மன்மோகன் சிங்: பொருளாதார நிபுணரை நிதியமைச்சராக்கிய நரசிம்ம ராவ்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி இந்தி குழு
- பதவி, டெல்லி
இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 89-வது பிறந்த நாள்.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு மிக நீண்ட காலம் இந்தியப் பிரதமராக இருந்தவர் அவர்.
அவர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் அமைத்தார்.
ஆனால், அடிப்படையில் மன்மோகன் சிங் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு பொருளாதார நிபுணராக இருந்து வந்தார். அவரை அரசியலுக்கு அழைத்து வந்த பெருமை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவையே சேரும்.
1991இல் நரசிம்மராவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது போன்ற சூழ்நிலையே காணப்பட்டது. ரோஜர்ஸ் ரிமூவல் கம்பெனியின் டிரக் , அவரது புத்தகங்கள் அடங்கிய 45 அட்டைப்பெட்டிகளுடன் ஹைதராபாத்திற்கு புறப்பட்டிருந்தது.
"இந்த புத்தகங்கள் இங்கேயே இருக்கட்டும், நீங்கள் திரும்பி வருவீர்கள் என நான் நம்புகிறேன்" என்று அரசு அதிகாரியும், ஆர்வத்திற்காக சோதிடம் கற்றவருமான அவருடைய நண்பர் அப்போது அவரிடம் கூறினார்.
வினய் சீதாபதி தனது 'ஹாஃப் லைன் - ஹவ் பி.வி. நரசிம்மராவ் ட்ரான்ஸ்ஃபார்ம்ட் இண்டியா' என்ற புத்தகத்தில், நரசிம்மராவ், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இந்தியா சர்வதேச மையம் ஒன்றில் உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்கும் அளவிற்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் உறுதியாக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், எதிர்காலத்தில் அவர் எப்போதாவது ஒரு சில நாட்கள் டெல்லிக்கு வந்தால் தங்குவதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று அவர் கருதினார்.
ஆனால் பின்னர் எல்லாமே திடீரென்று தலைகீழாக மாறியது. 1991ஆம் ஆண்டு மே 21 அன்று ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பிபிசியின் பர்வேஸ் ஆலம் அவரை நாக்பூரில் தொடர்பு கொண்டு பேசினார். அவருடன் நடந்த உரையாடலை கவனித்தால், அடுத்த சில நாட்களில் அவர் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கப்போகிறார் என்பதை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

பட மூலாதாரம், PIB
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் துக்கம் விசாரிக்க வந்த அனைத்து வெளிநாட்டு விருந்தினர்களும் சென்றுவிட்ட பிறகு சோனியா காந்தி, இந்திரா காந்தியின் முன்னாள் முதன்மை செயலர் பி.என்.ஹக்சரை, 10, ஜன்பத்திற்கு (ராஜீவ் காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லம்) வரச்சொன்னதாக, நட்வர் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமராவதற்கு உங்கள் பார்வையில் யார் மிகவும் பொருத்தமானவர் என்று சோனியாகாந்தி அவரிடம் கேட்டார். அப்போதைய துணை குடியரசுத்தலைவர் ஷங்கர் தயாள் சர்மா என்று ஹக்சர் பெயரிட்டார்.
நட்வர் சிங் மற்றும் அருணா ஆசாஃப் அலி ஆகியோருக்கு, ஷங்கர் தயாள் ஷர்மாவின் நிலைப்பாட்டை அறியும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஷர்மா அவர்கள், இருவருக்கும் செவிசாய்த்தார். சோனியாவின் இந்த செய்கையால் தாம் மிகுந்த பெருமையும் , நம்பமுடியாத மகிழ்ச்சியும் அடைவதாக அவர் கூறினார். ஆனால் "இந்தியப் பிரதமர் பதவி ஒரு முழுநேர பொறுப்பு. எனது வயது மற்றும் உடல்நலம், நாட்டின் அந்த உயர் பதவிக்கு என்னை முழுமையாக நியாயம் செய்ய அனுமதிக்காது," என்று அவர் கூறினார்.
இருவரும் திரும்பிச் சென்று ஷங்கர் தயாள் ஷர்மாவின் செய்தியை சோனியா காந்தியிடம் தெரிவித்தனர். சோனியா மீண்டும் ஹக்சரை வரவழைத்தார். இம்முறை ஹக்சர், நரசிம்மராவ் என்ற பெயரை சொன்னார். அதன் பின்னர் நடந்த கதை ஒரு வரலாறாக மாறியது.
நரசிம்மராவ், இந்திய அரசியலின் மேடுபள்ளமான பரப்பில் விழுந்தெழுந்து உயர்ந்த நிலைக்கு முன்னேறினார்.
அவர் எந்த ஒரு பதவியை அடைவதற்காகவும், அரசியல் பாராசூட்டை நாடவில்லை. டாக்டர் மன்மோகன் சிங்கை கண்டுபிடித்ததுதான், காங்கிரசுக்கும் இந்தியாவுக்கும் ராவின் மிகப்பெரிய பங்களிப்பு.
மன்மோகனின் பெயரை பரிந்துரைத்த அலெக்சாண்டர்
"1991இல் நரசிம்மராவ் பிரதமரானபோது, அவர் பல விஷயங்களில் நிபுணராகியிருந்தார். அவர் முன்பு சுகாதார மற்றும் கல்வி அமைச்சக பொறுப்புகளை வகித்திருக்கிறார். அவர் இந்திய வெளியுறவு அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஒரே ஒரு துறையில்தான் அவருக்கு அவ்வளவாக நிபுணத்துவம் இருக்கவில்லை. அதுதான் நிதி அமைச்சகம்.

பட மூலாதாரம், Getty Images
பிரதமராக வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அமைச்சரவை செயலர் நரேஷ் சந்திரா, இந்தியாவின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி, எட்டு பக்க அறிக்கையை அவரிடம் கொடுத்தார்," என்று வினய் சீதாபதி பிபிசியிடம் தெரிவித்தார்.
"இந்தியா இனி பழைய பாணியில் இயங்காது என்று சர்வதேச செலாவணி நிதியத்திற்கும், அவரது உள்நாட்டு எதிரிகளுக்கும் தெளிவுபடுத்தும் விதமான ஒரு முகம் அவருக்கு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் அவரது மிக நெருங்கிய ஆலோசகரான பி.சி. அலெக்சாண்டரிடம், சர்வதேச நிலையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒருவரை நீங்கள் நிதி அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கமுடியுமா என்று கேட்டார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவரும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸின் இயக்குநராகவும் இருந்த ஐ.ஜி. படேலின் பெயரை அலெக்சாண்டர் பரிந்துரைத்தார்," என்று சீதாபதி மேலும் கூறினார்.

பட மூலாதாரம், AFP
"ஐ.ஜி. படேல் டெல்லிக்கு வர விரும்பவில்லை, ஏனெனில் அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் அப்போது வதோதராவில் வசித்து வந்தார். பின்னர் அலெக்சாண்டர் , மன்மோகன் சிங்கின் பெயரை சொன்னார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாக, அலெக்சாண்டர், அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டார். சில மணிநேரங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததால் மன்மோகன் சிங் அப்போது தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி இந்த திட்டத்தைப் பற்றி சொன்னபோது, அவர் அதை நம்பவில்லை," என்று சீதாபதி தெரிவித்தார்.
"மறுநாள், பதவியேற்பு விழாவிற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, பல்கலைக்கழக மானியக் குழு அலுவலகத்தில் மன்மோகன் சிங், நரசிம்மராவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றார். நான் உங்களை எனது நிதி அமைச்சராக்க விரும்புகிறேன் என்று அவர் சொன்னார். நாம் வெற்றிகரமாக இருந்தால், நம் இருவருக்கும் அதற்கான நற்பெயர் கிடைக்கும். ஆனால் நாம் தோல்வியடைந்தால் நீங்கள் விலக வேண்டியிருக்கும் என்று பதவியேற்பு விழாவிற்கு முன்பு, நரசிம்மராவ் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தார்," என்று சீதாபதி மேலும் கூறினார்.
"1991 வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங், பட்ஜெட்டின் வரைவை எடுத்துக் கொண்டு நரசிம்மராவிடம் சென்றபோது, அதை அவர் நிராகரித்துவிட்டார். இதுபோன்ற ஒன்றுதான் எனக்குத்தேவை என்றால் நான் ஏன் உங்களை தேர்வு செய்திருக்கப்போகிறேன் என்று நரசிம்மராவ் கேட்டார்," என சீதாபதி கூறுகிறார்.
தனது முதல் பட்ஜெட்டில் மன்மோகன் சிங், விக்டர் ஹ்யூகோவின் புகழ்பெற்ற வரியைக் குறிப்பிட்டார். "ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றால் உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதை தடுக்க முடியாது."
அவர் தனது பட்ஜெட் உரையில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி மற்றும் நேரு ஆகியோரை பலமுறை குறிப்பிட்டார். ஆனால் அவர்களது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்க அவர் சிறிதும் தயங்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












