தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 60 சதவீத பெற்றோர்கள் ஆதரவு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்பில், சுமார் 60 சதவீத பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களைத் திறக்கலாம் என்றே தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் தற்போதுவரை திறக்கப்படவில்லை. ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களைத் திறக்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்தது.
இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பள்ளிக்கூடங்களைத் திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தப்போவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதன்படி, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்த, கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், இதற்கென கொடுக்கப்பட்ட படிவங்கள் மூலம் கருத்துக்களைத் தெரிவித்தனர். இது தவிர, அரசு பள்ளிக்கூடங்களிலும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் நிர்வாகிகளும் இணைந்து, தீர்மானம் நிறைவேற்றி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்பித்துள்ளனர்.
`முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்`
பள்ளிகள் திறக்கும் பட்சத்தில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது, பொதுத் தேர்வுகளைத் தள்ளி வைப்பது, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை வெளியிடுவது குறித்தும் பெற்றோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பருவ மழைக் காலம் துவங்கியிருப்பதால், பள்ளிகள் திறந்தால், தொற்று வேகமாக பரவும் என ஒருதரப்பினரும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, பள்ளிகளை திறக்கலாம் என மற்றொரு சாராரும், கருத்துகளை பதிவு செய்திருப்பதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
"கருத்து கேட்பு குறித்த விண்ணப்பத்தில், பள்ளிகள், திறக்கலாமா, வேண்டாமா என்ற கருத்துக்கு ஆம் அல்லது இல்லை என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. பெற்றோர் அதில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும். சுமார் 60 சதவீத பெற்றோர் பள்ளிகளைத் திறக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால், முழு நேர வகுப்பாக அல்லாமல், சுழற்சி முறையில் பின்பற்றலாம் என்பது பலரது கருத்தாக உள்ளது. இதோடு, தீபாவளி பண்டிகைக்கு பின், தொற்று பரவும் தன்மையை ஆய்வு செய்த பிறகு, பள்ளிகளை திறக்கலாம் என பல ஆசிரியர்கள் கருதுகின்றனர்," என அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் பீட்டர் ராஜா பிபிசியிடம் தெரிவித்தார்.
இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்

பட மூலாதாரம், @CMOTAMILNADU
பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனிடம் இது குறித்துக் கேட்டபோது, "மாவட்ட வாரியாக பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். இதன் அடிப்படையில் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி, பள்ளிகள் திறப்பது குறித்த இறுதி முடிவை முதல்வர்தான் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.
பாடத்திட்டம் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் சரியல்ல என்றும் கல்வித் துறை சார்பில் இது தொடர்பாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லையென்றும் அவர் கூறினார். பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகே குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்படுமென்றும் கண்ணப்பன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












