விவசாயிகள் உதவி திட்டத்தில் டிஜிட்டல் மோசடி: 'தகுதியில்லாதவர்களுக்கு அரசு பணம்'

- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
2019ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு சார்பில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ரூ.6000 நிதி உதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் தகுதிவாய்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.2000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாக எழுந்த புகாரையடுத்து தமிழக வேளாண்துறை, சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைத்தது.
கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் சிபிசிஐடி விசாரணையில் கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தகுதியற்ற நபர்களின் வங்கி கணக்குகளில் விவசாயிகளுக்கான நிதி உதவித் தொகை செலுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியற்ற வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

"பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் கிடைக்கும் ரூ.6000 உதவித் தொகை, 3 முதல் 5 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து வரும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச பொருளாதார உதவியாக கருதப்படுகிறது.
இந்த தொகையை நம்பி ஏராளமான நலிவடைந்த விவசாயிகள் வேளாண்மைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால், தகுதிவாய்ந்த விவசாயிகளை அரசின் உதவித் தொகை சென்றடையாமல், விவசாயிகள் அல்லாதவர்களுக்கும், ஒரே நிலத்தில் விவசாயம் செய்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் அனைத்தும் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே வெளிப்படையாக நடைபெற்று வருகிறது" என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ராமமூர்த்தி.
கொரோனா பொதுமுடக்கத்தை பயன்படுத்தி போலியான விண்ணப்பங்கள் உருவாக்கம்
சேலம் மாவட்டத்தில் 90 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களை சமர்பித்தும், விண்ணப்பத்தில் முறைகேடுகள் செய்தும் நிதி உதவித் தொகையை பெற்றுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவை கொரோனா பொதுமுடக்க காலத்தில் விண்ணப்பிக்கப்பட்டவை எனவும் கூறுகிறார் இவர்.
"கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்னர், இத்திட்டத்தில் உதவி பெற விரும்பும் விவசாயிகள் உரிய நில ஆவணங்களை கிராம நிர்வாக அதிகாரியிடம் சமர்பித்து சான்று வாங்க வேண்டும். பின்னர், விவசாயியின் விண்ணப்பம் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறைக்கு அனுப்பி ஆவணங்கள் பரிசோதிக்கப்படும். உரிய பரிசோதனைகளுக்கு பின் மாவட்ட வேளாண்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்திற்கு பரிந்துரைக்கப்படும். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இவை அனைத்தும் இணையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் கணினி மையங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இங்கு தான் முறைகேடுகளும் துவங்கியுள்ளன."
"போலியான ஆவணங்களை தயார் செய்து தகுதியற்றவர்களின் பெயர்களும் விவசாயிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் அனைத்துமே கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அலுவலர்களின் ஒப்புதலோடு தான் நடைபெற்றுள்ளது. எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பொதுமுடக்க காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார் ராமமூர்த்தி.
பணி நீக்கம் தான் தண்டனை
விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் செய்த அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பின் செயலாளர், நல்லசாமி.
"நமது நாட்டில் அமல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் சிறப்பானவை தான், ஆனால் அவற்றை அமல்படுத்துவதில் தான் ஊழல், முறைகேடுகள், லஞ்சம் ஆகிய சிக்கல்கள் இருக்கின்றன. மகாத்மா காந்தியின் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம். வேளாண் மக்கள் பயன்பெறக் கூடிய இத்திட்டம், இன்றைக்கு ஊழல் நிறைந்த திட்டமாக மாறியுள்ளது. மரத்தடியில் படுத்துக்கொண்டு கிடைக்கும் பணத்தை வாங்கிச் செல்லும் அறிவற்ற சமூகமாக விவசாயிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். பொய்யான பட்டியலை சமர்பித்து அதிகாரிகள் நிதி உதவியை கைப்பற்றிக்கொள்கின்றனர். இதேபோன்ற ஊழல் தான் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திலும் நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் அனைத்துமே நம் அனைவருக்கும் தெரிந்தவை தான். தண்டனைகள் கடுமையாகும் வரை இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்" என்கிறார் இவர்.

பட மூலாதாரம், Getty Images
"கடன் மற்றும் வறுமை போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் இதே காலகட்டத்தில் தான், விவசாயிகளுக்கான நிதி உதவியில் மோசடி செய்யும் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் அல்லது இடைநீக்கம் போன்ற குறைந்தபட்ச தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. தண்டனை காலம் முடிந்து மீண்டும் பணிக்கு வருபவர்கள், மீண்டும் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். எனவே, ஊழல் மற்றும் லஞ்ச முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகளை பணி நீக்கம் செய்வதே மக்களுக்கான திட்டங்கள், மக்களை சென்றடைய வழிவகுக்கும்" என்கிறார் நல்லசாமி.
மீண்டுமொரு விஞ்ஞான ஊழல்
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கிசான் திட்டத்தில் விஞ்ஞான ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டுகிறார் பாரதிய ஜனதா கட்சி - விவசாய அணியின் மாநில தலைவர் நாகராஜன்.
"இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பாஜக ஆளும் மத்திய அரசு சார்பில் பயிர் வளர்ச்சி, பயிர் காப்பீடு, உணவு பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட 32 வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், ஒன்றுதான் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம். இத்திட்டத்தில், இந்தியா முழுவதும் 19 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே இதுவரை 45 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஏழை விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள இத்திட்டத்தில் இ-சேவை மையம் மற்றும் கணினி மையங்களின் உதவியோடு தமிழகத்தில் விஞ்ஞான ஊழல்கள் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது."

"இத்திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் கிசான் திட்டத்தில் பயன்பெற்றவர்களின் பட்டியலை வைத்து நேரடியாக களஆய்வு செய்ய உள்ளோம். இந்த திட்டம் மட்டுமின்றி, விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட பல்வேறு மாணிய திட்டங்களிலும், வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் திட்டங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளது. அரசு திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சில ஒன்றியங்களில் முற்றிலுமாக அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் அனைத்தையும் கள ஆய்வு செய்து, உரிய ஆவணங்களுடன் வெளியிடுவோம்" என தெரிவிக்கிறார் பாஜக வைச்சேர்ந்த நாகராஜன்.
மத்திய அரசின் விவசாய நிதி உதவித்திட்டத்தில் தமிழகத்தில் நடந்த மோசடிகளை கண்டித்து பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் மனு அளிக்கும் போராட்டம் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக செயலாளர் தினகரன் ஆகியோரும் தமிழகத்தில் நடைபெற்றுள்ள விவசாய நிதி முறைகேடுகளை கண்டித்துள்ளனர்.
வெளிப்படைத்தன்மை அவசியம்
மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை அமல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இருந்தால் தான் முறைகேடுகள் குறையும் என்கிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன்.
"விவசாய நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள இ-சேவை ஊழியர்களையும், தனியார் கணினி மைய உரிமையாளர்களையும், அரசு அலுவலர்களையும் மட்டும் விசாரணை செய்து, தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல. இதில் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்"
"விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் அனைத்திலும் நிலம் சார்ந்த ஆவணங்கள் முக்கிய சான்றாக கேட்கப்படுகிறது. இதில் மோசடி செய்துதான் போலியான பெயர்களில் விண்ணப்பங்கள் தயாராகின்றன. எனவே, நில ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் கணினிமயமாக மாற்றிட வேண்டும். நிலம் குறித்த தகவல்கள் டிஜிட்டலாக இருந்தபோதும் அதை அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்வதில்லை. எனவே, அரசு திட்டங்களில் பயனாளிகளை இணைக்கும் போது உயர்மட்ட அரசு அதிகாரிகளின் கண்கானிப்பும் அவசியமாகிறது."
"தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பிரிவு 4ன் கீழ், அரசு திட்ட பயனாளிகளின் முழு விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். அந்த பட்டியலை பார்க்கும் பொதுமக்களுக்கு தெரியும் அதில் உள்ளவர்கள் தகுதியானவர்களா அல்லது தகுதியற்றவர்களா என்று. இதனால், முறைகேடுகள் செய்து பட்டியலில் இணைந்திருந்தாலும் மற்றவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த வெளிப்படைத்தன்மை தான் அரசு திட்டங்களை அமல்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதுபோன்ற வெளிப்படைத்தன்மையான அரசின் செயல்பாடுகள் தான் மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும்" என்கிறார் இவர்.
திட்டத்தில் பயன்பெற முடியாதவர்கள்

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விண்ணப்பிக்க விவசாயிகளின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், பூமிக்குரிய பட்டா எண், குடும்ப அட்டை எண் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள் என மத்திய அரசு முக்கிய வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி, நிறுவனங்களிடம் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள், விவசாய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவருக்கு மேற்பட்டோர், முன்னாள் மற்றும் இந்நாள் அரசியலமைப்பு பதவி வகித்தவர்கள், வகிப்பவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மத்திய மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இணைந்த அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிவோர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் மற்றும் கட்டடக்கலை நிபுணர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழில் துறை அமைப்புகளில் பதிவு செய்து துறை தொடர்பான தொழில்களை மேற்கொண்டு இருப்பவர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயனடைய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- பப்ஜி தடை எதிரொலி: - தென் கொரிய நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - இனி என்ன நடக்கும்?
- 'சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறை பொய் வழக்கு' - சிபிஐ
- கட்டுக்கடங்காத கொரோனா: 10 லட்சம் இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்கும் மெக்சிகோ
- தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து 'கோவிஷீல்ட்' சோதனை எப்படி நடக்கும்?
- 'சீன ராணுவம் தூண்டி விட்டது' - எல்லை துப்பாக்கி சூடு குறித்து இந்தியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












