தமிழக அரசியல்: ஜெயலலிதா தோழி சசிகலா பற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

பட மூலாதாரம், Getty images
சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தாலும், வராவிட்டாலும் அதிமுகவினருக்கு கவலையில்லை என்றும் அவரும் அவரது குடும்பத்தினரும் தலையிடாதவாறு கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதே அதிமுகவின் எண்ணம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, சசிகலா சிறையில் இருந்து வந்தாலும், கட்சியிலும், ஆட்சியிலும் அவர் தலையிடாதவாறு அதிமுக பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலதாவின் தோழி சசிகலா, ஒரு சில வாரங்களில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவரது வழக்குரைஞர் கூறியிருந்தார்.
அவர் சிறைவாசம் முடிந்துவந்ததும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவுக்கு பொறுப்பேற்றது போல இந்த முறை நடக்க வாய்ப்பில்லை என்பதை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் தலைமை குறித்த கேள்வி எழுந்தபோது, கட்சியின் பொதுச் செயலாளராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவினர் அவரை 'சின்னம்மா' என்றும் அழைத்தனர்.
ஆனால், கட்சியில் ஏற்பட்ட பிளவு மற்றும் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றது ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு, கட்சித் தலைமையை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
சசிகலா விடுதலைக்கு பின்னர் அவர் மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்படுவாரா என்ற கேள்வியை அதிமுக அமைச்சர்கள் பல நிகழ்வுகளிலும் எதிர்கொள்கின்றனர்.
தற்போது மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவின் வருகை குறித்த எந்த கவலையும் கட்சியினருக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரை போல நடிகர் விஜயை சித்தரித்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது என்றார்.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணைய கலந்தாய்வு எப்போது நடைபெறும் என செய்தியாளர்கள் கேட்டபோது, பொதுப்போக்குவரத்து தொடங்கி உள்ளதால், கலந்தாய்வுக்கான சூழல் கனிந்துள்ளது என்று கூறினார். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, பணி நியமன கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- "இரான் வசம் அனுமதி அளவைவிட பல மடங்கு செறிவூட்டிய யூரேனியம்"
- அண்ணா சாண்டி: கேரளாவில் பெண்ணுரிமைக்காக நூற்றாண்டுக்கு முன்பு எழுந்த குரல்
- கல்வித்துறையில் புதுமை படைக்கும் தமிழக பெண்கள்
- பொறியியல் அரியர் மாணவர்கள் தேர்ச்சி: தமிழ்நாடு அரசின் விளக்கம் என்ன?
- விடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












