ஹெச். ராஜா பெயர் இல்லாது பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் - தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை

H RAJA

பட மூலாதாரம், H RAJA FACEBOOK PAGE

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமை இன்று அறிவித்துள்ள தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஹெச். ராஜாவின் பெயர் இடம்பெறாமல் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.பி. நட்டா தலைமை பொறுப்புக்கு வந்தபின்பு அவரது தலையின்கீழ் இயங்கும் புதிய நிர்வாகிகள் பட்டியல் இது என்றும், ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் வட்டாரங்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தன.

இதன்மூலம் ஹெச். ராஜா தேசிய செயலாளர் பதவியில் நீடிக்கவில்லை என்பது உறுதியாகிறது.

2014ஆம் ஆண்டு முதல் ஹெச். ராஜா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நிர்வாகிகள் பட்டியலில் 12 பேர் தேசிய துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்; எட்டு பேர் தேசிய பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் பொதுச் செயலாளர்களாக மூவரின் பெயரும், தேசிய செயலாளர்களாக 13 பேரின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட புதிய நிர்வாகிகளில் ஒருவர் கூட, தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை. பொருளாளர், அமைப்புச் செயலாளர், தேசிய செய்தித் தொடர்பாளர்கள் என வேறு எந்தப் பொறுப்புக்கும் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே, "தேசிய தலைவர் திரு. ஜே.பி. நட்டா தலைமையில் புதிதாக பொறுப்பேற்கும் தேசிய நிர்வாகிகள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்," என்று ராஜா தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: