகரா ஹேகல் விநோதமான நரம்பு மண்டல பாதிப்பால் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட துயரத்தை அடுத்து, இவர் பிறருக்கு உதவும் உந்துதலைப் பெற்றார்.

    > 2020-ல் உலகம் நிறைய மாறிவிட்டது. உலகிற்காக நாமும் மாற வேண்டும். நிறைய குறைகள் கூறுவதைவிட, பயனுள்ள சில விஷயங்களையாவது நாம் செய்வது நல்லது.

  • ரூத் ஷேடி

    பெரூதொல்லியலாளர்

    தொல்லியல் மற்றும் மானுடவியலில் டாக்டர் ஆய்வு முடித்துள்ள ரூத் ஷேடி, சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் கல்வியாளர்கள் பிரிவில் ஆராய்ச்சிக்கான துணை டீனாக இருக்கிறார். கேரல் தொல்லியல் ஆய்வு தளத்தின் பன்முக ஆராய்ச்சி இயக்குநராகவும் இருக்கிறார். அந்த இடம் அமெரிக்காவின் மிகப் பழமையான நாகரிகம் இருந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

    பெரூ நாட்டின் 5 பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கி உள்ளன. 2018-ல் அறிவியல் துறையில் பெண்களுக்கான லோ-ரியால் யுனெஸ்கோ விருது இவருக்கு வழங்கப்பட்டது. பெரு நாடாளுமன்ற கௌரவ பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    > மாற்றத்தை ஊக்குவிக்கத் தேவையான செயல்பாடுகளில் பெண்கள் ஈடுபட வேண்டும். மனிதர்கள் இணக்கத்தோடு வாழக் கூடிய, இயற்கையுடன் இயைந்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தும் முயற்சிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும்.

  • பனுசய சிதிஜிரவட்டனக்கு

    தாய்லாந்துமாணவர் பருவ செயல்பாட்டாளர்

    இந்த ஆண்டு தாய்லாந்து முழுக்க ஜனநாயக ஆதரவுப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. 22 வயதான பனுசய போன்ற மாணவர்கள் இவற்றில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர். இதற்காக இவரையும், மற்ற செயல்பாட்டாளர்களையும் கைது செய்தனர். ஆனால் பின்னர் இவரை ஜாமீனில் விடுவித்தனர்.

    ஹோட்டல் அறையில் இருந்து அவரை சாதாரண உடையில் இருந்த 4 காவலர்கள் தூக்கிச் சென்று, சக்கர நாற்காலியில் வைத்து காவல் துறை வேனுக்கு கொண்டு செல்வதைக் காட்டும் நேரடி வீடியோ ஒளிபரப்பு வீடியோக்கள் உள்ளன. தன் மீதான குற்றச்சாட்டுகளை பனுசய மறுத்துள்ளார்.

    ஆகஸ்ட் மாதம் மாணவர் பேரணியில் மேடை ஏறிய இவர், இப்போது பிரபலமாக பேசப்படும் 10 அம்ச அறிக்கையை வாசித்தார். ராஜகுடும்பத்தினர் அரசியலில் தலையிடக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ராஜகுடும்பத்தை அவமதிப்பது கிரிமினல் குற்றம் என்ற சட்டம் உள்ள சில நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று என்பதால், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன்னர், ராணி, அவர்களின் வாரிசுகளை விமர்சித்தால் 15 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்க அந்தச் சட்டம் வகை செய்கிறது. ``சமூகத்தில் எல்லோருக்கும் சம உரிமை மற்றும் கண்ணியம் வேண்டும் என்று விரும்பும் சாதாரண மாணவி நான்'' என்று அவர் கூறுகிறார்.

    > ஒவ்வொருவருமே உலகில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்தான். நீங்கள் என்னவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருங்கள், உங்கள் வாழ்க்கையை மதிப்புடையதாக ஆக்கிடுங்கள்.

  • நஸ்ரின் சோட்டோவ்டேஹ்

    இரான்மனித உரிமைகள் செயல்பாட்டாளர்

    நஸ்ரின் சோட்டோவ்டேஹ் இரான் வழக்கறிஞர். சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியல் கைதிகள், எதிர்க்கட்சி செயல்பாட்டாளர்கள், பெண்கள் மறறும் குழந்தைகளுக்கான உரிமைகளுக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். நாட்டில் மிகவும் விமர்சனக்கு உள்ளான நீதி நிர்வாக முறைக்கு எதிராக செயல்பட்டதற்கான நீண்டகால சிறை தண்டனையில், தற்காலிக விடுமுறையில் அவர் வெளியே வந்துள்ளார்.

    சிறையில் அடைக்கப்பட்டாலும், அவருடைய குடும்பத்திற்கு தொடர்ந்து மிரட்டல்கள் இருந்தாலும், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு சோட்டோவ்டேஹ் தொடர்ந்து உறுதியுடன் குரல் கொடுத்து வருகிறார்.

    > ஹிஜாப் அணிவது விருப்பத்தின் அடிப்படையிலானது- இந்த அரை மீட்டர் துணியை அவர்கள் எங்கள் மீது திணிப்பார்கள் என்றால், எங்களை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

  • காத்தி சுல்லிவன்

    அமெரிக்காவிஞ்ஞானி/விண்வெளி வீராங்கனை

    காத்தி சுல்லிவான் பாராட்டு பெற்ற விஞ்ஞானி, விண்வெளி வீராங்கனை, எழுத்தாளர் மற்றும் நிர்வாகி. 1978-ல் நாசா விண்வெளி குழுவில் இடம் பெற்ற முதலாவது ஆறு பெண்கள் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார். விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்க விண்வெளி வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

    பெருங்கடலில் அதிக ஆழமான பகுதிக்கு சென்ற முதலாவது பெண் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. விண்வெளி மற்றும் ஆழ்கடல் சாதனைகள் செய்திருப்பதால் ``உலகில் அதிக வெர்ட்டிகல் நபர்'' என்ற பட்டமும் தரப்பட்டுள்ளது.

    > 2020-ல் உலகம் நிறைய மாறிவிட்டது. இந்த உலகில் உண்மையில் வாழ்க்கை எப்படி ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது என்பதை இது நினைவுபடுத்தி உள்ளது. நமக்கு உண்மையான தேவை என்ன, எதை மதிக்க வேண்டும் என்பது குறித்து மறு மதிப்பீடு செய்யும் கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • ரிமா சுல்தானா ரிமு

    வங்கதேசம்ஆசிரியை

    வங்கதேசம், காக்ஸ் பஜாரில் அமைதிக்கான இளம் பெண் தலைவர்கள் குழுவில் ரிமா சுல்தானா ரிமு உறுப்பினராக உள்ளார். அமைதி உருவாக்கும் பெண்கள் உலகளவிலான நெட்வொர்க்கின் ஓர் அங்கமாக இந்த அைப்பு செயல்படுகிறது. மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களை அமைதியை உருவாக்கும் ஏஜென்ட்கள் மற்றும் தலைவர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது.

    ரோஹிஞ்சா அகதிகள் நெருக்கடிக்கு தன் சமுதாயத்தினரிடம் ஆதரவு திரட்டினார். பாலின அடிப்படையிலான மனிதாபிமான செயல்பாட்டுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ரோஹிஞ்சா அகதிகளுக்கு பாலின விழிப்புணர்வு, வயதுக்குரிய எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கற்பிக்கும் வகுப்புகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 1325 முதல் 2250 வரையிலான தீர்மானங்கள் குறித்து வானொலி ஒலிபரப்புகள் மற்றும் நாடகங்கள் மூலம் தன் சமுதாயத்தினரிடம் ரிமா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    > வங்கதேசத்தில் பாலின சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தங்கள் உரிமைகளுக்காக பெண்களும் சிறுமிகளும் போராடுவதன் சக்தியில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம்.

  • லியா டி

    பிரேஸில்மூன்றாம் பாலினத்தவர் மாடல்leat

    தன்னுடைய முதலாவது மாடலிங்கே கிவென்ச்சி நிறுவனத்துக்கு செய்தது என்று அதிகமான மாடல்கள் சொல்லிக் கொள்ள முடியாது ஆனால் லியா டி -க்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. 10 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் அவர் இருந்து வருகிறார். Marie Claire, Grazia மற்றும் Vogue போன்ற உயர் மதிப்புள்ள பத்திரிகைகளில் இவரைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

    2016-ல் ஒலிம்பிக் தொடக்க விழாவில் வெளிப்படையாக மூன்றாம் பாலினத்தவர் என்று தெரிவித்து பங்கேற்ற முதலாவது நபர் என்ற வகையில் லியாவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. மூன்றாம் பாலினத்தவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பாப்-கலாசாரத்தவராக லியா இருக்கிறார். ஓரின சேர்க்கையாலர்களுக்கு எதிரான பாகுபாடு பற்றி பேசுகிறவராக இருக்கிறார். இதை சமூகம் கையாள வேண்டும் என அழைப்பு விடுக்கிறார். தன்னைப் போன்று உள்ள மற்றவர்களும் தங்கள் கனவுகளை செயல்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் ஊட்டுபவராக இருக்கிறார்.

    > உலகம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் எப்போதும் அதனுடன் இணைந்து நகர்ந்து கொண்டிருக்கிறோம் - ஆனால் பெண்கள் தனியாக நடைபோட முடியாது.

  • அனா டிஜோவ்க்ஸ்

    பிரான்ஸ்இசைக் கலைஞர்

    அனா டிஜோவ்க்ஸ் சிலியின் ஹிப்-ஹாப் போராட்டக்காரராக இருக்கிறார். தன் பாடல் வரிகளில் பெண்ணியவாதி மற்றும் செயல்பாட்டாளர் குணங்களை வெளிப்படுத்தும் இவர், சமூக, கலாச்சார குறைகளை சாடுகிறார். சிலியில் அகஸ்ட்டோ பினோச்செட் சர்வாதிகார ஆட்சி நடந்தபோது இவருடைய பெற்றோர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனர். இதனால் அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளில் இவருக்கு சிறப்பு கவனம் ஏற்பட்டு, வாழ்வில் முக்கிய தடம் பதித்துவிட்டது.

    மகளிர் உரிமைகளுக்காகவும், பாலின வன்முறைக்கு எதிராகவும் 2014-ல் தனது ``வெங்கோ'' ஆல்பத்தில் ``Antipatriarch'' என்ற பாடலை அவர் மேன்மைப்படுத்தி இருந்தார். சமத்துவம் இன்மை மற்றும் ஒடுக்கப்படும் நிலைக்கு எதிரான பிரச்சாரங்களில் அதிகமாக டிஜோவ்க்ஸ் ஈடுபாடு காட்டுகிறார்.

  • ஓப்பல் டோமெட்டி

    அமெரிக்காமனித உரிமைகள் ஆர்வலர்

    ஓப்பல் டோமெட்டி, விருது பெற்ற மனித உரிமை ஆர்வலர். Black Lives Matter என்ற அமைப்பை நிறுவிய 3 பெண்களில் ஒருவர். Diaspora Rising என்ற புதிய ஊடக மற்றும் வலிமை சேர்க்கும் அமைப்பை உருவாக்கியவர்.

    நைஜீரியாவில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்த இவருடைய மனித உரிமைகள் போராட்டம், ஏறத்தாழ 20 ஆண்டுகளாக எல்லைகள் கடந்து சென்றுள்ளன.

    உண்மையான விழிப்பு ஏற்பட்டுள்ளது. அநீதியில் இருந்து ஒருவருடைய கவனத்தை திருப்ப வேண்டுமானால், உடந்தையாக இருந்தால் போதும் என இப்போது நமக்குத் தெரிந்துவிட்டது. எல்லோரும் தைரியமாக, உறுதியாக, உங்கள் சமுதாயத்தினருடன் தொடர்பில் இருப்பவராக இருக்க வேண்டும் என்று உங்களை ஊக்கப்படுத்துகிறேன்.

  • ஸ்வியட்லானா டிகனோவ்ஸ்கயா

    பெலாரஸ்அரசியல்வாதி

    ஸ்வியட்லானா டிகனோவ்ஸ்கயா தேசிய ஜனநாயக இயக்கத்தின் சார்பில் பெலாரூஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர். 2020 ஆகஸ்ட்டில் தலைமைப் பதவிக்கான தேர்தலில் தாம் அபார வெற்றி பெற்றதாக அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ அறிவித்தார். இதனால் தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாகக் கூறி நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன.

    தேர்தல் முடிந்தவுடன், தன் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி லிதுவேனியாவுக்கு ஸ்வியட்லானா சென்றுவிட்டார். அங்கிருந்து ஜனநாயக இயக்கத்தை முன்னின்று நடத்தி வருகிறார்.

    > நீங்கள் பலவீனமானவர் என்று யார் சொன்னாலும், ஒரு நொடி கூட நம்பிவிட வேண்டாம். நாம் எவ்வளவு பலசாலி என்பதை பல சமயங்களில் நாம் உணர்வது இல்லை.

  • யுலியா ட்ஸ்வெட்கோவா

    ரஷ்யாசெயல்பாட்டாளர்

    யுலியா ட்ஸ்வெட்கோவா ரஷியாவில் கிழக்கில் சிறிய தொழில் நகரத்தில் பிறந்தவர். அங்கேயே கலை, நடனம், டைரக்சன் ஆகியவற்றைப் படித்தார். பிறகு தனது நாக அரங்கம் மற்றும் சமுதாய மையம் மூலமாக, பெண்கள் உரிமைகள், ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகள், தீவிரவாத எதிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களை அவர் எழுப்பி வந்தார்.

    2019-ல் ஆபாச படங்கள் விநியோகித்ததாக அவருடைய செயல்பாடுகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ``ஓரினச்சேர்க்கை பிரசாரம்'' தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆன்லைனில் பெண்ின் உடலின் வரைபடங்களை பகிர்ந்து கொண்டதற்காக, ஆறு வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் நிலையில் இருக்கிறார். ரஷிய மனித உரிமை அமைப்புகள் அவரை அரசியல் கைதியாகக் குறிப்பிடுகின்றன. தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

    > அத்துமீறலை ஒருபோதும் சகித்துக் கொள்ளாதீர்கள். அரசிடம் இருந்து வந்தாலும், துணைவரிடம் இருந்து வந்தாலும், சமூகத்தில் இருந்து வந்தாலும் அதை சகித்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் பலமானவர்கள், உலகை மாற்றும் சக்தி படைத்தவர்கள். கருப்பான காலக்கட்டங்களை மறந்துவிடுங்கள், கனவு காண்பது, போராடுவதைத் தொடர்ந்து செய்திடுங்கள்.

  • அருஸ்ஸி உண்டா

    மெக்ஸிகோபிரசாரகர்

    சிசு கொலை விகிதம் மெக்சிகோவில் அதிகரித்து வரும் நிலையில், அருஸ்ஸியும், ``கடலின் சூன்யக்காரிகள்'' என்ற பெயரிலான பெண்ணிய அமைப்பும், பெண்களுக்கான குரலாக ஒலித்து வருகின்றன.

    இந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்ய பெண்களின் ஆதரவை அவர்கள் திரட்டினர். அன்றைய தினம் பெண்கள் வேலையை மற்றும் இதர செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு வீடுகளிலேயே இருந்து கொண்டனர்.

    > இந்த சமயத்தில் ``பெண்களால் புரட்சி ஏற்படும்'' அல்லது ``பெண்ணியம் தான் எதிர்காலம்'' என்பது போன்ற முழக்கங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால் எதிர்காலம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் தைரியமாக இருந்து, எழுந்து நிற்க வேண்டும்.

  • அனஸ்ட்டாசியா வோல்கோவா

    யுக்ரேன்தொழில்முனைவோர்

    அனஸ்ட்டாசியா வோல்கோவா தொழில்முனைவோர் மற்றும் வேளாண்மை புதுமை சிந்தநையாளராக இருக்கிறார். உணவுப் பாதுகாப்பில் உள்ள பிரச்சினைகளை சமாளிக்க அறிவியல் தொழில்நுட்ப வழிமுறைகளை இவர் கையாள்கிறார்.

    FluroSat என்ற நிறுவனத்தை 2016-ல் இவர் தொடங்கினார். பயிர் சாகுபடியை அதிகபட்ச அளவுக்கு அதிகரிப்பதற்கு மற்ற தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதுடன், டிரோன் மற்றும் செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் தகவல்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக இது உள்ளது.

    > உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருந்திடுங்கள். இப்போதைய சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு, பாசிட்டிவ் மாற்றத்தை ஏற்படுத்தும் வழிமுறைகளை நாம் அனைவரும் கண்டறிவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

  • கோட்சகோர்ன் வொராக்கோம்

    தாய்லாந்துநிலப்பரப்பு கட்டடக் கலைஞர்kotch_voraakhom

    கோட்சகோர்ன் வொராக்கோம் தன்னை ``ஒரு படாஸ் தாய் நகர்ப்புற நிலப்பரப்பு கட்டடக் கலைஞர்'' என்று கூறிக் கொள்கிறார். பாங்காக்கில் பரந்த நிலப்பரப்பில் ``வெடிப்பு ஏற்பட்ட நடைபாதைகளை'' சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தன் பணிகளை இவர் தொடங்கினார். புதிய எண்ணங்களுக்கான விதையை தூவுவதும் இவரது பணியாக இருந்தது.

    பொது இடங்களை நல்ல முறையில் பயன்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளார். பூங்கா அளவிலான பள்ளங்களை உருவாக்குவதன் மூலம், பருவநிலை மாற்றத்தின் பிரச்சினைகளில் இருந்து பெரிய நகரங்கள் விடுபட உதவுகிறார்.

    > ஒட்டுமொத்தமாக நகரமே மூழ்கும் நிலையில் இருந்தால், அதிக கட்டட நுட்பம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கும்? நமது வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு முன்னதாக, பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். ஆனால் ஒரு தனிப்பட்ட சமுதாயமாக, நாடு அல்லது பிராந்தியமாக இதைச் செய்ய முடியாது. மாறாக, ஒன்றுபட்ட உலகமாக, பருவநிலை சீராக்கத்துக்கு முறைப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த பூமி தான் நமது வீடு. நாம் ஒன்றுபட்டு செயல்படுவது தான், பூமிக்கு ஏற்பட்ட காயத்தை குணமாக்குவதற்கான ஒரே வழி.

  • சியோவ்க்சி விலெஸ்

    பிரிட்டன்விஞ்ஞானி

    சியோவ்க்சி விஞ்ஞானி மற்றும் பொது சுகாதார விஷயங்கள் பற்றிய தகவல்களை பிரசாரம் செய்பவராக இருக்கிறார். பெருந்தொற்று காலத்தில் நியூசிலாந்தில் இயற்கையின் காவலராக இருக்கிறார். கோவிட்-19 பாதிப்பின் அறிவியல் அம்சங்கள் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க, கார்ட்டூனிஸ்ட் டோமி மோரிஸ் உடன் இணைந்து முயற்சி மேற்கொண்டார்; ``நோய் பாதிப்பு உயர்வைக் கட்டுப்படுத்துதல்'' என்ற வகையில் கிராப் படத்தில் ``கோட்டை தட்டையாக்குதல்' என்ற முயற்சியை மேற்கொண்டார். அது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, முடக்கநிலை குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக பயன்படுத்தப்பட்டன.

    ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் பயோலமினெசென்ட் சூப்பர் பக்ஸ் ஆய்வகத்தின் தலைவராகவும் இருக்கிறார். தொற்று ஏற்பட்ட நுண்கிருமிகள் நம்மை எப்படி நோயுறச் செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு, புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க வசதியாக, பாக்டீரியாக்களை இரவில் ஒளிரும்படியான ஒரு நுட்பத்தை இவரும், இவரது குழுவினரும் உருவாக்கியுள்ளனர்.

    > பெருந்தொற்றில் இருந்து ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்ள மக்கள் வெற்றிகரமாக கைகோர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்பு மற்றும் கூட்டு செயல்பாடுகளால் பெரிய சவால்களை சமாளிக்க முடியும் என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.

  • எலின் வில்லியம்ஸ்

    வேல்ஸ், பிரிட்டன்மாற்றுத்திறனாளி வலைப்பூ பதிவர்

    எலின் எழுத்தாளராகவும், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். உடல் சோர்வால் படுக்கையைவிட்டு நகர முடியாத அளவுக்கு ஏற்படும் பாதிப்பு (மியால்ஜிக் என்செபலோமைலிட்டிஸ்) மற்றும் கண் பார்வை பாதிப்பு போன்றவற்றில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து My Blurred World என்ற வலைப்பூவில் தன் 16வது வயதில் இருந்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    தன் அனுபவங்களை நேர்மையாக, திறந்த மனதுடன் பதிவு செய்கிறார். ஆலோசனைகள், தன்னுடைய நிலை, சமுதாயத்தில் தனக்கு ஏற்பட்ட தடைகள் குறித்த உணர்வுபூர்வமான தாக்கம் பற்றி எழுதுகிறார். பேஷன் துறையில் அணுகுதலை மேம்படுத்தும் முக்கியத்துவம் பற்றியும் எழுதுகிறார். இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், நீங்கள் தனியாக இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தி, நம்பிக்கையை ஊட்டும் வகையில் அவருடைய பதிவுகள் உள்ளன.

    > உங்கள் கற்பனைத் திறன், சக்தி, சிந்தனைகள், வலி மற்றும் மகிழ்ச்சிக்கான வழிகளைக் கண்டுபிடியுங்கள். அது கொண்டு வரும் அனைத்து ஆக்கபூர்வ அனுபவங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு மட்டுமேயான சில விஷயங்கள் உள்ளன. அதில் எந்தவொரு வெளிசக்தியும் குறுக்கிட முடியாது.

  • அலைஸ் வோங்

    அமெரிக்காமாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர்

    மாற்றுத்திறனாளி விசிபிலிட்டி திட்டத்தை தொடங்கியவர் அலைஸ். மாற்றுத்திறனாளிகள் தங்களைப் பற்றிய விஷயங்களைப் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் அமைப்பாக இது இருக்கிறது.

    இந்த ஆண்டு மாற்றுத்திறனாளி விசிபிலிட்டி குறித்த புதிய தகவல் திரட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்: 21வது நூற்றாண்டில் நேரடி அனுபவ தகவல்கள் என்பதாக அது உள்ளது.

    > 2020-ல் உலகம் நிறைய மாறிவிட்டது. ``இயல்புக்கு'' திரும்ப வேண்டும் என்று ஒருபோதும் நான் விரும்பவில்லை.

  • லியோ யீ-சின்

    சிங்கப்பூர்டாக்டர்

    டாக்டர் லியோ யீ-சின் சிங்கப்பூரில், அதிநவீன வசதிகள் கொண்ட தொற்று நோய்கள் தேசிய மையத்தில் பணிபுரிகிறார். தொற்றும் தன்மையுள்ள நோய்கள் பரவுதலைக் கையாளும் பொறுப்பில் அவர் இருக்கிறார்.

    கோவிட்-19 பாதிப்புக்கு எதிராக சிங்கப்பூரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் முன்களத்தில் இருப்பதுடன், சிங்கப்பூரில் எச்.ஐ.வி. சிகிச்சையை மேம்படுத்துவதில் பல தசாப்தங்களை செலவழித்திருக்கிறார். சார்ஸ் போன்ற தொற்றும் தன்மையுள்ள பல நோய்களைக் கட்டுப்படுத்துவதில் அவரது குழுவினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 3 குழந்தைகளின் தாய் என்ற பொறுப்பிலும், பொது சேவைகளுக்கும் நேரம் ஒதுக்குகிறார்.

    > கோவிட்-19 எல்லோருடைய வாழ்வையும் மாற்றிவிட்டது. இருந்தாலும் பெண்களின் தலைமைத்துவ முக்கியத்தை அது மாற்றவில்லை. முன்களத்தில் நின்று இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக செயல்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கின்றனர். அவர்கள் தைரியமாக, பலமாக, தாங்கும் திறனுடன் இதைக் கையாள்கிறார்கள்.

  • மிச்செலி யோஹ்

    மலேசியாநடிகர்michelleyeoh_official

    ஹாங்காங் தற்காப்புக் கலை திரைப்படங்களில் ``ஆண்களின் ஆதிக்கமாக'' இருந்த ஸ்டண்ட் பணிகளில் பங்கேற்று மிச்செலி யோஹ் நடிப்புத் துறைக்கு வந்தார். பாண்ட் பெண்மணியாக ஹாலிவுட்டில் நுழைந்தார் (Tomorrow Never Dies படத்தில் நடித்தார்). ஆசியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் நீண்டகாலம் வெற்றிகரமாக பணியாற்றிய ஒரு சில நடிகைகளில் ஒருவராக இருந்தார்.

    30 ஆண்டுகளுக்கும் மேல் தொழிலில் ஈடுபட்ட மிச்செலி புதிய அவதார் திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களைப் பெற்றுள்ளார். மார்வெலின் முதலாவது ஆசிய சூப்பர்ஹீரோ திரைப்படமான ஷாங்-சி -யில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட்டில் ஆசியர்கள் அதிகம் இல்லை என அடிக்கடி அவர் கூறுவார். ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராக உள்ள இவர், 2030-க்குள் ஏழ்மையை ஒழிக்கும் நோக்கில் செயல்படுகிறார்.

    > கோவிட்-19 நம் எல்லோரையும் பாதிக்கிறது. ஆனால் பெண்கள் தான் அவற்றை தாங்கிக் கொள்கிறார்கள். நினைவில் வையுங்கள்: நாம் தனியாக இல்லை. நாம் தனிமையில் இருப்பதாகக் கருதினால், உதவிக்காக கை நீட்ட வேண்டும். ஆதரவு அளிக்கும் நெட்வொர்க் இருப்பது மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமானது.

  • ஆயிஷா யெசுஃபு

    நைஜீரியாசெயல்பாட்டாளர்

    ஆயிஷா யெசுஃபு நைஜீரிய செயல்பாட்டாளர். தன் நாட்டில் நல்ல நிர்வாகம் வேண்டும் என்று குரல் கொடுத்து வருபவர்.

    நமது பெண்களை திரும்பக் கொண்டு வாருங்கள் என்ற இயக்கத்தின் இணை அமைப்பாளராக இருக்கிறார். 2014-ல் நைஜீரியாவில் சிபோக் பள்ளிக்கூடத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பினர் கடத்தியதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை அவர் தொடங்கினார். 2020 ஜூன் மாதம் நைஜீரிய குடிமக்களுக்கு எதிராக கொள்ளை தடுப்பு சிறப்புப் பிரிவினர் (SARS) கொலை, பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தபோது, கருப்பினத்தவர் வாழ்வு முக்கியம் என்ற இயக்கத்தின் ஆதரவு நைஜீரியாவுக்குக் கிடைத்தது. SARS-க்கு முடிவு கட்டுவோம் என்ற பிரச்சாரத்தின் தலைவராக யுசுஃப் இருக்கிறார். நைஜீரிய காவல் துறையின் சர்ச்சைக்குரிய இந்த அமைப்பின் அத்துமீறல்கள் குறித்து அந்த அமைப்பு பிரசாரம் செய்கிறது.

    > பெண்கள் முழுமையாக, தயவுதாட்சயமின்றி உலகில் தங்களுக்கான இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆலோசனை. தங்களுக்கு இடம் வேண்டும் என கேட்பதை பெண்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் - தங்கள் வாய்ப்புகளை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

  • குல்நாஸ் ஜூஜ்பாவா

    கிர்கிஸ்தான்மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர்gulnazzhuzbaeva

    கிர்கிஸ்தானில் பார்வையின்றி 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அரசின் முக்கிய ஆவணங்களை அவர்களால் அறிய முடிவதில்லை. பார்வையற்றோருக்கான கிர்கிஸ் கூட்டமைப்பின் நிறுவனரான குல்நாஸ் ஜூஜ்பாவா, இவை அனைத்தும் பிரெய்லி வடிவில் கிடைக்கும்படி செய்து, பார்வையற்றோர் திறனை மேம்படச் செய்கிறார்.

    பார்வையற்றோர் வேலைவாய்ப்பு பெற உதவும் வகையில் திறன் பயிற்சிகள் அளிக்கும் பயிற்சித் திட்டத்தை அவருடைய குழுவினர் அளிக்கின்றனர். 2020-ல் பயிற்சி பெற்ற 22 பெரியவர்களில், ஏற்கெனவே ஆறு பேர் வேலைக்குப் போய்விட்டனர். 2 பேர் பல்கலைக்கழகப் படிப்புக்குப் பதிவு செய்துள்ளனர்.

    > வாழ்க்கை சவால்கள் நிறைந்தது: அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு அசாதாரண ஆண்டில், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பெண்கள் தியாக உள்ளத்துடன் மற்றவர்களுக்கு உதவ, அவர்களின் வேலையை அங்கீகரிப்பதுதான் முதல் பணி. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உயிர் துறந்தவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகெங்கிலும் பங்களிப்பு வழங்கிய ஒவ்வொரு பெண்ணையும் பிபிசி 100 பெண்கள் பட்டியலில் சேர்க்க முடியாது என்றாலும், 2020 ஆம் ஆண்டில், உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களைப் பற்றி சிந்திக்க இது உதவும்.

இசைவாணி, இசைக் கலைஞர்

இசைவாணி

பட மூலாதாரம், INSTAGRAM / ISAIVANI

இந்தியாவின் ஒரே பெண் கானா பாடகி என்ற பெருமை இசைவாணிக்கு உள்ளது. தமிழகத்தில் வடசென்னையைச் சேர்ந்த இவர், ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வரும் கானா பாடல் துறையில் பல ஆண்டுகளாக சாதித்து வருகிறார்.

பிரபல ஆண் கானா பாடகர்கள் பாடிய அதே மேடையில் இவர் பாடுவதே ஒரு சாதனைதான். பழைய நடைமுறையை இசைவாணி உடைத்ததை அடுத்து, மற்ற இளம் பெண் கானா பாடகர்களும் இப்போது களமிறங்கியுள்ளனர்.

"2020-ல் உலகம் மாறிவிட்டது. ஆனால் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது: பெண்கள் செயல்பாடுகளின் போக்கை மாற்றியுள்ளனர், பணி நிலைகளை மாற்றியுள்ளனர். வரக்கூடிய தலைமுறைகளுக்கு இந்த நடைமுறை நிலையாக இருக்கும்"

பில்கிஸ் பானோ, போராட்டக்குழு தலைவர்

பில்கிஸ் பானு

82 வயதான பில்கிஸ் சர்ச்சைக்குரிய குடிமக்கள் சட்டத்தற்கு எதிராக நடந்த பெண்கள் போராட்டத்தில் அமைதியாக போராடியவர். தலைநகரில் முஸ்லிம்கள் வாழும் ஷாஹீன் பாக் பகுதியில் அதிக நாட்கள் போராட்டம் நடந்த இடத்தில், போராட்டத்தில் முக்கியமானவராக அவர் இருந்தார். ``ஒடுக்கப்பட்டவர்களின் குரல்'' என்று அவரை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராணா அயூப் குறிப்பிட்டுள்ளார்.

"பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறி குரல் எழுப்புவதில், குறிப்பாக அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதில் அதிகாரம் பெற்றவர்களாக உணர வேண்டும். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராவிட்டால், தங்கள் பலத்தை எப்படிக் காட்ட முடியும்?" - பில்கிஸ் பானோ

ரிதிமா பாண்டே, பருவநிலை செயல்பாட்டாளர்

ரிதிமா பாண்டே

ரிதிமா பாண்டே பருவநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாட்டாளர். பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி 2019-ல் தன் 9வது வயதில், வேறு 15 சிறுவர் மனுதாரர்களுடன் சேர்ந்து வழக்கு தொடர்ந்தார். ஐந்து நாடுகளுக்கு எதிராக அவர் ஐ.நா.வில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரிதிமா இப்போது சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று, மற்ற மாணவர்களுக்கு அதிகாரம் கிடைக்க உதவுகிறார். அனைத்து நிலைகளிலும் எதிர்காலத்துக்காகவும், பல்லுயிர்ப் பெருக்கத்துக்காகவும் போராட உதவுகிறார். தன்னுடைய மற்றும் வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்காக ரிதிமா பாடுபட்டு வருகிறார்.

"நாம் ஒன்றுபட்டு பலமாக இருந்து, கஷ்டமான சூழ்நிலைகளில் நம்மால் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபிக்க வேண்டிய தருணம் இது. ஒரு விஷயத்தை சாதிக்க ஒரு பெண் முடிவு செய்துவிட்டால், யாரும் அவரை தடுத்துவிட முடியாது," என்று ரிதிமா கூறியிருக்கிறார்.

மானசி ஜோஷி, தடகள வீராங்கனை

மானசி

இந்திய மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனையான மானசி, இப்போது மாற்றுத் திறனாளி பாட்மிண்டன் உலக சாம்பியனாக இருக்கிறார். 2020 ஜூன் மாதம் உலக பாட்மின்டன் சம்மேளனம் அவரை எஸ்.எல்.3 ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக அறிவித்தது. மானசி பொறியாளராகவும், மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் இருக்கிறார்.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளும், மாற்றுத் திறன் விளையாட்டும் அணுகப்படும் முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது இவருடைய விருப்பமாக உள்ளது. சமீபத்தில் இவரை - அடுத்த தலைமுறை தலைவராக டைம் இதழ் பட்டியலிட்டது. அதன் ஆசிய பதிப்பின் அட்டைப்படத்தில் அவரது படம் இடம் பெற்றது. இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் என அந்த இதழ் குறிப்பிட்டிருந்தது.

"இந்த ஆண்டு பல வகைகளில் பெண்களுக்கு சவாலான ஆண்டாக உள்ளது. சவாலான நேரங்கள் உங்களை வென்றுவிட அனுமதிக்காதீர்கள்: ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் உங்களுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள்," என்று மானசி ஜோஷி கூறியிருக்கிறார்.

பிபிசி 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி?

பிபிசி 100 உமன் குழுவினர் தாங்கள் தேர்வு செய்த மற்றும் பிபிசி உலக சேவை மொழிகளின் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட பெண்களின் பெயர்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. அவர்களில் இந்த ஆண்டு அதிகமான தாக்கம் செலுத்தியவர்கள் மற்றும் செய்திகளில் இடம் பிடித்த பெண்களை தேர்வு செய்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

பிறருக்கு ஊக்கமளிக்கக் கூடிய கதைகள் உள்ளவர்கள், மிக முக்கியமான சாதனைகள் செய்தவர்கள், சமூகத்தின் மீதான நேர்மறை தாக்கம் செய்தவர்கள் ஆகியோரின் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தாங்கள் சார்ந்துள்ள துறையில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் கவனிக்கத்தக்க வகையில் செயல்பட்ட பெண்களின் பெயர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Short presentational grey line

படங்களின் காப்புரிமை: மெல்பர்ன் பல்கலைக்கழகம், கிம் சூஹியோன், குவாக் டாட், ராச்சட்டா சாங்க்ரோட், ஃபீ-குளோரியா க்ரோனெமேயர், ரக்யான் பிரமாஸ்டோ, என்.சி.ஐ.டி, தாமஸ் லெய்ஸ்னே, நந்தர், குஞ்சன் ஜோஷி, ஷாஜன் சாம், ஷாபாஸ் ஷாஜி, ஆக்ஸ் கிமியா, அராஷ் ஆஷூரினியா, யு.என்.ஹெச்.சி.ஆர், நான்சி ராசெட், எமிலி ஆல்மண்ட் பார், ஐசிஏஆர்டிஏ, 89அப், நோ ஐசோலேஷன், அன்னா கோத்ரேயேவா, போக்தனோவா ஏகதேரீனா, அனஸ்தசியா வோல்கோவா - சிட்னி மார்னிங் ஹெரால்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் / ஜான் கெய்ர்ன்ஸ், அர்வித் எர்கின்சன், ஜெரோனிமோ ஜூனிகா / அமேசான் பிரண்ட்லைன்ஸ், அலெசான்ட்ரா லோபேஸ், விக்டர் ஹியூகோ யானெஸ் ராமோஸ், ரிக் புகானன் போட்டோகிராபி, எட்டி ஹெர்னாண்டஸ் போட்டோகிராபி, ஏன்ட் ஐ போட்டோகிராபி, கிறிஸ் கோலிங்ரிட்ஜ், அப்துல் ஹமீது பெலாஹ்மிடி, குன்மி ஓவோபேட்டு, ஏலியன் ப்ரோஸ் ஸ்டுடியோ,மாஸ்டர்கார்டு அறக்கட்டளை, ஹன்னா மென்ட்ஸ், போர்ட்ஸ், வைஸ் மீடியா குரூப் எல்.எல்.சி, சைட்டட் ஸ்டுடியோஸ், பிரான்சிஸ் மெவ்ஸ், ஏஞ்சலோ ஸ்டுடியோ, சோலா ஃபோட்டோ, டேவிட் கீ, வில் கிர்க், பாலோமா ஹெர்ப்ஸ்டீன், மிகுவல் மென்டோசா ஃபோட்டோ ஸ்டுடியோ,டெனிஸ் எல்ஸ், டியோனட் வில்லியம்ஸ், அல்கால்டியா மேயர் டி போகோடா, நெட்ஒர்க் ஆப் உம்ன் பீஸ் பில்டர்ஸ் ,பிரெசிடென்ட்ஸ் ஆர்டிஸ்ட்ஸ் ரீஸ் வில்லியம்ஸ், செபாஸ்டியன் லிண்ட்ஸ்ட்ரோம், கெட்டி இமேஜஸ், ஆண்ட்ரேஸ் கெரெஸ், குல்னாஸ் ஜுஸ்பேவா, கிளாரி கோட்லி, ஆஸ்திரேலிய நீர் சங்கம், லாரா கோதிலா பிரதம அமைச்சர் அலுவலகம், ஓஷியா டோமெட்டி, மரியா எஸ்மே டெல் ரியோ,ஜியோ சோலிஸ், லாரன்ட் செரோஸ்ஸி, டி.சி.எம்.எஸ்., இன்டி கஜார்டோ, மோர்கன் மில்லர், ஹெலினா பிரைஸ் ஹாம்ப்ரெக்ட், ஜான் ருஸ்ஸோவின் மரியாதை, ஐ.நா. பெண்கள் / பிளாய் புட்பெங்.

Short presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: