கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கோவிஷீல்ட்: தமிழ்நாட்டில் சோதனை எப்படி நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள 'கோவிஷீல்ட்' எனும் கோவிட் - 19 தடுப்பு மருந்தை சென்னையிலுள்ள இரண்டு மருத்துவமனைகள் மனிதர்கள் மீது சோதிக்கவுள்ளன. சோதனையின் முடிவுகள் எப்போது தெரியும்?
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் கொரோனா வைரசிற்கான எதிர்ப்பு மருந்தை உருவாக்கியிருக்கிறது. அந்த தடுப்பு மருந்து பல நாடுகளுக்கும் அனுப்பி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் அந்த தடுப்பு மருந்தைத் தயாரிக்க மகராஷ்டிரா மாநிலம் புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்டும் பிரிட்டன்-ஸ்வீடன் மருந்தக நிறுவனமான அஸ்ட்ராஸென்காவும் உடன்பாடு செய்துள்ளன. இந்த தடுப்பு மருந்துக்கு வலுவான நோய் எதிர்ப்புத்திறன் இருப்பதாக லேன்செட் மருத்துவ ஆய்விதழிலும் கூறப்பட்டுள்ளது.
இதன் முதலாவது கட்ட பரிசோதனையில் சாதகமான முடிவுகள் கிடைத்த நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகளை இந்தியாவி்ல் நடத்த இந்திய தலைமை மருத்து கட்டுப்பாட்டாளர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுமதி அளித்தார்.
இந்தத் தடுப்பூசியை சோதனை செய்ய சென்னையில் உள்ள அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையும் போரூர் ராமச்சந்திரா மருத்துவனையும் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் இதன் முதன்மை ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த ஆய்வு எப்படி நடக்கும்?
முதற்கட்டமாக 300 மருந்துக் குப்பிகளை வைத்து இந்த சோதனை நடத்தப்படும். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 150 மருந்துக் குப்பிகளும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 150 மருந்துக் குப்பிகளும் இந்த சோதனையில் பயன்படுத்தப்படும்.

பட மூலாதாரம், Getty Images
சுமார் 200 பேரிடம் இந்த சோதனை நடத்தப்படலாம். சிலருக்கு நிஜமான தடுப்பு மருந்தும் சிலருக்கு தடுப்பு மருந்தைப் போன்ற திரவமும் ஏற்றப்படும். மருந்தை ஏற்றிக்கொள்ள முன்வந்த தன்னார்வலர் மற்றும் மருந்தை ஏற்றுபவர் ஆகிய இருவருக்குமே தெரியாத முறையில் அதாவது "randomised double blind" என்ற முறையில் செய்யப்பட்டும்.
முதல் முறை மருந்து ஏற்றிய பிறகு 29வது நாளில் இரண்டாவது முறை மருந்து அளிக்கப்படும். "ராஜீவ் காந்தி மருத்துவமனையைப் பொறுத்தவரை, இந்த மருந்துக்கு பக்கவிளைவுகள் இருக்கிறதா, தீவிர எதிர்விளைவுகள் இருக்கிறதா என்ற அம்சத்தைச் சோதனை செய்வோம். மருந்து தடுப்பு சக்தியை உருவாக்குகிறதா என்பதை ராமச்சந்திரா மருத்துவமனையில் செய்யும் சோதனையில் பதிவுசெய்வார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இந்த சோதனைகள் நடக்கும்" என்கிறார் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரணிராஜன்.


இந்த சோதனைக்கான தன்னார்வலர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக, கோவிட் - 19 நோயால் தாக்கப்படாதவர்களாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் பல்வேறு மருத்துவ மனைகளில் 1600 பேர் இந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
"இந்த முடிவுகள் எல்லாம் பிறகு ஒருங்கிணைக்கப்படும். ஆக இந்த சோதனை முடிந்து தடுப்பு மருந்தின் திறன் தெரிய 2021 ஜூன் மாதமாகிவிடும்" என்கிறார் தேரணிராஜன்.
ஏற்கனவே, பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவாக்ஸின் என்ற தடுப்பு மருந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டுவருகிறது.
பிற செய்திகள்:
- 'இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்; பதில் நடவடிக்கை எடுத்தோம்' - சீன ராணுவம்
- வீட்டிலிருந்து வேலை: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் கூறுவதும், ட்விட்டர் நிறுவனத்தின் முடிவும்
- கொரோனாவில் இந்தியா 2ஆம் இடம்: Go Corona Go முதல் PMCares வரை - கடந்து வந்த பாதை
- அரியர் தேர்வுக்கு விதிமுறைகளின்படி விலக்கு அளிக்கப்பட்டதா? என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












