7.5 சதவீத ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல் அளித்த சட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த அளவுக்கு உதவும்?

நீட்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தருவதற்கான தமிழக அரசின் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இது அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த அளவுக்கு உதவும்?

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.

"Tamil Nadu Admission to Undergraduate Courses in Medicine, Dentistry, Indian Medicine and Homeopathy on preferential basis to the students of Government Schools Bill 2020" என்ற இந்தச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 3-4 வாரங்கள் தேவைப்படுமென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறிய நிலையில், இது தொடர்பாக அரசாணை ஒன்றை வியாழக்கிழமையன்று வெளியிட்டது மாநில அரசு. இதற்கு அடுத்த நாளே தமிழக ஆளுநர் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்தச் சட்டம் தொடர்பாக இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கருத்தைப் பெற செப்டம்பர் 26ஆம் தேதி கடிதம் அனுப்பியதாகவும் அவர் அக்டோபர் 29ஆம் தேதி தனது கருத்தைத் தெரிவித்ததாகவும் இதையடுத்து அந்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.

இந்த ஒப்புதலின் மூலம் தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் ஒரு முடிவை எட்டியிருக்கிறது.

கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

"Tamil Nadu Admission to Undergraduate Courses in Medicine, Dentistry, Indian Medicine and Homeopathy on preferential basis to the students of Government Schools Bill 2020" என்ற இந்தச் சட்டம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிச்சயம் உதவும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. முதலில் எதிர்த்த தனியார் பள்ளிகள் சங்கங்கள் கூட, இப்போது இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு புதிதாக இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதால், நூலிழையில் வாய்ப்பைத் தவறவிடும் மாணவர்கள் ஏமாற்றமடையக்கூடும். ஆகவே இடங்களை அதிகரிக்க வேண்டும் என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

"இந்த உள் ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிச்சயம் உதவும். ஆனால், இந்த வருடம் கடுமையான போட்டி இருக்கிறது. கட் - ஆஃப் அதிகரித்திருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்த ஒதுக்கீட்டால் நூலிழையில் வாய்ப்பை இழக்கும் சில மாணவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். அதனால் 250-300 இடங்களை புதிதாக ஏற்படுத்த வேண்டும்" என்கிறார் அவர்.

நீட்

பட மூலாதாரம், Getty Images

தவிர, அரசு பள்ளி மாணவர்களில் பலர் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு எம்பிபிஎஸ் தவிர்த்த பிற மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி படிப்புகள் குறித்த அறிமுகம் இல்லாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் என தனியாக உள் ஒதுக்கீடு கொடுப்பது கூடாது எனக் கூறிவந்த தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளரான நந்தகுமார், இப்போது இந்த ஒதுக்கீட்டை வரவேற்பதாகத் தெரிவிக்கிறார்.

"தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்தான் நிரப்பப்படுகின்றன. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களையும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களாக கருதி இடஒதுக்கீடு வழங்குவோம் எனக் கூறியிருக்கிறார்கள். பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் அப்படிப் படிக்கிறார்கள். ஆகவே இதனை இப்போது வரவேற்கிறோம்" என்கிறார் நந்தகுமார்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட பி. கலையரசன் குழு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு வழங்கலாம் எனக் கூறியது. கல்வியாளரும் கல்வி ஆலோசகருமான நெடுஞ்செழியன், "அந்தக் குழு குறிப்பிட்டதைப் போல 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்," என்கிறார்.

"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால் இப்போதைய கட்டமைப்பில் தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிக இடங்களை மருத்துவப் படிப்பில் பிடித்துக்கொள்கிறார்கள்" என்கிறார் அவர்.

மேலும் சில ஆலோசனைகளையும் அவர் முன்வைக்கிறார். "எந்த ஒரு தனியார் பள்ளியும் மேல்நிலை வகுப்புகளோடு சேர்த்து ஒருங்கிணைந்த படிப்புகளை (integrated courses) வழங்கக்கூடாது என்ற விதியிருக்கிறது. ஆனால், நிறைய தனியார் பள்ளிகள் 11, 12ஆம் வகுப்போடு சேர்த்து நீட், ஐஐடி தேர்வுகளுக்கு வகுப்புகளை நடத்துகிறார்கள். இம்மாதிரி வகுப்புகள், அரசு பள்ளிகளில் கிடையாது. ஆகவே இப்படி தனியார் பள்ளிகள் கூடுதல் வகுப்புகளை நடத்துவதைக் கண்காணிக்க வேண்டும்," என்கிறார் அவர்.

நீட்

பட மூலாதாரம், Getty Images

நீட் தேர்வுக்கு எதிராக நீண்ட காலமாக பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மருத்துவர் எழிலன், இந்த உள்ஒதுக்கீட்டை வரவேற்றாலும் நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்குப் பெறுவதே இலக்காக இருக்க வேண்டும் என்கிறார்.

"நீட்டில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெற வேண்டும். எல்லா படிப்புகளிலும் நுழைவுத் தேர்வு இல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை இருக்க வேண்டும். நீட் தேர்வு என்பது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதி. படிப்படியாக எல்லா கல்லூரி சேர்க்கைகளுக்கும் நுழைவுத் தேர்வு வைக்க நினைக்கிறார்கள். இப்போதே நீட் கோச்சிங் வகுப்புச் சந்தை 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையாக வளர்ந்து நிற்கிறது" என சுட்டிக்காட்டுகிறார் எழிலன்.

மருத்துவ படிப்புகளை 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்புவது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; ஏனென்றால் 12ஆம் வகுப்புத் தேர்வை அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் எழுதுகிறார்கள் என்கிறார் அவர்.

இருந்தபோதும் தற்போதைய சூழலில் 7.5 இட ஒதுக்கீடு தந்திருப்பதை வரவேற்க வேண்டும் என்று குறிப்பிடும் எழிலன், "இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1,600 மாணவர்கள் நீட் தேர்வில் தகுதியடைந்திருக்கிறார்கள். அதில் 300 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைப்பது பெரிய விஷயம்" என்கிறார்.

பிரச்சனையின் பின்னணி

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய தகுதித் தேர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமூக - பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் வைத்து வகைப்படுத்த முடியாது. அதனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் அவர்கள் தலைமையில் இது குறித்துப் பரிசீலிக்க கடந்த மார்ச் மாதம் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. அதன்படி தமிழக அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவுசெய்தது. அதற்கான சட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தினார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெறாமல் மருத்துவக் கலந்தாய்வு நடக்காது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்குப் பிறகே, அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்து சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும்படி வலியுறுத்தினர்.

மேலும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். அதற்குப் பதிலளித்த ஆளுநர், இந்த விவகாரத்தில் 3-4 வாரத்தில் முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

நீட்

பட மூலாதாரம், Getty Images

இதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை ஒன்றை அக்டோபர் 29ஆம் தேதியன்று பிறப்பித்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இந்தச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்கப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 300 இடங்கள் கிடைக்கக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :