விஜய் அரசியல் கட்சி: ’அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சி தொடங்குகிறாரா? - எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்

தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள அரசியல் கட்சிக்கும், தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் அக்கட்சியில் இணைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் விஜய் தனது கட்சியைப் பதிவு செய்துள்ளார் என்று ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டன.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தக் கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இன்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

நடிகர் விஜய் சார்பில் அரசியல் கட்சியின் பெயர் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அறிக்கையில் கூறியுள்ளது என்ன?

இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவா்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் பிபிசியிடம் விளக்கம்

இது விஜயின் 'அரசியல் கட்சி அல்ல', என்னுடைய முயற்சிதான் என்று அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''நாங்கள் கட்சிப்பெயரை பதிவு செய்தது உண்மைதான். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் அங்கீகாரத்திற்காக இதைச் செய்தோம். இதற்கு நாளையே நாங்கள் அரசியலுக்கு வரப்போகிறோம் என அர்த்தமல்ல," என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்

விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத சூழலில், பிபிசி தமிழிடம் பேசிய நடிகர் விஜயின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது, விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் எனும் செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளார்.

கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய் மற்றும் அரசியல் சர்ச்சைகள்

விஜய் ஏற்கனவே அரசியல் ஆசைகளை கடந்த காலங்களில் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.

பின்னர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து, அவருக்கு படத்தை வெளியிட உதவுமாறு கோரிக்கை வைத்து நடிகர் விஜய் காணொளி வெளியிட்ட பின் அந்தப் படம் வெளியானது.

சர்க்கார் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவில், "நிஜத்தில் முதல்வரானால், நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன்" என்று கூறி இருந்தார்.

அந்த திரைப்படமே அவரது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதாக இருந்ததாக விமர்சகர்கள் கூறி இருந்தனர்.

அப்போது "மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்க்கார்ல அரசியல்ல மெர்சல் பண்ணி இருக்கோம்," என்றார்.

'ஜோசப் விஜய்' - மெர்சல் பட சர்ச்சை

விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்.

ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை 'ஜோசப் விஜய்' என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தப் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்ததாகவும் அந்தத் தருணத்தில், அந்த எதிர்ப்புகளுக்குப் பதில்சொல்லும் வகையில், திரையுலகைச் சேர்ந்தவர்கள், மாநில, தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஊடகங்கள் ஆகியவை தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் அப்போது அறிக்கை ஒன்றின் மூலம் விஜய் தெரிவித்திருந்தார்.

'ஜோசப் விஜய்' என்று பெயர் அச்சிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லெட்டர்பேடில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டு இருந்தார்.

மெர்சல் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக்காக, 'ஆளப் போறான் தமிழன்' பாடல் வெளியான போதே, இந்தப் படத்தில் அரசியல் இருக்கிறது என்று அனைவரும் முணுமுணுக்க தொடங்கினர்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச் செழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சுமார் 65 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் சிக்கியிருப்பதாகவும் வருமான வரித்துறையால் அப்போது தெரிவிக்கப்பட்டது.

விஜய் வரி நிலுவை எதையும் வைத்திருக்கவில்லை என்று அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: