கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது இந்தியா வரும்? மற்ற நாடுகளில் எவ்வளவு விலை?

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?

பட மூலாதாரம், Pedro Vilela / Getty

    • எழுதியவர், மானஸி தாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது 2.7 கோடியை நெருங்கி வருகிறது. அந்த வைரஸின் உயிரிழப்பு எண்ணிக்கை, 8.75 லட்சத்தை கடந்துள்ளது.

ஆனால், வைரஸ் பரவல் முதல் முறையாக கண்டறியப்பட்டதாக கருதப்படும் நாள் முதல் இப்போதுவரை வைரஸ் எதிர்ப்பு மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டறியப்படவில்லை. அவை தொடர்பான ஆராய்ச்சிகள் அனைத்தும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, முதல் முறையாக ஸ்பூட்னிக்-V என்ற பெயரில் கோவிட்-19 வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. மருத்துவ அறிவியல் துறையில் மிகப்பெரிய வெற்றியை எட்டியதாக அப்போது அந்நாடு கூறியது.

ஆனால், பரிசோதனை நிலையிலான மூன்றாவது கட்ட ஆய்வை அந்த தடுப்பூசி கடக்கவில்லை என்பதால் அந்த தடுப்பு மருந்தை வெற்றிகரமானதாக கருத முடியாது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே, உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பதற்கான முன்னேற்பாடுகளை உலக சுகாதார அமைப்பு செய்து வருகிறது. அந்த அமைப்பைப் பொருத்தவரை, பரிசோதனை நிலையிலான 34 நிறுவனங்களின் ஆராய்ச்சி, தற்போது மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. அதேவேளை, மூன்று நிறுவனங்கள் மட்டும் இரண்டாவது கட்ட பரிசோதனை நிலையை எட்டியுள்ளன.இதேபோல, 142 நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பரிசோதனைக்கு முந்தைய நிலையை எட்டியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறுகையில், ஆகஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியுடன் இணைந்துள்ள அஸ்ட்ராஸெனெக்கா நிறுவனம், மிகவும் மேம்பட்ட தடுப்பு மருந்தை இதுவரை இல்லாத வகையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவி்த்தார்.பிபிசியின் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் ஜேம்ஸ் கல்லாஹெர், 2021ஆம் ஆண்டு மத்தியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கலாம் என நிபுணர்கள் கூறுவதாக தெரிவிக்கிறார்.

எனினும், கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வகை திரிபுகள் மனிதர்களுக்குள் ஏற்கெனவே நிலவுவதாகவும், அதில் இருந்து தற்காத்துக் கொள்ள எந்ததடுப்பு மருந்தும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றும் பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் கூறுகிறார்.இந்த தகவல்களுக்கு மத்தியில், அடுத்த சில மாதங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதன் விலை எவ்வளவு என்பது குறித்த கவலைகள் தங்களுக்கு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், கொரோனா வைரஸிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள எத்தகைய கால அளவில் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் தெளிவாகவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

கொரோனா வைரஸ் தடுப்பூசி விலை எவ்வளவு?

அஸ்ட்ராஸெனேக்கா தடுப்பூசி (பிரிட்டன்)

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆதரவுடன் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி, அஸ்ட்ராஸெனேக்கா என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. குறைந்த விலையில் அந்த தடுப்பூசி விற்கப்படுவதாக இருந்தாலும், அதில் ஓரளவு லாபத்தை வைத்தே அந்த நிறுவனம் விற்பனையை செய்யும்.

கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி, மெக்ஸிகோவில் பேசும்போது, லத்தீன் அமெரிக்காவில் தடுப்பூசி விலை ஒரு டோஸ் அளவுக்கு நான்கு டாலர்களுக்கு குறைவாக இருக்கும் என்றார்.

சீரம் தடுப்பூசி (இந்தியா)

இந்தியாவின் புணேவில் உள்ள சீரம் நிறுவனம், மிகப்பெரிய அளவில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனம், இந்தியா மற்றும் வளர்ந்த நாடுகளில் வைரஸ் தடுப்பூசி விலையை சுமார் மூன்று டாலர்கள், அதாவது சுமார் 220 ரூபாய் அளவுக்கு விற்க உத்தேசித்துள்ளது.

கொரோனா அறிகுறிகள்

இதேவேளை, இத்தாலி சுகாதார அமைச்சகம், ஐரோப்பாவில் வைரஸ் தடுப்பூசி விலை 2.5 யூரோக்களுக்கு விற்பனையாகலம் என மதிப்பிட்டுள்ளது.

அஸ்ட்ராஸெனெக்கா நிறுவனத்துடன் அதன் வைரஸ் தடுப்பு மருந்தை வாங்க ஆஸ்திரேலியா கடந்த மாதம் ஒப்பந்தம் செய்தது.

அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், தமது நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆனாலும், அந்த வைரஸ் தடுப்பூசிக்கு அரசு எவ்வளவு தொகையை வழங்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சனோஃபி தடுப்பூசி (பிரான்ஸ்)

பிரான்ஸில் இருந்து செயல்பட்டு வரும் சனோஃபி நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒலிவியர் போகிலோட், தமது நிறுவன வைரஸ் தடுப்பு மருந்து ஒரு டோஸ் விலை 10 இயோரோக்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 900) குறைவாக இருக்கும் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: