You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜாதவ் பயேங் - இந்திய வனமகனின் வரலாறை படிக்கும் அமெரிக்கர்கள் - யார் இவர்?
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் `ஃபாரஸ்ட் மேன்` என்று அழைக்கப்படும் ஜாதவ் பயேங் குறித்த விஷயங்களை தமது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது அமெரிக்கப் பள்ளி ஒன்று. அமெரிக்க பிரிஸ்டோல் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர்கள் இந்த 57 வயதான அசாம் மனிதர் குறித்து இனி படிப்பார்கள்.
சரி யார் இந்த ஜாதவ் பயேங்? அவர் குறித்த விஷயங்கள் அமெரிக்கா வரை பேசப்பட என்ன காரணம்.
யார் இந்த ஜாதவ்?
அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகையில் தனி மனிதனாக எந்த விளம்பரமும் இல்லாமல் ஒரு காட்டையே உருவாக்கியவர். அதற்காக பத்மஸ்ரீ விருது வரை வாங்கியவர்.
அவரை சந்திக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்பு கிடைத்தது. அப்போது அவர் கூறிய விஷயங்கள் அனைத்தும் ஆச்சரியம் தருவதாக இருந்தன. உண்மையில் ஓர் அசாத்தியத்தை சாத்தியமாக்கி இருக்கிறார் இந்த ஜாதவ் பயேங்.
தனி மனிதாக ஒரு காட்டை உருவாக்கப் போகிறேன் என்று இவர் கூறியபோது இவரை எள்ளி நகையாடி இருக்கிறார்கள். ஆனால், இப்போது கல்வி நிலையங்கள், சூழலியல் அமைப்புகள், அரசு இயந்திரம் என சமூகத்தின் பல அமைப்புகள் இவரை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
பாம்புகள் மரணம், உலக அழிவு மற்றும் சில மூங்கில் மரங்கள்
1978ஆம் ஆண்டு பெய்த பெருமழையும் அதனை தொடர்ந்து நிலவிய வறட்சியும்தான் இவர் வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது.
அது குறித்து விவரிக்கும் ஜாதவ், " ஏறத்தாழ 12 நாள்கள் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. நாங்கள் அனைவரும் `உலகம் அழியப்போகிறது' என நினைத்தோம். ஆனால், சில நாட்களிலேயே மழை நின்றுவிட்டது. அந்த மழைக்குப் பிறகு, எங்கள் ஊரை கடும் வறட்சி தாக்கியது. வீட்டு விலங்குகள் ஒவ்வொன்றாக மடியத் தொடங்கின. பிறகு, வெப்பம் தாங்காமல் பாம்புகள் செத்து மடிந்தன. வீதியெங்கும், செத்துப்போன பாம்புகளின் சடலங்கள். இந்தக் காட்சி மனதை உலுக்கியது. பின் பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகையில் அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊருக்குள் அடிக்கடி வெள்ளம் புகுந்தது. எதிர்காலம் குறித்த கேள்விகள் மனதில் எழுந்தன." என்கிறார்.
இந்த கேள்விகளுக்கு விடைகாண பழங்குடிகளின் மூத்த தலைவர்களைச் சந்தித்து இருக்கிறார். அவர்கள் இவருக்கு சூழலியல் குறித்த ஒரு புரிதை உண்டாக்கி இருக்கிறார்கள்.
"அவர்கள்`மனிதனின் நுகர்வு, கட்டற்ற பேராசைதான் இந்த அழிவுக்குக் காரணம். மனிதன் தன் தேவைக்காக இயற்கையின் சமன்பாட்டை முற்றாக குலைத்துவிட்டான். `இறைவன் நம்மிடம் இந்தப் பூமியைக் கொடுத்தபோது, எல்லாம் சரிவிகிதத்தில் இருந்தன. ஆனால், துரதிர்ஷ்டமான ஒரு நாளில், மனிதன் `தான் மட்டும்தான் இருக்க வேண்டும்' என நினைத்தான். அது இயற்கைக்கு எதிரானது. இது, மனிதனுக்குப் புரியவில்லை. பாவம், அவனும் இல்லாமல் போகப்போகிறான். அதன் தொடக்கம்தான் இது' என்றார்கள். அவர்களே இதற்குத் தீர்வையும் சொன்னார்கள், `இறைவன் எந்த விகிதத்தில் இதை நம்மிடம் கொடுத்தானோ, அதை மீட்டு உருவாக்கு' என்றார்கள். 25 மூங்கில் மரங்களையும் கொடுத்தார்கள். அவைதான் என் பயணத்துக்கான விதைகள். அவையே இன்று ஒரு கானகமாக விரிந்து நிற்கின்றன.'' என்று மூன்று தசாப்தங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை நினைவு கூர்ந்தார் ஜாதவ்.
இவர் உருவாக்கிய காட்டின் பரப்பு 550 ஹெக்டேர். இந்த மொலாய் காடு பிரம்மபுத்திரா நதியின் மத்தியில் இருக்கும் மஜூலி தீவில் பரந்து விரிந்து கிடக்கிறது.
மனிதனும் அரசும்
இவர் உருவாக்கிய காட்டிற்கு முதன்மையான எதிரியாக சகமனிதனே இருந்திரிக்கிறான்.
அவர் கூறுகிறார், "30 ஆண்டுகளில் நான் வைத்த மரங்கள் வளர்ந்து அந்த பகுதியே அடர்காடாக மாறியது. ஆனால், தொடக்கத்தில் இருந்து இப்போது வரை என்னுடைய முயற்சிகளுக்கு முதன்மையான எதிரியாக இருப்பது மனிதன்தான் என்கிறார். தொடக்கத்தில் நான் வைத்த செடிகளை அழித்தார்கள். காடு உருவாகினால் வன விலங்குகள் வரும் என அச்சம் தெரிவித்தார்கள். பல போராட்டங்களுக்கு பின்பே என் முயற்சியில் வெற்றி பெற்றேன்," என்கிறார்
"இந்த மொத்த பூமியும் தனக்கானது என்ற மனிதர்களின் எண்ணம்தான் தமக்கு அச்சம் தருகிறது. எந்த உயிரினமும் மனிதனிடமிருந்து பாதுகாப்பாக இல்லை," என்று அவர் தெரிவிக்கிறார்.
சரி இயற்கையைகாக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, "ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போது," என்கிறார்.
அவர், "அரசு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அழிவைத்தான் விதைக்கிறது. பிரம்மபுத்திராவை பாருங்கள், அதன் சீர்கேட்டுக்கு யார் காரணம்? அரசுதானே அதனால்தான் சொல்கிறேன், அது ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்." என்கிறார்.
"உண்மையில் அரசு ஏதாவது செய்ய விரும்பினால், நம் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். நம் உள்ளூர் காடுகள், விலங்குகள், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவான செய்திகளுடன் பாட புத்தகத்தை மாற்ற வேண்டும்," என்று ஜாதவ் பயேங் வலியுறுத்துகிறார்.
பல விருதுகளைப் பெற்ற ஆவணப்படம்
இவர் குறித்த விஷயங்கள் வெகுஜன மக்களுக்கு தெரிய தொடங்கியது, இவர் குறித்த ஆவணப்படம் வெளியே வந்த பின்புதான். இந்தியாவை சேர்ந்த ஆர்த்தி ஸ்ரீவத்சவா ஓர் ஆவணப்படமும், கனடா நாட்டை சேர்ந்த வில்லியம் டொக்லஸ் மெக்மாஸ்டரரால் ஓர் ஆவணப்படமும் இயக்கினார்கள். இந்த ஆவணப்படங்கள் ஜாதவ் குறித்த முழுமையான சித்திரத்தை வழங்கின. கேன்ஸ் உள்ளிட்டபல விருதுகளையும் பெற்றன.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- பிரியங்கா ராதாகிருஷ்ணன்: நியூஸிலாந்து அமைச்சரான சென்னை பெண் - யார் இவர்?
- அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார்?
- India vs Pakistan: "கில்கிட் விஷயத்தில் இம்ரான் கான் எல்லை மீறக்கூடாது" - இந்தியா கடும் எச்சரிக்கை
- 'மக்களுடன்தான் கூட்டணி': மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்
- கொரோனா அறிகுறி எப்போது வெளிப்படும்? யாரால் கோவிட் அதிகம் பரவும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: