You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'உயிரினங்கள் நசுங்கி அழியும்' - உருகி நகரும் 4,200 சதுர கி.மீ பனிப்பாறை
- எழுதியவர், ஜோனாத்தன் அமோஸ்
- பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்
4,200 சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட A68a எனும் , உலகின் மிகப் பெரிய பனிப்பாறை, பிஓடி என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி பகுதியாக இருக்கும் தெற்கு ஜார்ஜியாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்த அன்டார்டிகா பனிப்பாறை, தெற்கு அட்லான்டிக் தீவு அளவுக்கு இருக்கிறது. விலங்குகளின் புகலிடமாகத் திகழும் இடத்தில், கடற்கரையில், இந்த பனிப்பாறை நங்கூரமிட்டு நிற்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
அப்படி நடந்தால், அது தெற்கு ஜார்ஜியாவில் இருக்கும் பென்குயின்கள் மற்றும் கடல் சிங்கங்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். வழக்கமாக விலங்குகள், தங்களின் தீவனத்தைத் தேடிச் செல்லும் பாதை மறிக்கப்படும். இதனால், விலங்குகள், தங்களது குட்டிகளுக்கு சரியாக உணவு கொடுக்க முடியாமல் போகும்.
A68a பனிப்பாறை மோதும் இடத்தில் இருக்கும் உயிரினங்கள் எல்லாமே நசுங்கி அழியும். இந்த மோதலினால் ஏற்படும் பாதிப்பு சரியாக, நீண்ட காலம் எடுக்கும்.
சுற்றுச்சூழலால் மீண்டு வர முடியும், ஆனால் அதில் ஒரு அபாயம் இருக்கிறது. ஒருவேளை இந்த பனிப்பாறை எங்காவது சிக்கினால், அந்த இடத்தில் சுமாராக 10 வருடங்கள் வரை இருக்கும். அது தெற்கு ஜார்ஜியாவின் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, பொருளாதாரத்துக்கும் பெரிய வித்தியாசத்தை உண்டாக்கும் என பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே அமைப்பின் பேராசிரியர் கெராய்ண்ட் டார்லிங் (Geraint Tarling) சொல்கிறார்.
அன்டார்டிகாவின் பனிப்பாறைகளுக்கு, பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி, ஒரு மயானம் போல இருக்கிறது.
இந்த பனிப்பாறைகள், அன்டார்டிகாவில் இருந்து, வலுவான நீரோட்டத்தால் பிரிகிறது. அதன் பின், அருகில் இருக்கும் ஆழமற்ற நில பகுதிகளில் சிக்கிக் கொள்கிறது. இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. பெரிய பனிப்பாறைகள், நிலப் பகுதிகளில் இருந்து பார்க்கும் தொலைவில், மெல்ல உருகுகின்றன.
A68a பனிப்பாறை, ஆள் காட்டி விரலை நீட்டிக் கொண்டு இருப்பது போல இருக்கிறது. இந்த பனிப்பாறை கடந்த 2017-ம் ஆண்டு மத்தியில், அன்டார்டிகாவில் இருந்து பிரிந்ததில் இருந்து பயணித்துக் கொண்டு இருக்கிறது. தற்போது பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி பகுதியின் தென் மேற்கு பகுதியில், சில நூறு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது.
இந்த A68a பனிப்பாறை, இங்கிலாந்தில் இருக்கும் சொமர்செட் கவுண்டி (4,200 சதுர கிலோமீட்டர்) அளவுக்கு இருக்கிறது. இந்த பனிப்பாறையின் எடை பல நூறு பில்லியன் டன். ஒருவேளை, இந்த பனிப்பறையின் relative thinness என்று சொல்லப்படும் மூழ்கி இருக்கும் அடிப்பகுதியின் ஆழம், 200 மீட்டருக்கும் குறைவாக இருந்தால், இந்த பனிப்பாறை, தெற்கு ஜார்ஜியாவின் கடற்கரை வரை சறுக்கிக் கொண்டு வருவதற்கான, சாத்தியக் கூறுகள் இருக்கிறது.
இப்படி கடற்கரையில் வரும் பனிப்பாறைகளால் நிறைய பாதிப்புகள் ஏற்படும் என்கிறார் பேராசிரியர் டார்லிங்.
கடற்கரையில், பனிப்பாறை வந்து தங்கினால், பென்குயின்கள் மற்றும் கடல் சிங்கங்கள், தங்கள் குட்டிகளுக்கு உணவு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும். பென்குயின்கள் மற்றும் கடல் சிங்கங்கள் பயணித்து தனக்கான உணவுகளை கொண்டு வரும் தூரம் மிகவும் முக்கியம். இந்த உயிரினங்கள் அதிக தூரம் பயணித்து உணவைச் சேகரிக்க வேண்டும் என்றால், அதன் குட்டிகளுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுக்க முடியாது. அதன் குட்டிகள் பசியிலேயே இறந்துவிடும் என்கிறார் பேராசிரியர் டார்லிங்.
கடந்த 2004-ம் ஆண்டு, தெற்கு ஜார்ஜியாவில் A38 எனும் பனிப்பாறை வந்த போது, எண்ணற்ற பென்குயின் குட்டிகள் மற்றும் கடல் சிங்கத்தின் குட்டிகள், கடற்கரையில் செத்துக் கிடந்தது.
பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே ஆராய்ச்சியாளர்கள், A68a பனிப்பாறையைப் பற்றி, தெற்கு ஜார்ஜியாவில் ஆராய்ச்சி செய்வதற்குத் தேவையானவைகளை ஏற்பாடு செய்யும் வேலையில் இருக்கிறார்கள்.
இந்த A68a பனிப்பாறை, மீன் பிடி தொழில் நடக்கும் இடத்தில் மற்றும் விலங்குகள் சுற்றித் திரியும் இடத்தில் வந்து, அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா என ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.
இந்த பனிப்பாறையினால் ஏற்படும் தாக்கங்கள் பன்முகத்தன்மை கொண்டது. இதன் தாக்கங்கள் எல்லாமே எதிர்மறையானது அல்ல என்கிறார் பேராசிரியர் டார்லிங்.
உதாரணமாக, பனிப்பாறைகள், தன்னோடு நிறைய தூசுகளை எடுத்து வரும். இது பெருங்கடலில் இருக்கும் பிளாங்க்டன் எனும் உயிரினத்தை வளப்படுத்தும். இது ஒட்டு மொத்தமாக உணவுச் சங்கிலியை மேம்படுத்தும்.
A68a தெற்கு ஜார்ஜியாவை நோக்கிய பாதையில் தான் இருக்கிறது என்கிறது செயற்கைக் கோள் படங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், என்ன நடக்கும் என சரியாகச் சொல்வது மிகவும் கடினம் என்கிறார் பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே அமைப்பின் ரிமோட் சென்சிங் மற்றும் மேப்பிங் நிபுணர் முனைவர் பீட்டர் ஃப்ரிட்வெல் (Peter Fretwell).
செண்டினல் 1 ரேடார் விண்கலத்தின், இணை விண்கலத்தில் இருந்து, A68a பனிப்பாறை தொடர்பான, கூடுதல் படங்களை அனுப்ப, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு, விண்ணப்பம் அனுப்பப்பட்டுக் கொண்டு இருக்கிறது என முனைவர் ஆண்ட்ரூ ஃப்ளெம்மிங் சொல்லி இருக்கிறார்.
இந்த விண்கலம், எந்த கால நிலையிலும் A68a பனிப்பாறையை பின் தொடர முடியும்.
பல்வேறு வெடிப்புகளுக்குப் பிறகும், இன்னமும் A68a பனிப்பாறை, ஒரே பனிப்பாறையாக இருப்பதே பிரம்மிக்க வைக்கும் விஷயம் தான். இந்த நேரத்துக்கு எல்லாம், A68a பனிப்பாறை உடைந்துவிடும் என முழுமையாக எதிர்பார்த்து இருந்தேன் என்கிறார் முனைவர் ஃப்ளெம்மிங்.
இந்த பனிப்பாறை தெற்கு ஜார்ஜியாவை மையமாகக் கொண்டு சுற்றிக் கொண்டே வடக்கு நோக்கிப் போனால், A68a உடையத் தொடங்கும். இந்த பனிப்பறை வேகமாக, வெப்பமான நீரைச் சென்று அடையும். குறிப்பாக, Wave action என்றழைக்கப்படும் அலை நடவடிக்கை, இந்த பனிப்பாறையை உருக வைக்கத் தொடங்கும் என்கிறார் ஃப்ளெம்மிங்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- வாட்ஸ் ஆப்பில் 7 நாட்களில் மெசேஜுகள் தானாக அழிந்துவிடும் ஆப்ஷன் அறிமுகம்
- தமிழகத்தில் யாத்திரை அரசியல் பா.ஜ.கவுக்கு பலன் தருமா?
- அமெரிக்க தேர்தல் குழப்பத்திலும் சில நன்மைகள்: பட்டியலிடும் அமெரிக்க தமிழர்கள்
- ஒட்டக பாலில் டீ கேட்டு கடை ஊழியர்களைத் தாக்கிய இளைஞர்கள் கைது
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- "தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா?" - கமல் ஹாசன் விளக்கம்
- அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: