You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விராட் கோலி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: இதுதான் காரணம் - விரிவான தகவல்கள்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
"விராட் கோலி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்"
ஆன்லைன் விளையாட்டுகளால் தேசிய அளவில் ரூ.25 ஆயிரம் கோடி புழங்குவதாக திடுக்கிடும் தகவலை அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது. இந்த விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் நடிக்கும் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், மக்கள் நலனை கருதாமல் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புகிறார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி
பின்வரும் தகவல்கள் அந்நாளிதழ் செய்தியில் இடம்பெற்றுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, " கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இணைய தளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளில் பலதரப்பட்டவர்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் சிக்கி, பலர் தங்களின் எதிர்காலத்தை சீரழித்துக்கொள்கின்றனர். சமீபத்தில் ஆன்லைன் விளையாட்டுகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிர்ப்பலிகளை தடுக்க ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரங்களில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா மற்றும் நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் நீலமேகம், துஜா ஆகியோர் ஆஜராகி, "சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் பல லட்ச ரூபாயை இழந்து, தற்கொலை செய்து கொண்டார். இவரை போல ஏராளமானவர்கள் தங்களின் மதிப்பு மிக்க உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். எனவே இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது அவசியம்" என்றனர்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், "பிரபலமானவர்கள் விளம்பரங்களில் பங்கேற்கும்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் தான் கவனம் செலுத்துகின்றனர். பெரும்பாலானவர்கள் தங்களை பின்பற்றுகின்றனர் என்று தெரிந்தும் இவ்வாறு செய்வது ஏன்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் தேவையில்லாமல் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்" என்றார்.
அதற்கு நீதிபதிகள், "கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா? ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளுக்கு அந்தந்த மாநிலங்களின் பெயர்களை பயன்படுத்துவது ஏன்? பிரபலமானவர்கள் ஆன்லைன் விளையாட்டுகள் பற்றி மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால்தான் பலர் ஆன்லைன் விளையாட்டுகளில் சிக்கிக்கொள்கின்றனர்" என்றனர்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய-மாநில அரசுகளுக்கும், கிரிக்கெட் பிரபலங்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதேபோல் மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனுவில், "ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தெலுங்கானா மாநிலம் தடை விதித்து உள்ளது. அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த விளையாட்டின் ஆபத்தை உணர்ந்து இந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவும் இதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, "பிற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்" என கோரினார்.
அதற்கு நீதிபதிகள், "ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு ஒவ்வொரு நாளும் பல உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. இந்த பிரச்சினையில் கவனம் செலுத்துவது அவசியம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதுகுறித்து சட்ட வரைவு ஏதேனும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வழக்கறிஞர், "ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தேசிய அளவில் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி புழக்கத்தில் உள்ளது" என்றார்.
அப்போது, "இந்த தொகை யாருக்கு போய் சேருகிறது?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "இந்த விஷயம் குறித்து 10 நாட்களில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்" என்று அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
மேலும் இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவை எடுக்கும் என இந்த கோர்ட்டு நம்புகிறது எனவும் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தீபாவளிக்கு 30,601 பேருந்துகள் இயக்கம்
தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் உள்பட 30,601 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
தீபாவளிப் பண்டிகைக்காக போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலகத்தில், செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த ஆண்டு தீபாவளிக்காக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6.7 லட்சம் பேர் பயணித்தனர். இந்த ஆண்டு வரும் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில், தினமும் இயக்கப்படும் 2,000 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,510 பேருந்துகள் என மூன்று நாள்களும் சேர்த்து, சென்னையிலிருந்து 9,510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,247 சிறப்புப் பேருந்துகளுமாக 14,575 பேருந்துகள் இயக்கப்படும். இவை சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்கப்படும்.
பண்டிகைக்குப் பிறகு...: தீபாவளி முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, நவ.15 முதல் 18-ஆம் தேதி வரை, தினமும் இயக்கப்படும் 2,000 பேருந்துகளுடன், 3,416 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,610 சிறப்புப் பேருந்துகளுமாக 16,026 பேருந்துகள் இயக்கப்படும். 7 நாள்களுலும் 30,601 பேருந்துகள் இயக்கப்படும். இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முதல்வர் அறிவித்த தளர்வுகளின்படி புதுச்சேரிக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.
இப்பேருந்துகளில் சுமார் 5 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். பெரும்பாலானோர் சொந்த ஊர்களிலே இருப்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 ஆயிரம் பேருந்துகள் குறைத்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது..
முன்பதிவு மையங்கள்: பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ள, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10, தாம்பரம் மெப்ஸில் 2, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் 1 என மொத்தம் 13 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. இது தவிர்த்து, www.tnstc.in என்ற இணையதளம், tnstc, redbus, paytm உள்ளிட்ட செயலிகளிலும் முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்த பயணிகளை ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து ஏற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளிவைக்க முடிவு?
கொரோனா பரவல் மற்றும் வட கிழக்கு பருவமழை அச்சம் காரண மாக பள்ளி, கல்லூரிகள் திறப்பை மீண்டும் தள்ளிவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி கள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை நவ.16-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதாவது, பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக் கைகளை கல்வித்துறை அதிகாரி கள் தொடங்கினர்.
இதற்கிடையே, பருவமழைக் காலம் என்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க பெற்றோர்கள், கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறப்பைத் தள்ளிவைக்க தமிழக அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இங்கிலாந்து உட்பட பல் வேறு நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதுதவிர கொரோனா 2-வது அலை வீசக்கூடும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
மேலும், வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் நவம்பரில் அதிக அளவு மழை பெய்யக்கூடும். டெங்கு உட்பட பருவகால நோய்களும் பரவி வருகின்றன. எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
கல்லூரிகளைப் பொறுத்தவரை நடப்பு பருவத்துக்கான தேர்வுகள் இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளன. அதனால், கல்லூரி களை திறக்க வேண்டிய அவசியமில்லை. இவற்றை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்கப் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் நோயின் தீவிரம் அறிந்து முடிவெடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார். இவ்வாறு அவர் கள் கூறினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: