செலின் கவுண்டர்: அமெரிக்க கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் இடம்பெற்ற தமிழ் பெண் மருத்துவர்

செலின் கவுண்டர்

பட மூலாதாரம், Dr. Celine Gounder / Facebook

புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் ஈரோடு மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட மருத்துவர் செலின் ராணி கவுண்டர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளதாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர புதிய வழிகாட்டுக் குழுவினை அமைத்துள்ளார்.

13 பேர் கொண்ட இக்குழுவின் தலைமைப்பொறுப்பில் 3 பேர் உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவர் செலின் ராணி கவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை செலின் ராணி மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக செலின் ராணி தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி?

இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி?

பட மூலாதாரம், Getty Images

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், இந்தியாவின் m-RNA தடுப்பூசி மார்ச் மாதத்தில் தயாராக இருக்கும் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புனேவை சேர்ந்த ஜெனோவா பயோ ஃபார்மெஷுட்டிகல் நிறுவனத்தின் m-RNA தடுப்பூசிக்கு கடந்த ஜூலை மாதம் நிதி வழங்க அனுமதிக்கப்பட்டது.

மரபணு மாற்றம் சார்ந்து இது தயாரிக்கப்படுவதால், அது சம்பந்தப்பட்ட துறையிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே மனிதர்கள் மீதான பரிசோதனைக்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பை அணுக முடியும்.

"மிக விரைவிலேயே இதுதொடர்பான முன்னேற்றங்கள் குறித்த செய்தியை தெரிவிப்போம். கோடிக்கணக்கான தடுப்பூசிகள் தற்போது உலகிற்கு தேவை. Pfizer முடிவுகள் ஊக்களிக்கும் விதத்தில் இருந்தாலும், அவர்கள் 60 மில்லியன் தடுப்பூசிகளுக்கே ஒப்புக்கொண்டுள்ளனர். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், மார்ச் மாதத்துக்குள் இந்தியாவுக்கேயான m-RNA தடுப்பூசி தயார் நிலையில் இருக்கும்" என ஜென்னோவா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் சிங் தெரிவித்ததாக இந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

காணொளிக் குறிப்பு, நமத்து போகும் பட்டாசு தொழில்: சிவகாசி வாழ்வாதாரத்துக்கு வெடி வைக்கிறதா கொரோனா?

பட்டாசு வெடிக்க தடை விதிப்பதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும், பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, நலிவடைந்த நிலையில் உள்ள பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வுக்கு மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் என்ன தொழிற்சாலைகளை அமைக்கலாம் என்பதை மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய, மாநில தொழில்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, டிசம்பர் 4-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: