You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலிபாபா முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை: உலகின் மிகப்பெரிய பங்கு வெளியீடு நிறுத்தம்
உலகின் மிகப் பெரிய பங்கு வெளியீட்டை (IPO), கடைசி நேரத்தில் நிறுத்தி இருக்கிறது சீன அரசு.
ஆண்ட் குழுமம். இந்த நிறுவனம்தான் சீனாவின் பிரபலமான அலி பே என்கிற ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலியை வைத்திருக்கிறது. இந்த அலி பே செயலி, சீனாவின் ஒட்டு மொத்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 55 சதவிகிதத்தை தன் வசம் வைத்திருக்கிறது.
ஆண்ட் குழுமத்தின், மூன்றில் ஒரு பகுதி பங்குகளை, ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம் வைத்திருக்கிறது. ஆண்ட் குழுமம், தன் 11 சதவிகித பங்குகளை, நாளை (05 நவம்பர் 2020, வியாழக்கிழமை) ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் வெளியிட்டு, 34.4 பில்லியன் டாலரைத் திரட்ட திட்டமிட்டு இருந்தது.
இந்த ஆண்ட் குழுமத்தின் 34.4 பில்லியன் டாலர் பங்கு வெளியீட்டைத்தான், சீன அரசு தரப்பில் இருந்து, கடைசி நேரத்தில் நிறுத்தி இருக்கிறார்கள்.
இந்த செய்தி வெளியான பின் அலிபாபா நிறுவன பங்குகள் விலை ஹாங்காங் பங்குச் சந்தையில் 9.6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. அதே போல நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் அலிபாபா நிறுவன பங்குகளும் 8.1 சதவிகிதம் வீழ்ச்சி கண்டன.
ஒட்டுமொத்தமாக, அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 76 பில்லியன் டாலர் காணாமல் போய் இருக்கிறது. இது, ஆண்ட் குழுமம் திரட்ட நினைத்த 34 பில்லியன் டாலரை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பங்கு வெளியீடு மட்டும் திட்டமிட்டபடி நடந்து இருந்தால், உலகிலேயே மிகப் பெரிய, அதிக தொகை கோரிய பங்கு வெளியீடாக இருந்து இருக்கும்.
இதற்கு முன் வந்த மிகப் பெரிய பங்கு வெளியீடு என்றால், அது செளதி அரேபிய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோ வெளியிட்ட 29.4 பில்லியன் டாலர் பங்கு வெளியீடுதான். இது சென்ற ஆண்டு டிசம்பரில் நடந்தது.
பங்கு வெளியீட்டை சீனா நிறுத்தியது ஏன்?
ஆண்ட் குழும பங்கு வெளியீட்டில் "பெரிய பிரச்சனைகள்" இருப்பதாக, சீன அரசு தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.
ஜாக் மாவை "supervisory interviews" என்றழைக்கப்படும் பிறர் மேற்பார்வையில் நிகழும் நேர்காணலுக்கு, அழைத்து இருப்பதாக, ஷாங்காய் பங்குச் சந்தை சொல்லி இருக்கிறது.
ஆண்ட் குழுமம் பங்குகளைப் பட்டியலிடுவதற்கான விதிமுறைகள் அல்லது தகவல் வெளிப்படுத்தல் விதிகளை ( information disclosure requirements) தொடர்ந்து கடைபிடிக்கவில்லை எனச் சொல்லி இருக்கிறது ஷாங்காய் பங்குச் சந்தை.
ஆண்ட் குழுமம், தன் பங்கு வெளியீட்டை ரத்து செய்வதாக ஹாங்காங் பங்குச் சந்தை சொல்லி இருக்கிறது.
அடகுக் கடையுடன் வங்கிகளை ஒப்பிட்ட ஜாக் மா
என்னதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும், லாபகரமான நிறுவனமாக இருந்தாலும், சீனாவில் இயங்கும் நிறுவனங்கள் என்றால், சீன அரசின் ஒழுங்காற்று அமைப்புகளின் ஆசிர்வாதம் தேவை என்ற காரணியை, ஆண்ட் குழுமத்தின் தலைவர் எரிக் ஜிங் மற்றும் அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஆகியோர் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.
கடந்த மாதம், நடைபெற்ற பணப்பரிமாற்ற தொழில்நுட்பம் தொடர்பான ஒரு மாநாட்டில், ஜாக் மா, பழமையான வங்கிகளை அடகுக் கடையோடு ஒப்பிட்டுப் பேசினார். டிஜிட்டல் வங்கி முறையின் நன்மைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்.
மிக முக்கியமாக, எதிர்காலத்தில் கடன் முடிவுகள், தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும். பிணையம் வைக்கும் சொத்தின் அடிப்படையில் எடுக்கப்படாது எனச் சொன்னார்.
யோசித்த சீன அதிகாரிகள்
ஜாக் மாவின் பேச்சு, சீன அதிகாரிகள் தரப்பை சிந்திக்க வைத்திருக்கலாம். ஆண்ட் குழுமம் வாடிக்கையாளர்களிடம் இருந்து நிறைய தரவுகளை திரட்டுகிறது.
இந்த தரவுகளை சீன அரசு உடனடியாக அணுக முடியாது. தேவைப்பட்டால், சீன அரசு கேட்டுப் பெறலாம்.
சீன நிறுவனங்களை, சீன வலுவாக ஆதரிக்கிறது என்று மற்ற நாடுகள் ஒரு விமர்சனத்தை முன்வைக்கின்றன. இப்படி தங்கள் நாட்டு நிறுவனங்களை சீன அரசு ஆதரிக்கப்பதற்கு, அந்த நிறுவனங்கள் மீது குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டை வைத்திருக்க விரும்புகிறது அரசு தரப்பு. இப்படி வேறு எந்த நாடும் செய்வதில்லை.
ஜாக் மாவின் டிஜிட்டல் சாம்ராஜ்ஜியம், இந்த கட்டுப்பாட்டுக்கு வெளியே அதிகம் போகத் தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில், பங்கு வெளியீட்டை நிறுத்தியது, யார் பெரியவர் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: