You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாட்ஸ் ஆப்பில் 7 நாட்களில் மெசேஜுகள் தானாக அழிந்துவிடும் ஆப்ஷன் அறிமுகம் மற்றும் பிற செய்திகள்
"மெசேஜுகளை காணாமல் போகச் செய்வது" (disappearing messages) என்ற புதிய ஆப்ஷனை வாட்சப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி ஒரு செய்தி அனுப்பிய ஏழு நாட்கள் கழித்து, அதனை அனுப்பியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இருவரது மொபைலிலுமே மெசேஜுகள் தானாக அழிந்துவிடும்.
இது சேட்டுகளை தனிப்பட்ட முறையில் பாதுகாக்க உதவும் என பேஸ்புக்கின் வாட்சப் செயலி தெரிவிக்கிறது.
எனினும், மெசேஜுகளை பெறுபவர் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தோ அல்லது தங்களுக்கு வேண்டிய செய்திகள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மற்றவர்களுக்கு ஃபார்வாரட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
"நீங்கள் செய்த சேட்கள் நிரந்தரமாக உங்கள் போனில் இருக்காதது மனநிம்மதியை தரும். நீங்கள் அழிக்க மறந்த மெசேஜுகள் இதனால் ஏழ நாட்களுக்கு பிறகு தானாக அழிந்துவிடும்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
'அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவார்'- ஜோசிய கணிப்பை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்துவிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் பைடனுக்கும் டிரம்புக்கும் கடுமையான போட்டி நிலவும், ஆனால் இறுதியில் டிரம்பே வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
''எனது ரசிகர்கள் என் தந்தை கட்சியில் சேர வேண்டாம்'' - நடிகர் விஜய்
தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள அரசியல் கட்சிக்கும், தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் அக்கட்சியில் இணைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் விஜய் தனது கட்சியைப் பதிவு செய்துள்ளார் என்று ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டன.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தக் கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இன்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
நடிகர் விஜய் சார்பில் அரசியல் கட்சியின் பெயர் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய முடிவு - எடப்பாடி கே. பழனிசாமி
ஆன்லைன் ரம்மி விளையாடிய பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதால், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கே. பழனிசாமி, "ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய பல தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வருகின்றன. இந்த இணைய வழி ரம்மி சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசு இவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த விளையாட்டுகளைத் தடைசெய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடக்கும் வழக்கில், இந்த விளையாட்டுகளைத் தடைசெய்ய முயற்சி நடக்கிறது என்ற செய்தி அரசின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
விரிவாக படிக்க: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய முடிவு
ராமேஸ்வரம் கோயில் தங்க நகை எடை குறைவு: '40 ஆண்டு பயன்பாட்டால் தேய்மானம்' - ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நகைகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும், 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டதால் நகைகளில் தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுவாமி நகைகளை 40 ஆண்டுகளுக்குப் பின் மறுமதிப்பீடு செய்தபோது, அவற்றில் பல நகைகளின் எடை குறைவாக இருந்தது. இதனையடுத்து திருக்கோயில் பணியாளர்கள் 47 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம், செம்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட 350க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்கள் அனைத்தும் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: