தமிழக அரசு, விவசாய மசோதாக்களை விமர்சிக்கும் கமல் ஹாசன்: 'தனியார் முதலாளிகள் முடிவை எடுப்பார்கள்'

இந்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களில் விவசாயிகளுக்கு எதிரான சரத்துகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் மக்கள் நீதி மய்யம் நடத்திவருகிறது.

நடிகர் மற்றும் மநீம கட்சியின் நிறுவரான கமல் ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகள் நலன் காக்க புதிய வேளாண் மசோதாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்திற்கு திருப்பி அனுப்பவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய மசோதாவில் அறிமுகப்படுத்தியுள்ள சரத்துகளில் பலவும் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ள கமல் ஹாசன், ''விவசாயம் மாநில அரசின் அதிகாரத்திற்குள் உள்ளது. இந்த புதிய மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதுடன் கார்ப்பரேட் நிறுவங்களை பண்ணையர்களாகவும், விவசாயிகளை பண்ணை அடிமைகளாக மாற்றும் நிலையை ஏற்படுத்தும்.விவசாய பொருட்களுக்கு தனியார் நிறுவனங்கள், முதலாளிகள் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என கூறுவதன் மூலம் அபாயம் ஏற்படும். விலையை நிர்ணயம் செய்ய அரசாங்க அதிகாரியின் தலையீடு இருக்காது என்றும் தனியார் முதலாளிகள் முடிவை எடுப்பார்கள் என்பது ஆபத்தான சூழலை உருவாக்கும்,'' என தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் யார் வேண்டுமானாலும், விவசாய பொருட்களை வாங்கலாம், விற்கலாம் என புதிய வழிமுறை கொண்டுவருவதில், மாநிலத்தின் வருவாய் கணிசமாக குறையும் என்கிறார் கமல் ஹாசன்.

''மாநில அரசின் வருவாய் குறைவதோடு, மாநில அரசின் அதிகாரமும் குறையும் நிலையை இந்த புதிய மசோதா உருவாகியுள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய், வெங்காயம் ,தானியங்கள் போன்றவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவதால், விவசாயிகள் தானியங்களை சேமித்து வைக்கலாம் என்றும் கூடுதல் விலை கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. ஆனால் இந்த பொருட்களையோ கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கிவைத்து செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கும் நிலை ஏற்படும்,''என்கிறார் அவர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதக்களை தமிழக அரசு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டதை விமர்சித்துள்ள கமல் ஹாசன், இந்த மசோதாவுக்கு அளித்துள்ள ஆதரவு என்பது மாநில அரசின் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.

ஹைட்ரொகார்பன் திட்டம், மீதேன் திட்டம் மற்றும் எட்டு வழிச்சாலை திட்டம் ஆகிய திட்டங்களுக்கு ஏற்கனவே மக்களின் கருத்துகளை தமிழக அரசு கேட்கவில்லை என்றும் அதே தவறை மீண்டும் வேளாண் மசோதா விவகாரத்திலும் செய்துள்ளது என விமர்சித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: