"தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன், ரஜினியின் ஆதரவை கேட்பேன்" - கமல் ஹாசன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கட்சியின் அரசியல் உத்தி எதுவாக இருக்கும் என்று கேட்டபோது, "பழிபோடும் அரசியலாக இல்லாமல், வழிகாட்டும் அரசியலாக இருக்கும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.

கடந்த சில மாதங்களில் ஒரு லட்சம் பேர் மக்கள் நீதி மய்யத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

பாஜகவுடன் தேர்தலில் கூட்டணி சேருவீர்களா என கேட்டதற்கு, பல்வேறு கட்சிகளில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர் மனம் நொந்து இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் வர வேண்டும். நல்லவர்களுடன் நாங்கள் கூட்டணி சேருவோம் என்று கமல் பதில் அளித்தார்.

அரசியல் பற்றி ரஜினியுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கேள்விக்கு கமல் பதிலளித்தபோது தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந், தனது உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு நண்பராக அவருக்கு அறிவுறுத்துவேன் என்று கூறிய அவர், அரசியலுக்கு வருவது பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கமல் கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவை கோருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, அவரது ஆதரவை தருமாறு கேட்பேன் என்று கமல் பதில் அளித்தார்.

தமிழக தேர்தலில் 3ஆவது அணி அமைந்து விட்டது என்று நான் சொல்கிறேன். நவம்பர் மாதம் எங்களுக்கு ஒரு வாய்ப்பை தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எனவே, இது கூட்டணி பற்றி பேசக்கூடிய தருணம் இல்லை என்று கமல் தெரிவித்தார்.

கள ஆய்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக மக்கள் நீதி மய்யம் உள்ளது. 100 முதல் 160 தொகுதிகளில் எங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அரசியலில் எங்களுடைய கொள்கை நேர்மை மட்டுமே. நாங்கள் நேர்மையானவர்கள் என்று கூறி மக்களை சந்திப்போம். அது போல மற்றவர்களால் கூற முடியுமா என்று கமல் கேள்வி எழுப்பினார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது குறித்து வேட்பு மனுவில் நான் கையெழுத்திடும்போது உங்களுக்கே தெரிய வரும். அதுபோலவே தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சி என்ற உறுதியுடன் கட்சித் தொண்டர்கள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அனைவரிடமும் வலியுறுத்தியுள்ளேன் என்று கமல் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

மனுஸ்மிரிதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அது பற்றி கேள்வியே எழாது. அதுவே, இந்திய அரசியலமைப்பு பற்றி யாராவது பேசினால், கேள்வி எழுப்பினால் நான் கருத்து கூறுவேன். கலாசாரத்தில் பல விஷயங்கள் இருந்தன. உடன்கட்டை ஏறுவது கூட கலாசாரத்தில் இருந்தது. கலாசாரம் என்ற பெயரில் அதை பின்பற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. காலத்துக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கமல் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி உத்தேசித்துள்ள வேல் யாத்திரை பற்றிக் கேட்டதற்கு, அந்த யாத்திரை வேண்டாம் என்பது நல்லதுதான் என்று கூறிய கமல்ஹாசன், அதற்கு பதிலாக வேலை வாங்கித்தர வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :