அமெரிக்க அதிபராகவுள்ள ஜோ பைடனின் முன்னோர்கள் தமிழகத்தில் வாழ்ந்தார்களா?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அமெரிக்கத் துணை அதிபராக தேர்வுசெய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிசுக்கு தமிழகத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால், அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கும் தமிழகத் தொடர்புகள் இருக்கின்றனவா?
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்ட தருணத்தில் லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த வருகைதரு பேராசிரியரான டிம் வில்லாஸே - வில்ஸே, ஜோ பைடனின் முன்னோர்கள் சென்னையில் இருந்திருக்கலாம் என சுட்டிக்காட்டி gatewayhouse.in இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றிருக்கும் நிலையில், மீண்டும் அந்தக் கட்டுரையில் இருந்த தகவல்கள் பலரது கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன.
ஜோ பைடன் 2013 ஜூலை 24ஆம் தேதி துணை அதிபராக மும்பைக்கு வந்திருந்தபோது, தன்னுடைய முன்னோர்கள் அங்கு வசித்திருப்பதாகக் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு 2015ல் வாஷிங்டன் டிசியில் பேசிய பைடன், தன்னுடைய "தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தா" கிழக்கிந்திய கம்பனியில் கேப்டனாக பணியாற்றியிருப்பதாகத் தெரிவித்தார். தான் பல ஆண்டுகளுக்கு முன்பாக, 1972ல் செனட்டராகத் தேர்வுபெற்றதும் மும்பையிலிருந்து வந்த ஒரு கடித்தில் இந்தத் தகவல் இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தை பைடன் என்பவர்தான் அனுப்பியிருந்தார் என்றும் ஆனால், தான் அது தொடர்பாக அந்த நேரத்தில் ஆர்வம் காட்டவில்லையென்றும் தெரிவித்தார். பைடன் என்ற பெயருடன் ஐந்து பேர் மும்பையில் வசிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கிழக்கிந்திய நிறுவனத்தில் கேப்டனாகப் பணியாற்றிய ஜார்ஜ் பைடனின் வழிவந்தவர், தான் என்றும் தெரிவித்தார்.
இந்தத் தகவல்களை வைத்துத்தான் டிம் வில்லாஸே தனது கட்டுரையை எழுதியிருக்கிறார். அவர் தரும் தகவல்களின்படி, ஜோ பைடன் குறிப்பிடுவதைப் போல இந்தியாவில் ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை; ஆனால், வில்லியம் ஹென்ஹி பைடன், க்ரிஸ்டோஃபர் பைடன் என இரண்டு பைடன்கள் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்த இருவரைப் பற்றியும் டிம் வில்லாஸே தரும் தகவல்கள் இதுதான்: வில்லியன் ஹென்றி பைடனும் க்ரிஸ்டோஃபர் பைடனும் சகோதரர்கள். தங்கள் பதின்ம வயதின் துவக்கத்திலேயே லண்டனிலிருந்து இந்தியா வரும் கப்பலில் மூன்றாம் நிலை, நான்காம் நிலைப் பணியாளர்களாக வேலைக்குச் சேர்ந்தனர். அந்த காலகட்டத்தில் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக இந்தியாவுக்கு வருவது மிக அபாயகரமான கப்பல் பயணம்தான் என்றாலும் முன்னேறுவதற்கு வாய்ப்பிருக்கும் என்பதால் பலரும் இதில் ஆர்வம் காட்டினர்.
வில்லியன் ஹென்றி பைடன் 'மிடாஸ்' என்ற கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு அவர் படிப்படியாக முன்னேறி 'அன்னா ராபர்ட்ஸன்', 'கேஞ்சஸ் அண்ட் தாலியா' ஆகிய கப்பல்களின் கேப்டனானார். 1843ல் தனது 51வது வயதில் ரங்கூனில் அவர் காலமானார்.
இவருடைய மூத்த சகோதரனான க்ரிஸ்டோஃபர் பைடன், சென்னையிலேயே வசித்ததோடு நகரில் ஒரு பிரபலமான மனிதராகவும் விளங்கினார். 1807ல் ராயல் ஜார்ஜ் என்ற கப்பலில் கீழ் நிலைப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார் க்ரிஸ்டோஃபர். 1818ல் அவர் முதன்மைப் பணியாளராக உயர்ந்தார். 1821ல் 'பிரின்சஸ் சார்லெட் ஆஃப் வேல்ஸ்' கப்பலின் கேப்டனானார் க்ரிஸ்டோஃபர். பிறகு புதிய 'ராயல் ஜார்ஜ்' கப்பலின் கேப்டனானார். 1819ல் ஹரியர் ஃப்ரீத் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் பிறந்தனர்.

1830ல் 'பிரின்சஸ் சார்லெட்' கப்பலில் இருந்து ஓய்வுபெற்று லண்டனுக்கு அருகில் உள்ள ப்ளாக்ஹீத்தில் வசித்தார். புத்தகம் ஒன்றையும் எழுதினார். ஆனால், இவ்வளவு இளம் வயதில் (அப்போது அவருக்கு 41 வயது) எதற்கு ஓய்வுபெற வேண்டுமென நினைத்த க்ரிஸ்டோர், 'விக்டரி' என்ற கப்பலை வாங்கி, கொழும்புவுக்கும் பம்பாய்க்கும் பயணங்களை மேற்கொண்டார்.
'விக்டரி' கப்பல் அவருக்கு லாபத்தைத் தந்ததா என்பது தெரியவில்லை. இதன் பிறகு, 1839ல் 'மார்க்வி கேம்டன்' என்ற கப்பலில் தன் மனைவி, மகள்களுடன் சென்னைக்கு புறப்பட்டார். அவர் இந்தியாவுக்கு வரும் வழியில் கப்பலில் நோய்வாய்ப்பட்ட அவரது ஒரு மகள் உயிரிழந்தார். சென்னையில் கப்பல் சரக்கு கிட்டங்கியின் நிர்வாகியாக வேலைக்கும் சேர்ந்தார் க்ரிஸ்டோஃபர்.
இதற்குப் பிறகு 19 ஆண்டுகள் சென்னையில் வசித்த க்ரிஸ்டோஃபர் பைடன், கடற்பயணங்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆலோசனைகளை முன்வைத்துவந்தார். விதவைகளுக்கான அறக்கட்டளைகள், உயிரிழந்த கப்பல் பணியாளர்களின் ஆதரவற்ற உறவினர்களுக்கான அறக்கட்டளைகளில் ஈடுபாடுகாட்டினார்.
1846ல் அவரது மகன் ஹொராஷியோவும் சென்னைக்கு வந்தார். மெட்ராஸ் ஆர்ட்டிலரியில் இணைந்த அவர் அதன் கர்னலாகவும் பதவிவகித்தார். 1858 பிப்ரவரி 25ஆம் தேதி க்ரிஸ்டோஃபர் பைடன் சென்னையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பேராலய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக கற்பலகை ஒன்றும் அந்தப் பேராலயத்தினுள் இருக்கிறது.

புனித ஜார்ஜ் பேராலய பதிவேட்டில் அவர் ஆஸ்த்மாவின் காரணமாக உயிரிழந்ததாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்குப் பிறகு லண்டன் திரும்பிய அவரது மனைவி 1880வரை உயிரோடு இருந்தார். அவரது ஆவணங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. க்ரிஸ்டோஃபருக்கு இந்தியாவில் வேறு மனைவிகள் இருந்ததாகத் தெரியவில்லை.
ஜோ பைடன் குறிப்பிடுவதைப் போல ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் இங்கே யாரும் இருக்கவில்லை. "ஜோ பைடனுக்கு இந்தியாவில் முன்னோர் இருந்திருந்தால் அது க்ரிஸ்டோஃபர் பைடனாகத்தான் இருக்க வேண்டும்" என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டிம் வில்லாஸே.
இது தொடர்பாக லண்டனில் உள்ள டிம் வில்லாஸேவை பிபிசி தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் ஏன் க்ரிஸ்டோஃபரைப் பற்றி எழுதினேன் என்பதை விளக்கினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"சில வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்தபோது ஜார்ஜ் பேராலயத்தில் இருந்த அந்த நினைவுப் பலகையை புகைப்படம் எடுத்தேன். அவருக்கும் ஜோ பைடனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜோ பைடனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கிந்தியக் கம்பனியில் கேப்டனாக இருந்திருக்கிறார் என்று அவரே சொல்லியிருப்பது தெரியவந்தது. ஆகவே தொடர்ந்து ஆராயலாம் என முடிவுசெய்தேன். பல புத்தகங்கள், ஆவணங்களை படித்தபோது வில்லியம் பைடன், க்ரிஸ்டோஃபர் பைடன் என இரண்டு பேர்தான் இந்த வரையறைக்குள் பொருந்தினார்கள். க்ரிஸ்டோஃபர் பைடனைப் பற்றிப் படித்தபோது அவர் ஒரு குறிப்பிடத்தக்க மனிதர் எனப் புரிந்தது. அவருக்கு இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் பெரும் மரியாதை இருப்பது தெரிந்தது" என்கிறார் டிம் வில்லாஸே.
க்ரிஸ்டோபர் குறித்து ஜோ பைடன் நிச்சயம் பெருமைகொள்ள முடியும் என்கிறார் அவர். "க்ரிஸ்டோஃபரின் புத்தகத்தைப் படித்தால், அதில் மனித நேயத்தின் கீற்றுகள் பரவியிருப்பது புரியும். மோசமான அரசியல் அமைப்பிலும் நல்லவர்கள் இருக்க முடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஜோ பைடனுக்கும் க்ரிஸ்டோபருக்கும் இடையில் எவ்விதமான குடும்ப உறவு இருந்தாலும், அது குறித்து நிச்சயம் அவர் பெருமிதம் கொள்ள முடியும்" என்கிறார் டிம் வில்லாஸே.
(லண்டனில் இருந்து பிபிசி செய்தியார் ககன் சபர்வால் அளித்த தகவல்களுடன்.)
பிற செய்திகள்:
- அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை
- நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”
- ஜோ பைடன்: பருவநிலை மாற்றத்தை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்?
- செலின் கவுண்டர்: அமெரிக்க கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் இடம்பெற்ற தமிழ் பெண் மருத்துவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












