You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்தது ஏன்? - எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.
விஜய் ரசிகர்கள் நல்ல விஷயங்களைச் செய்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கட்சியை ஆரம்பித்ததாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் முயற்சிகளை மேற்கொண்டதாக நேற்று செய்திகள் வெளியாயின. உடனடியாக இந்தச் செய்தியை நடிகர் விஜய் மறுத்தார். அந்தக் கட்சியில் தன் ரசிகர்கள் இணைய வேண்டாமென்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், அவரது வீட்டின் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர் தனது செயல்களுக்கு விளக்கமளித்தார். பெரும்பாலான கேள்விகளைத் தட்டிக்கழிக்கும் வகையிலும் பதில் சொன்னார்.
விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன என செய்தியாளர்கள் கேட்டபோது, "எனக்குத் தேவைப்பட்டது. நான் மாற்றினேன்" என்று பதிலளித்தார்.
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் சொல்லியிருப்பது குறித்துக் கேட்டபோது, "அவர் சொல்லியுள்ளார்" என்று மட்டும் பதிலளித்தார்.
உங்கள் மகன் விஜயுடன் உங்களுக்கு உறவோ, தொடர்போ இல்லையெனச் சொல்லப்படுகிறதே எனக் கேட்டபோது, "கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது. கொரோனா காலத்தில் இரண்டு முறை சந்தித்துப் பேசினோம். யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று பதில் அளித்தார்.
விஜய்க்கு தெரியாமல் அவரது பெயரில் கட்சி துவங்கப்பட்டதா என்று கேட்டபோது, "அவருக்குத் தெரியவில்லையென அவர் சொல்கிறார்" என குழப்பமான வகையில் பதில் சொன்னார்.
விஜய்க்கு தெரியாமல் அவர் பெயரில் கட்சி ஆரம்பித்தது ஏன் என தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர் பெயரில் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவர் பெயரில் 93ல் ஆரம்பித்த ஒரு அமைப்பு இது. ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, பின்பு நற்பணி மன்றமாக மாறியுள்ளது. அதில் உள்ள தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும், அவர்களது நல்ல செயல்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் பதிவுசெய்தேன்" என விளக்கமளித்தார் சந்திரசேகர்.
இந்தக் கட்சி ஆரம்பிப்பதற்கான அவசியம் என்ன, இதை எப்படிப் புரிந்துகொள்வது எனக் கேட்டபோது, இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரமில்லை, எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளுங்கள் என்று கூறினார் எஸ்.ஏ.சி.
இந்தக் கட்சியின் துவக்கமே தடுமாற்றமாக இல்லையா எனக் கேட்டபோது, "எல்லாம் நல்லது நினைத்து ஆரம்பித்தோம். நல்லது நடக்கும்" என்று கூறிய எஸ்.ஏ.சி. செய்தியாளர் சந்திப்பை அத்தோடு முடித்துக்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரவல் தடுப்புப்பணிகள் மற்றும் அரசின் நலத்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் இன்று காலை உதகை வந்தடைந்தார்.
பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த பிறகு முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர், தமிழக அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் குறைந்து வருவதாக கூறினார்.
'ஆரம்பத்திலிருந்தே உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, மாநில மருத்துவ நிபுணர்கள் குழு ஆகியோர் வழங்கிய ஆலோசனைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாம் ஆரம்பத்தில் தீவிர நடவடிக்கை எடுத்ததால்தான் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது'
'காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதோடு, வீடுவீடாகச் சென்று நோய் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுப் பரவல் குறைந்திருந்தாலும், ஆர்டிஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் பாதிப்பை துல்லியமாக கண்டுபிடித்து தடுத்து வருகிறோம்' என அவர் தெரிவித்தார்.
மேலும், நீலகிரி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் கூறினார்.
'நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயர் சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள சுமார் 90கி.மீ தூரத்தில் உள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால், மாவட்டத்திலேயே அரசு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக நீலகிரி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரூ. 447.32 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 150 மாணவர்கள் மருத்துவம் படிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும்' என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: