The Trial of the Chicago 7: திரைப்பட விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: யாஹ்யா அப்துல் - மதீன் II, சசா பரோன் கோஹென், டேனியல் ஃப்ளாஹெர்டி, ஜோசப் கார்டன் - நெவிட், மைக்கெல் கீடோன், ஃப்ராங்க் லாஞ்செல்லா, மார்க் ரைலான்ஸ்

இசை: டேனியல் பெம்பர்டன்

எழுத்து, இயக்கம்: ஆரோன் சார்கின்

ஓடிடி தளங்களில் வந்து குவிந்துகொண்டிருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களுக்கு நடுவில் கவனிப்பை ஈர்க்கும் படங்கள் எப்போதாவதுதான் வருகின்றன.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் The Trial of the Chicago 7 படத்தை நிச்சயம் அந்த வரிசையில் சேர்க்கலாம்.

'தி சோஷியல் நெட்வொர்க்' படத்திற்கு திரைக்கதை எழுதிய ஆரோன் சார்கின்தான் இந்தப் படத்திற்கும் இயக்குநர். பல நாடுகளில் போராட்டக் குழுக்களுக்கு எதிராக அரசுகள் கடுமையான நடவடிக்கைளில் இறங்கியிருக்கும் நேரத்தில் இந்தப் படம் வெளியாகியிருப்பது ஒருவகையில் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து மரணமடைவதால், அந்த யுத்தத்திற்கான இயக்கங்களும் போராட்டங்களும் நடந்துகொண்டிருந்த 1960களின் பிற்பகுதி. சிகாகோவில் நடக்கவிருக்கும் டெமாக்ரெடிக் தேசிய மாநாட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த சில யுத்த - எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் முடிவுசெய்கின்றனர். அந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிகிறது.

இதற்குள் அதிபராக இருந்த லிண்டன் பி ஜான்சன் மாறி, புதிய அதிபராக ரிச்சர்ட் நிக்ஸன் பதவியேற்கிறார். அட்டர்னி ஜெனரலாக இருந்த ராம்ஸே க்ளர்க்கிற்குப் பதிலாக ஜான் மிட்செல் பதவியேற்கிறார்.

இந்த நிலையில் சிகாகோ போராட்டத்தில் பங்கேற்ற ஏழு பேரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை நிரூபித்து குறைந்தது பத்தாண்டுகள் சிறை தண்டனையாவது வாங்கித்தர புதிய அரசு நினைக்கிறது. இதையடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் The Trial of the Chicago 7.

இந்த ஏழு பேர் தவிர, கறுப்பு சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த பாபி சீல் என்ற கறுப்பினத்தவர் மீதான வழக்கும் இந்த வழக்கோடு சேர்ந்து நடக்கிறது.

படத்தின் பெரும்பகுதி நீதிமன்றக் காட்சிகள்தான். அதற்கு நடுவில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக கலவர தினத்தன்றும் அதற்கு முன்பும் நடந்த காட்சிகள் வந்துபோகின்றன.

ஆனால், நீதிமன்றக் காட்சிகளில்தான் விறுவிறுப்பு அதிகம். சரியான அரசியல் பார்வை, எந்த இடத்திலும் தொய்வை ஏற்படுத்தாத திரைக்கதை, தேர்ந்த நடிகர்கள் என கச்சிதமாக அமைந்திருக்கிறது இந்தப் படம்.

சின்னச் சின்ன காட்சிகளில்கூட சார்க்கினின் திறமையும் புத்திசாலித்தனமும் பளிச்சிடுகிறது. ஏழு பேர் வழக்கில் இல்லாத வேகத்தை, பாபி சீல் வழக்கில் வைத்திருக்கிறார் இயக்குனர். ஒரு காட்சியில் நீதிமன்றத்தை பாபி சீல் தொடர்ந்து அவமதிப்பதாகக் கருதும் நீதிபதி, அவரை முடக்க உத்தரவிடுகிறார். இதையடுத்து கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு பாபி சீல் கொண்டவரப்படும் காட்சி யாரையும் அதிரவைக்கும்.

படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஏழு பேரின் வழக்கறிஞரான வில்லியம் கன்ஸ்லர் பாத்திரத்தில் வரும் மார்க் ரைலான்ஸ் சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல நீதிபதியாக வரும் ஃப்ராங்க் லாஞ்செல்லாவும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், நிச்சயம் பார்க்கத்தக்க, பார்த்தாக வேண்டிய திரைப்படம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: