You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவார்'- ஜோசிய கணிப்பை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்துவிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் பைடனுக்கும் டிரம்புக்கும் கடுமையான போட்டி நிலவும், ஆனால் இறுதியில் டிரம்பே வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை சுமார் 7000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் ரீட்வீட் செய்துள்ளனர்.
அதாவது டிரம்பின் ராசி மற்றும் அவரது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடம் ஆகியவற்றை வைத்து அந்த ஜோசியர் இதனை கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள படத்தில் இரண்டாம் இடத்தில் சூரியன் மற்றும் ராகு இருப்பதாகவும், எட்டாம் இடத்தில் சந்திரன் மற்றும் கேது இருப்பதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த ஜோசியர் யார் என்பதை மஹிந்திரா வெளியிடவில்லை. ஆனால், அவர் கூறியது உண்மையாக இருந்தால், அவரின் புகழ் உயரும் என்பதில் சந்தேகமில்லை.
டிரம்ப்தான் வெற்றி பெறுவார் என்று வேறு சில ஜோசியர்களும் கணித்துள்ளதையும் பல ட்விட்டர் பயனாளிகள் பகிர்ந்தனர்.
இந்தியாவில் ஒரு முக்கிய விஷயத்திற்கு ஜோசியம் பார்க்கும் வழக்கம் மிகவும் பிரபலமான ஒன்று. பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகளும் இதனை நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தேர்தல் நிலவரம் என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக வழக்கமான நேரத்தைவிடக் கூடுதல் நேரம் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அங்கு தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது அதற்கு காரணம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முடிவுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் டிரம்பைவிட சற்று முன்னிலை பெற்றுள்ளார்.
பல இடங்களில் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரியும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
தெளிவான முடிவுகள் இன்னும் வெளியாகாத சூழலே இருக்கிறது. மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 எடுத்தால் வெற்றி. தற்போதைய நிலவரப்படி பைடன் 243, டிரம்ப் 214 என்ற நிலை இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: