கொரோனா வைரஸ்: இந்தியாவில் அக்டோபர் 31வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு, புதிய தளர்வுகள் என்ன?

ஊரடங்கு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் வரும் அக்டோபர் 31ஆம் தேதிவரை கொரோனா வைரஸ் ஊரடங்கு, கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அன்லாக் 5.0 என்ற பெயரில் புதிய வழிகாட்டுதல்களை இந்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகள், மல்டிபிளெஸ்கள் ஆகியவை 50 சதவீத இருக்கைகளை நிரப்பும் வகையில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிகளை இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிடும்.

நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி இயங்க அனுமதிக்கப்படும்.

பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் அதை ஒத்த இடங்கள் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி செயல்பட அனுமதிக்கப்படும்.

ஊரடங்கு

பட மூலாதாரம், Getty Images

பள்ளிகள் திறப்பு எப்போது?

பள்ளிகள், கல்லூரிகளை பகுதி, பகுதியாக திறப்பது குறித்து வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு அப்போதைய சூழலுக்கு ஏற்பட மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், அவற்றில் உள்ள கள நிலைமையை கவனத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும்.

ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்தும் வாய்ப்புகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும். சில இடங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர விரும்பினால் அவர்கள் பள்ளிக்கு சென்று வர தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் பெற்றோரின் எழுத்துப்பூர்வ விருப்பத்தின் அடிப்படையிலேயே பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் வருகையை ஆசிரியரோ பள்ளி நிர்வாகமோ கட்டாயப்படுத்தக் கூடாது.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் முன்பாக பொது சுகாதார வசதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை இந்திய பள்ளிக்கல்வித்துறை வெளியிடும்.

இதேபோல, கல்லூரிகள் திறக்கப்படுவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சகத்துடன் ஆலோசித்து நிலவரத்தை இந்திய உள்துறை மதிப்பிட்ட பிறகு அவற்றை திறக்க அனுமதிக்கப்படும்.

ஆராய்ச்சி உள்ளிட்ட பிற துறைகளில் படிப்பவர்கள், தங்களின் துறைத் தலைவர் அவரது நேரடி வருகையை அவசியம் என்று கோரினால் மட்டுமே நேரில் வர வேண்டும்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பொது இடங்களில் கட்டுப்பாடு

சமூக / கல்வி / விளையாட்டு / பொழுதுபோக்கு / கலாசார / மத / அரசியல் செயல்பாடுகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்த ஏற்கனவே 100 நபர்களின் உச்சவரம்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மட்டுமே பொருந்தும்.

2020, அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே, 100 நபர்களின் வரம்புக்கு அப்பால் இதுபோன்ற கூட்டங்களை அனுமதிக்க மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

மூடிய இடங்கள் என்றால், அரங்கில் அதிகபட்சம் 50% பேர் இருக்க அனுமதிக்கப்படும், இதன் உச்சவரம்பு 200 நபர்களாக இருக்க வேண்டும். முக கவசங்கள் அணிவது, சமூக தூரத்தை பராமரித்தல், உடல் வெப்ப ஸ்கேனிங்கிற்கான ஏற்பாடு மற்றும் கை கழுவுதல் அல்லது சுத்திகரிப்பான்கள் பயன்பாடு கட்டாயம்.

திறந்தவெளி இடங்கள் என்றால் தரையின் / இடத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முக கவசங்களை கட்டாயமாக அணிவது, உடல் வெப்ப ஸ்கேனிங் மற்றும் கை கழுவுதல் அல்லது கை சுத்திகரிப்பான்கள் பயன்பாடு அவசியமாகும்.

இதுபோன்ற இடங்களில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டு அவற்றை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

ஊரடங்கு

பட மூலாதாரம், Getty Images

கட்டுப்பாட்டு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் என்ன?

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே இந்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சர்வதேச விமான பயணிகள் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள். பொழுதுபோக்கு பூங்காக்கள், அதை ஒத்த இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் அக்டோபர் 31வரை கடுமையாக ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்படும்.

இந்த மண்டலங்களில் வைரஸ் பரவல் தடுப்பு வரம்பு எவை என்பதை மாவட்ட நிர்வாகம் வரையறுக்க வேண்டும். இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிடும் வழிகாட்டுதல்களுக்கு பொருந்தும் வகையில் இந்த ஊரடங்கு வரம்பும் கட்டுப்பாடும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாநிலங்களுக்கு கட்டுப்பாடு

மாநில அரசுகள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே எவ்வித உள்ளூர் பொது முடக்கத்தையும் அறிவிக்கக் கூடாது. மாநில, மாவட்ட, வட்டார, கிராம அளவிலான பொது முடக்க கட்டுப்பாடுகளை மாநில அரசோ, யூனியன் பிரதேச அரசுகளோ மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக அறிவிக்கக்கூடாது.

மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையேயும் ஆட்களும், சரக்கு போக்குவரத்தும் நடைபெற எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. அத்தகைய நடமாட்டங்களுக்கு தனியாக எவ்வித இ-பெர்மிட் தேவை என கூறக்கூடாது.

கோவிட்-19 வைரஸ் பாதுகாப்பு தேசிய வழிகாட்டுதல்களை சமூக இடைவெளியுடன் கடைப்பிடிப்பது நாடு முழுவதும் தொடரும். கடைகள், வாடிக்கையாளர்களின் சமூக இடைவெளி கடைப்பிடிப்பை உறுதிப்படுத்திக் கொண்டு இயங்கலாம். இதன் அமலாக்கம் வலுவாக செய்யப்படுவதை இந்திய உள்துறை கண்காணிக்கும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அவசியமான மருத்துவ தேவை எழாதவரை, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரோக்கிய சேது செயல்பேசி செயலி பயன்படுத்தப்படுவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் என்று இந்திய உள்துறை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: