You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்க்கரை சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பா? கட்டுக்கதைகளுக்கு எதிராக புதிய பிரசாரம்
இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சர்க்கரை பற்றியும், சர்க்கரையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாகவும் உலா வரும் கட்டுக்கதைகளை உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
சர்க்கரை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இந்த பிரசாரம் முன்வைக்கப்படுகிறது.
சராசரியாக, இந்தியர்கள் ஓராண்டுக்கு 19 கிலோ சர்க்கரையை உட்கொள்கிறார்கள். இது உலக சராசரியை விட மிகவும் குறைவு. இருப்பினும், இந்தியாதான் உலகிலேயே சர்க்கரையை அதிகமாக நுகரும் நாடு.
இந்த ஆண்டில், இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 13 சதவிகிதம் அதிகரித்து, உற்பத்தி அளவு 31 மில்லியன் டன்னாக உயரலாம். ஆனால் அரசாங்கமோ, உபரியாக இருக்கும் சர்க்கரை கையிருப்புகளை தீர்க்க, சர்க்கரை ஏற்றுமதிக்காக வழங்கும் மானியம் நிறுத்தப்படலாம் என மறைமுகமாகச் சுட்டிக் காட்டி இருக்கிறது.
இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் புதிய வலைதளத்தில் "சாப்பிடுங்கள், பருகுங்கள் மற்றும் ஆரோக்கியமாக இருங்கள்: கொஞ்சம் சர்கரை அத்தனை மோசமல்ல" போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன.
இந்த இணைய வழி பிரசாரத்தில் சமூக வலைதள பதிவுகளும், செயல்முறை பயற்சிகளும் அடங்கும். அவற்றில் புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் மற்றும் உடல் நல பயிற்றுநர்கள் ஆரோக்கியமான வாழ்கையைக் குறித்து விவாதிக்கிறார்கள்.
இந்த வலைதளத்தில் இனிப்புகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன. Artificial sweeteners என்று அழைக்கப்படும் செயற்கை இனிப்புகள், மக்களின் உடல் எடையைக் குறைக்க உதவாது, அதோடு உடல் நலத்தில் பக்க விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் அதில் சொல்லப்படுகிறது.
புதிய வலைதளத்தைத் தொடங்கும் போது, "சர்க்கரை பற்றியும், சர்க்கரையை நுகர்வது பற்றியும் எந்தவொரு அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லாமல், பல கட்டுக்கதைகள் இருக்கின்றன" என, இந்திய உணவுச் செயலர் சுதான்சு பாண்டே, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ஆரோக்கியமான அணுகுமுறை?
இந்த பிரசாரம், மற்ற நாடுகளில் சர்க்கரை நுகர்வை குறைக்க கட்டாயப்படுத்தும் பிரசாரங்களுக்கு முற்றிலும் மாறானது.
உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகளோடு தொடர்புடையதாக சர்க்கரை இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு, குறிப்பாக உணவு மற்றும் பானங்களில், உற்பத்தியாளர்களால் வழக்கமாக கலக்கப்படும் சர்க்கரை குறித்து தன் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. தேன் மற்றும் பழச்சாறுகளில் கூட சர்க்கரை கலக்கப்படுகிறது.
வர்த்தக இனிப்பான்
இந்தியாவில் சுமாராக 50 மில்லியன் விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்கிறார்கள். மேலும் மில்லியன் கணக்கானோர், சர்க்கரை ஆலைகளில் வேலை செய்கிறார்கள் அல்லது கரும்பு போக்குவரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இதையடுத்து, இந்திய அரசு, interventionist எனப்படும் தலையீட்டாளர் பாணியில், மானியத்தை பயன்படுத்தி, இந்திய சர்க்கரையை வெளிநாடுகளில் விற்க உதவியது. இந்த முறையை, மற்ற சர்க்கரை உற்பத்தி நாடுகள் எதிர்த்து வருகின்றன.
அதிகப்படியான சர்க்கரை கையிருப்பில் இருந்து வெளியேற மற்றொரு வழி, சர்க்கரையை எத்தனாலாக மாற்றி, எரிபொருளுக்கு பயன்படுத்துவதுதான்.
எத்தனால் உற்பத்தி, இந்த ஆண்டில் 1.9 பில்லியன் லிட்டரில் இருந்து, 2021-ம் ஆண்டில் 3 பில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் கணித்து இருக்கிறது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார்?
- India vs Pakistan: "கில்கிட் விஷயத்தில் இம்ரான் கான் எல்லை மீறக்கூடாது" - இந்தியா கடும் எச்சரிக்கை
- 'மக்களுடன்தான் கூட்டணி': மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்
- கொரோனா அறிகுறி எப்போது வெளிப்படும்? யாரால் கோவிட் அதிகம் பரவும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: