You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அர்னாப் கோஸ்வாமி கைது: தாக்கப்பட்டார் என்கிறது ரிபப்ளிக் தொலைக்காட்சி - நடந்தது என்ன?
பொறியாளர் ஒருவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக மும்பை அலிபாக் காவல்துறையினர், அர்னாப் கோஸ்வாமியை இன்று (புதன்கிழமை) கைது செய்துள்ளனர்.
அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் மற்றும் அவரது தாயார் 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அன்வாய் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டு இருந்தார் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் போலீஸ் இதுகுறித்து எதுவும் விளக்கம் தரவில்லை.
போலீஸ் தம்மை தாக்கியதாக அர்னாப் கூறுகிறார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எதிர்ப்பு
அர்னாப் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்திய அளவில் ArnabGoswami என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த ஹாஷ்டேகில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
கங்கனா ரணாவத் அர்னாபுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். பிரகாஷ் ஜவடேகர் இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
எமர்ஜென்சி காலம் போல இது உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்னாப் தரப்பு கூறுவது என்ன?
அர்னாப் கோஸ்வாமி எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாரோ அந்த வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. அந்த வழக்கை தற்போது மீண்டும் திறந்து இருப்பதாக கூறுகிறது ரிபப்ளிக் டிவி.
மும்பை காவல் துறையினர், அர்னாபை, இந்திய தண்டனைச் சட்டம் 306 பிரிவின் கீழ் கைது செய்து இருக்கிறார்கள் என்கிறது லைவ் லா.
காவல் துறையினர் தரப்பில் இருந்து, அர்னாப் கைது செய்யப்படுகிறாரா அல்லது தடுப்புக் காவலில் (Detention) வைக்கப்படுகிறாரா என எதையும் உறுதி செய்யவில்லை. அதோடு, எந்த வழக்குக்கு அர்னாப் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவில்லை.
அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டது தொடர்பாக, ரிபப்ளிக் டிவி, தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை பகிர்ந்து இருக்கிறது.
அதில்,"இன்று காலை 7.45 மணி அளவில், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டை மும்பை காவலர்கள் முற்றுகையிட்டனர். அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்து, எல்லா கேமராக்களையும் ஆஃப் செய்யச் சொல்லி, அர்னாபை உடல் ரீதியாக தாக்கினார்கள் மும்பை காவலர்கள். வீட்டில் இருந்து காவல் துறை வாகனத்துக்கு, அர்னாபின் சிகையைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள்.
அர்னாப் லீகல் நோட் எழுதக் கூட அனுமதி கொடுக்கப்படவில்லை. அர்னாபுக்கு சம்மன்கள் கூட முன்பு வழங்கப்படவில்லை. அவருடைய சட்ட ஆலோசனைக் குழுவுடன் பேசக் கூட அனுமதிக்கப்படவில்லை.
அர்னாப் கோஸ்வாமி இந்திய தண்டனைச் சட்டம் 306-ன் கீழ், கைது செய்யப்பட்டு இருப்பதாக சச்சின் வசே என்கிற காவல் துறை அதிகாரி சொல்லி இருக்கிறார். போலி வழக்கின் அடிப்படையில் இந்த கைது செய்யப்பட்டு இருக்கிறது.
போலி தற்கொலை வழக்கை, ஏற்கனவே நீதிமன்றத்தால், 2018-ம் ஆண்டில் மூடப்பட்டுவிட்டது. இப்போது அந்த வழக்கின் கீழ் அர்னாபை கைது செய்து இருக்கிறார்கள். உண்மையை ஒரு போதும் தோற்கடிக்க முடியாது" என ரிபப்ளிக் டிவி பகிர்ந்து இருக்கும் அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அன்வே நாயக் விவகாரம்
அன்வே நாயக் மும்பையைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர். இவர் கான்கார்ட் டிசைன் என்கிற கம்பெனியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்த கம்பெனி தான், அர்னாப் கோஸ்வாமியின் சேனலுக்கு ஸ்டூடியோ கட்டிக் கொடுத்தது.
இவர் கடந்த 05 மே 2018 அன்று, மகாராஷ்டிராவில் இருக்கும் அலிபாகில், ஒரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதே வீட்டில், அவரது தாயார் குமுத் நாயக்கும் இறந்து கிடந்தார். இவருடைய தற்கொலை கடிதத்தில், தன்னுடைய மரணத்துக்கு அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் என்றும், அர்னாப், தனக்கு 5.4 கோடி ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றும், அதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அன்வே நாயக் இறந்து சுமாராக இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அன்வே நாயக்கின் மனைவி அக்ஷதா, சமூக வலைதளத்தில் தன் கணவரின் பிரச்சனை தொடர்பாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். கடந்த 26 மே 2020, மகாராஷ்டிராவின் உள் துறை அமைச்சர், இந்த விவகாரத்தைக் கவனிக்குமாறு மாநில சிஐடி-யிடம் சொன்னார்.
அர்னாப் தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள்.
கண்டனம்
அர்னாப் கோஸ்வாமியின் கைது தொடர்பாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, தன் கருத்தை வெளியிட்டு இருக்கிறது.
இன்று காலை, காவல் துறையினரால் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதை அறிந்து எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா அதிர்ச்சி அடைந்து இருக்கிறது. அர்னாபின் திடீர் கைதை கண்டிக்கிறோம். இந்த கைது சம்பவம் வருத்தமளிக்கிறது.
அர்னாப் கோஸ்வாமி நியாயமாக நடத்தப்படுவதை மகாராஷ்டிரா முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும். அதோடு மாநில அரசின் அதிகாரங்கள், பத்திரிகைக்கு எதிராக பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: