7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் பதிலை மறைத்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்

அமைச்சர் ஜெயக்குமார்

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மூன்று - நான்கு வாரங்களாகும் என தமிழக ஆளுநர் கூறியதை ஊடகங்களிடம் தெரிவிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமையன்று தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கோரினர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய சூழலை ஆளுநரிடம் விளக்கினோம். அவர் விரைவாக ஒப்புதல் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆளுநரைக் கட்டாயப்படுத்த முடியாது. நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தி.மு.கவின் சார்பில் புதன்கிழமை (அக்டோபர் 21) தமிழக ஆளுநருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதப்பட்டதாகவும் அதில், "இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக ஒப்புதல் வழங்குங்கள்" என்று வலியுறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த தமிழக ஆளுநர் "நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன். இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது. மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவை என்பதைத் தன்னைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் தெரிவித்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார். இது குறித்த ஆளுநரின் கடிதத்தை மு.க. ஸ்டாலின் தமது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டார்.

செவ்வாய்க்கிழமை அமைச்சர்கள் தன்னைச் சந்தித்தபோது அவர்களிடமும் கால அவகாசம் குறித்து ஆளுநர் பேசியிருக்கும் நிலையில், அதனை அமைச்சர்கள் ஏன் வெளியில் தெரிவிக்கவில்லை என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், "அமைச்சர்களிடம் ஆளுநர் விவாதித்த விஷயங்களை வெளியில் சொல்வது முறையாகாது. அதனால்தான் தெரிவிக்கவில்லை. அதனால்தான் கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக தெரிவித்தோம்" என்று கூறினார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால்தான், 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என ஆளுநர் கூறினாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஜெயக்குமார் அதனை மறுத்த அவர், அப்படி எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என தெரிவித்தார்.

பிரச்சனையின் பின்னணி

நீட்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தகுதித் தேர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமூக - பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் வைத்து வகைப்படுத்த முடியாது என்பதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் அவர்கள் தலைமையில் இது குறித்துப் பரிசீலிக்க கடந்த மார்ச் மாதம் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. அதன்படி தமிழக அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவுசெய்தது. அதற்கான சட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை தனது ஒப்புதலைத் தரவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெறாமல் மருத்துவக் கலந்தாய்வு நடக்காது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்குப் பிறகே, அமைச்சர்கள் ஆளுரைச் சந்தித்து சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும்படி வலியுறுத்தினர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்கப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 300 இடங்கள் கிடைக்கக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: