அர்னாப் கோஸ்வாமி: கூச்சல், எச்சரிக்கை, சலசலப்பு - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், மயங்க் பகவத்
    • பதவி, பிபிசி மராத்தி

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை நவம்பர் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் 52 வயது கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரைய்காட் போலீஸ் அவரை புதன்கிழமை கைது செய்தது. அதைத்தொடர்ந்து அர்னாப் ரைய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாகிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

பரபரப்பாக கைது செய்யப்பட்ட அர்னாப் மதியம் ஒரு மணி வேளையில் நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றத்திற்குள் நுழைந்த பிறகு போலீஸார் தன்னை தாக்கியதாக அர்னாப் குற்றம் சுமத்தினார். அதன்பின் நீதிமன்றம் அர்னாபிற்கு மீண்டும் உடல் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. பின் பரிசோதனை செய்யப்பட்டு போலீஸார் மீண்டும் அவரை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர்.

அரசு வழக்குரைஞர், போலீஸ், அரனாப் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தின் முன் வைத்தனர். மருத்துவரின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

மறுபரிசோதனை செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றத்தில் மீண்டும் அர்னாப் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் நேராக நிற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். தேவையில்லாத செய்கைகள் செய்வதை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டார்.

அதன்பின் அர்னாப் அமைதியாக உட்கார்ந்தார். முன்னதாக நீதிமன்றத்தில் நுழைந்தபோது போலீஸார் தன்னை அடித்ததாக அர்னாப் கூச்சலிட்டார். அவரின் உறவினர்கள் இந்த முழு சம்பவத்தையும் படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அரசு வழக்குரைஞர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரினர். இந்த முழு விசாரணையும் அடிப்படை ஆதாரமற்றது என அர்னாபின் வழக்குரைஞர் தெரிவித்தார். ரைய்காட் போலீஸார் அர்னாப் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்தனர். மேலும் காலையில் கைது செய்வதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, கைது நடவடிக்கையின்போது காவல்துறையினரை தாக்க முற்பட்டதாக அர்னாப் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அது தொடர்பான காவல்துறையின் தகவலை கவனத்தில் கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதேவேளை, தற்கொலை வழக்கில் காவலில் எடுத்து அர்னாபை விசாரிக்க வலுவான ஆதாரங்கள் தேவை எனவும், போலீஸார் அதனை சமர்ப்பிக்கவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கிடையே, அர்னாப் கோஸ்வாமி சார்பில் அவரது வழக்கறிஞர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இது குறித்து பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அர்னாபின் வழக்குரைஞர், நீதிமன்ற காவலுக்கு அனுப்ப அர்னாப் உத்தரவிடப்பட்டதே அர்னாபின் பெரிய வெற்றி என தெரிவித்தார்.

நேற்றைய கைது

பொறியாளர் ஒருவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக மும்பை அலிபாக் காவல்துறையினர், அர்னாப் கோஸ்வாமியை நேற்று (புதன்கிழமை) கைது செய்தனர்.

இதையடுத்து இந்திய அளவில் ArnabGoswami என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்தது.

இந்த ஹாஷ்டேகில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டன.

அன்வே நாயக் விவகாரம்

அன்வே நாயக் மும்பையைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர். இவர் கான்கார்ட் டிசைன் என்கிற கம்பெனியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்த கம்பெனி தான், அர்னாப் கோஸ்வாமியின் சேனலுக்கு ஸ்டூடியோ கட்டிக் கொடுத்தது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி, மகாராஷ்டிராவில் இருக்கும் அலிபாகில், ஒரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதே வீட்டில், அவரது தாயார் குமுத் நாயக்கும் இறந்து கிடந்தார். இவருடைய தற்கொலை கடிதத்தில், தன்னுடைய மரணத்துக்கு அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் என்றும், அர்னாப், தனக்கு 5.4 கோடி ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றும், அதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அன்வே நாயக் இறந்து சுமாராக இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அன்வே நாயக்கின் மனைவி அக்‌ஷதா, சமூக வலைதளத்தில் தன் கணவரின் பிரச்சனை தொடர்பாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். கடந்த 26 மே 2020, மகாராஷ்டிராவின் உள் துறை அமைச்சர், இந்த விவகாரத்தைக் கவனிக்குமாறு மாநில சிஐடி-யிடம் சொன்னார்.

அர்னாப் தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: