பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோதி பெயரில் முழக்கமா? உண்மை என்ன? #BBCRealityCheck
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பெயரைச் சொல்லி முழக்கம் எழுப்பியதாக சில இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் ஒரு ஆசிரியர் தலை வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஆவேசமாக விவாதம் நடைபெற்றபோதுதான் இப்படி மோதி பெயரில் முழக்கம் எழுப்பப்பட்டதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டன.
உண்மையில் அப்படி பாகிஸ்தான் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மோதி பெயரில் முழக்கம் எழுப்பினார்களா?
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உண்மையில் நடந்தது என்ன?
பிரான்ஸில் சர்ச்சைக்குரிய வகையில் முகமது நபி குறித்து கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் காவாஜா ஆசிப் உள்ளிட்ட எம்.பி.க்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். இந்த கார்ட்டூன் சர்ச்சையில்தான் பிரான்ஸில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டார்.
இந்த ஆசிரியர் கொலைக்குப் பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் வெளியிட்ட கருத்துகள் முஸ்லிம் நாடுகள் சிலவற்றை கோபப்படுத்தின. இந்த கருத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் விமர்சித்தார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு மற்றும் எதிர்க்கட்சி இரண்டுமே தனித்தனி தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சித்தன.
விவாதம் சென்றுகொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அவையில் எழுந்து உரையாற்ற முயற்சித்தார் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி. அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் "ஓட்டிங், ஓட்டிங்…" என்று முழக்கம் எழுப்பினார்கள். அவர்களது கோரிக்கை அரசுத் தரப்புத் தீர்மானத்துக்குப் பதிலாக தங்கள் தரப்புத் தீர்மானத்தை சமர்ப்பித்து ஓட்டெடுப்புக்கு அனுமதிக்கவேண்டும் என்பதே ஆகும்.

இந்த முழக்கம் எழுப்பும் இரண்டு நிமிடக் காட்சி இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களிலும், டிஜிட்டல் தளங்களிலும், பிரபல சமூக ஊடக கணக்குகளிலும் வெளியிடப்பட்டன. இந்த முழக்கம் எந்த சூழ்நிலையில் எழுப்பப்பட்டது என்ற எந்த விளக்கமும் இல்லாமலே இவை வெளியிடப்பட்டன.
"ஓட்டிங் ஓட்டிங்..." என்று எம்.பி.க்கள் முழக்கமிட்ட நிலையில், அவர்கள் "மோதி... மோதி" என்று முழக்கம் எழுப்பியதாக டைமஸ் நவ், இந்தியா டிவி, எக்கனாமிக் டைம்ஸ் மற்றும் குறிப்பிட்ட பிரபல சமூக ஊடக கணக்குகள் தவறாகக் கூறின. பிரதமர் இம்ரான் கானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மோதி பெயரை முழக்கமாக எழுப்பியதாகவும் இந்த ஊடகங்கள் தவறாக குறிப்பிட்டன.
இப்படி தவறாக வெளியிடப்பட்ட செய்தியை எக்கனாமிக் டைம்ஸ் தமது தளத்தில் இருந்து அகற்றிவிட்டது. டைம்ஸ் நவ் தமது டிவீட்டை டெலீட் செய்துவிட்டது. ஆனால், டைம்ஸ் நவ் தளத்தில் இது தொடர்பான கட்டுரை, குறிப்பிட்ட காணொளியோடு சேர்த்து தொடர்ந்து காணப்பட்டது.
மோதியின் பெயர் இந்த விவாதத்தில் குறிப்பிடப்பட்டதா?
ஆம். அவரது பெயர் விவாதத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால், விவாதத்தில் வேறொரு தருணத்தில், வேறொரு பின்புலத்தில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பிரான்ஸ் விவகாரத்தில் இந்தியாவின் பார்வையை எதிர்க்கட்சிகள் பிரதிபலிப்பதாக வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி குற்றம்சாட்டியபோது மோதியின் பெயர் குறிப்பிடப்பட்டது.
எதிர்க்கட்சிகள் ஆயுதப்படையினர் இடையே பிளவை உண்டாக்க முயல்வதாகவும், பாகிஸ்தான் விரோத உரையாடலை ஊக்குவிப்பதாகவும் இந்த சூடான விவாதத்தில் குறிப்பிட்டார் குரேஷி.
அப்போது அரசு ஆதரவு எம்.பி.க்கள் "மோதிக்கு நண்பர்கள் யாரோ அவர்கள் துரோகிகள், துரோகிகள்" என்று உருது மொழியில் முழக்கம் எழுப்பியது கேட்டது.
ஆனால், மேலே குறிப்பிட்ட இந்திய ஊடகங்களின் செய்திகளில் இதைப் பற்றிக் குறிப்பே இல்லை.
எனவே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் மோதியின் பெயரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமாக எழுப்பியதாக குறிப்பிடும் செய்திகள், இந்த விவாதம் நடந்த சூழ்நிலையைப் பற்றி குறிப்பிடவே இல்லை.
பாகிஸ்தானில் நடந்த விவகாரங்களை இந்திய ஊடகங்கள் தவறாக சித்திரித்த பிற நிகழ்வுகளும் உள்ளன.
பாகிஸ்தான் மாநகரான கராச்சியில் உள்நாட்டுப் போர் மூண்டதாக இந்திய ஊடகங்களில் குறிப்பிடப்பட்டதும் நிகழ்ந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












