வேல் யாத்திரை: திருத்தணியில் எல் முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது

திருத்தணியில் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டபடி வேல் யாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்க முற்பட்ட நிலையில், அதன் மாநில தலைவர் எல். முருகன், ஹெச். ராஜா உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, சென்னையில் இருந்து திருத்தணிக்கு திறந்தவெளி வேனில் முருகன், கட்சித் தொண்டர்களுடன் சென்றார். அங்கு கோயிலில் வழிபட்ட அவர் பிறகு தொண்டர்களிடையே உரையாற்றிய பிறகு யாத்திரையை தொடங்க முற்பட்டார்.

இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர், எல். முருகன், எச். ராஜா, மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

முன்னதாக தொண்டர்களிடையே பேசிய அவர், "நம்மை மற்றவர்கள் ஏளனமாக பேசும்போது நாம் சும்மா இருக்க முடியாது. திமுகவினர் ஆரம்ப காலம் முதல் இந்துக்களின் மத உணர்வுகளை சீண்டினார்கள். அதுதான் அவர்களின் வேலை. நம்மைத் தடுக்க திமுகவுக்கும் அவர்களுடைய கூட்டணி கட்சியினரும் யார்? அவர்களுக்கு நம்மை எதிர்க்க எந்த யோக்கியதையும் அருகதையும் கிடையாது," என்று பேசினார்.

"நாம் போற்றிப்பாடும் கந்தர் சஷ்டி கவசத்தை விமர்சிப்பவர்களின் பின்னணியில் ஒரு கயவர் கூட்டம் இருக்கிறது. அந்த கட்சியினர்தான் கருப்பர் கூட்டம் என்ற குழுவினருக்கு சட்ட உதவிகளை செய்தார்கள்."

"நம்மை மற்றவர்கள் ஏளனமாக பேசும்போது நாம் சும்மா இருக்க முடியாது. திமுகவினர் ஆரம்ப காலம் முதல் இந்துக்களின் மத உணர்வுகளை சீண்டினார்கள். அதுதான் அவர்களின் வேலை. நாம் யாரை கும்பிட்டால் அவர்களுக்கு என்ன? திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சியினருக்கும் நம்மை எதிர்க்க எந்த யோக்கியதையும் அருகதையும் கிடையாது."

"நாம் போற்றிப்பாடும் கந்தர் சஷ்டி கவசத்தை விமர்சிப்பவர்களின் பின்னணியில் ஒரு கயவர் கூட்டம் இருக்கிறது. அந்த கட்சியினர்தான் கருப்பர் கூட்டம் என்ற குழுவினருக்கு சட்ட உதவிகளை செய்தார்கள்," என்று முருகன் பேசினார்.

சென்னையில் இருந்து புறப்பட திடீர் அனுமதிபாரதிய ஜனதா கட்சி அறிவித்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், எல். முருகன் தலைமையிலான பாஜகவினர் திருத்தணிக்கு செல்ல காவல்துறையினர் திடீரென்று அனுமதி வழங்கினார்கள். சென்னை எல்லையில் நாசரேத் பகுதியில் சில நிமிடங்கள் அவர்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மேலும் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.

அவர்கள் செல்லும் பாதையில் காவல்துறையினரே வழியமைத்து போக்குவரத்து சீராக இருக்க நடவடிக்கை எடுத்தனர். எனினும், திருத்தணியில் கோயிலுக்கு செல்ல ஐந்து வாகனங்களில் மட்டுமே பாஜகவினரை காவல்துறையினர் அனுமதித்தனர்.

தமிழ்நாட்டில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6ஆம் தேதிவரை, மாநில பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த யாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த யாத்திரைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் இந்த தகவலை தமிழக அரசு கூறியது.

இருப்பினும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து யாத்திரை தொடங்க உத்தேசித்துள்ள பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் வெள்ளிக்கிழமை காலையில் திருத்தணி நோக்கி புறப்பட்டனர்.

கையில் வேலை ஏந்தியவாறு தொண்டர்கள் சூழ வேல் யாத்திரைக்காக பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட வேனில் முருகன் சென்றுள்ளார். கொரோனா தொற்று காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என்று ஏற்கெனவே அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இருந்தபோதும், சமூக இடைவெளியின்றி கூட்டத்தில் செல்பவர்கள் நெருக்கமாக இருந்தபடி ஊர்வலத்தில் பாஜகவினர் சென்றனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய முருகன், "எம்பெருமான் தமிழ் கடவுள் முருக பெருமாளின் வழிகாட்டுதலுடன் எங்களுடைய யாத்திரையை திட்டமிட்டபடி தொடங்கியிருக்கிறோம்" என்று கூறினார்.

"எங்களுடைய வெற்றிவேல் யாத்திரைக்கு முருக பெருமாள் ஆசி வழங்கியிருக்கிறார். அவரை இழிவுபடுத்திய அந்த கருப்பர் கூட்டத்துக்கும் கயவர் கூட்டத்துக்கும் இந்த வெற்றி வேல் துள்ளிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த வேல் தமிழகம் முழுவதும் உலா வரும். இந்த வேல் யாத்திரை, தமிழர்களுக்கு எதிராக, தமிழ் பண்பாட்டுக்கு எதிராக, தமிழ் கலாசாரத்துக்கு எதிராக, தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களுடைய முகத்திரையை கிழிப்பதற்காக இந்த யாத்திரை புறப்பட்டிருக்கிறது," என்று எல். முருகன் கூறினார்.

"கோடிக்கணக்கான தமிழர்களின் வீடுகளில் ஒலிக்கும் கந்தர் சஷ்டி கவசத்தை இழிபடுத்தும் வகையில் ஒரு கூட்டம் செயல்பட்டபோது அதை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சிதான் அந்த கயவர்களை அடையாளம் காண முற்பட்டது. அதன் பிறகுதான் அதில் சிலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது யார்? அதில் பின்னணியில் இருக்கும் செந்தில் வாசன், கருப்பர் கூட்டத்துக்குப் பின்னணியில் இருந்தவர். அவர் திமுக தொழில்நுட்ப அணியில் இருந்தாரா இல்லையா? திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏன் இதுவரை செந்தில்வாசன் பற்றிய விவரத்தை தமிழக மக்களிடம் வெளியிட மறுக்கிறார்?" என்று எல். முருகன் கேள்வி எழுப்பினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: